காந்திய பற்றாளரும், சுதந்திர போராட்ட வீரருமான நரேன் தனது மகன் விக்ரமை சிறந்த காந்தியவாதியாக வளர்க்கிறார். அப்பா சொல்வதை போல் வளர்ந்து விட்ட விக்ரமுக்கு தன்னுடைய இஷ்டம் போல் வாழ்வதற்கு ஆசைபடுகிறார். ஒரு நாளில் அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கிறது. அப்போது நடக்கும் ஒரு நிகழ்வு விக்ரமின் வாழ்க்கையை திசை மாற்றுகிறது. அது என்ன என்பதே மகான் படத்தின் கதை.
நீண்ட நாட்கள் கழித்து வரும் விக்ரம், அவரது ரசிகர்களுக்கு பல கெட்டப்புகளில் வந்து விருந்து படைக்கிறார். ஆசிரியராகவும், சாராய அதிபராகவும் வரும் காட்சிகளிலெல்லாம் திரையரங்கை அதிரவைக்கிறது, அவரது நடிப்பு. பல காட்சிகளில் வாவ்! ஸ்டைல்! ஹாலிவுட் ஹீரோக்களின் சாயல்.
விக்ரம் இப்படி என்றால் துருவ் விக்ரம் ‘அதுக்கும் மேலே’ படத்திலும் விக்ரம் மகனாக நடித்திருக்கிறார். இவர் நடித்த பல காட்சிகளில் கைதட்டி ரசிக்க வைக்கிறது. நடிகர்களுக்கு மிகவும் தேவையான வசன உச்சரிப்பில் தனிக்கவனம் ஈர்க்கிறார். அவரது தனித்த வசீகர இளமை பெண் ரசிகர்களை அதிகம் பெற்றுத்தரும். தமிழ்ச்சினிமாவின் தவிர்க்க இயலாத ஹீரோ. முதல் படம் வர்மா கை விட்ட நிலையில் மகான் கை கொடுத்துள்ளது.
விக்ரமின் நண்பராக நடித்திருக்கும் வரும் பாபி சிம்ஹா, பல இடங்களில் கவனம் ஈர்க்கிறார். விக்ரமின் மனைவியாக நடித்திருக்கும் சிம்ரன், அவரது தந்தையாக நடித்திருக்கும் கஜராஜ் மற்றும் சனத், தீபக் பரமேஸ்வர் என ஒவ்வொருவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
குறிப்பாக முக்கியமான வில்லன் வேடத்தில் நடித்திருக்கும் முத்துக்குமாரின் அசட்டுத்தனமான வில்லத்தனம் தனி கவனம் பெறுகிறது.
1960 ளில் தொடங்கி கதைக்களத்தின் பல்வேறு காலகட்டங்களை ஆர்ட் டைரக்டர், கேமிராமேன், காஸ்ட்யூமர் ஆகியோர் சிறப்பாக கண்முன் கொண்டு வந்து இருக்கின்றனர். சந்தோஷ் நாராயணின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
படத்தின் நீளம் மட்டுமே அதிகம். காந்தியத்தை வேறு கோணத்தில் சொல்லி கமர்ஷியல் ரசிகர்களை திருப்தி படுத்தி இருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.
விக்ரமின் அதிரடி ஆட்டம் மூலம் முதல் பாதி படத்தை பரபரப்பாக நகர்த்தி செல்ல, இரண்டாம் பாதியில் துருவ் விக்ரமின் ஆட்டம் அமர்க்களப்படுத்துகிறது. கிளைமாக்ஸ் டிவிஸ்ட், எதிர்பாராத டிவிஸ்ட்!
‘மகான்’ விக்ரம், துருவ் விக்ரம் இருவரின் பக்கா மாஸ் மசாலா என்டெர்டெயினர்.
விக்ரம் ரசிகர்களுக்கு டபுள் டிலைட்!