‘கடைசி விவசாயி’ : திரைப்பட விமர்சனம்!

தமிழ்த்திரையுலகில் வித்தியாசமான திரைப்படங்களாக இயக்கிவரும் மணிகண்டன் இயக்கத்தில் தற்போது வெளிவந்துள்ள திரைப்படம், ‘கடைசி விவசாயி’. விவசாயம் குறித்து பல படங்கள் வெளிவந்திருக்கும் நிலையில், ‘கடைசி விவசாயி’ இறுதி எச்சரிக்கையாக பல விஷயங்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் சொல்லி இருக்கிறது. அப்படி என்ன சொல்லி இருக்கிறது, பார்க்கலாம்.

ஆதிகால தமிழர்களின் தற்சார்பு வாழ்க்கையினை வாழ்ந்து வருபவர் மாயாண்டி என்ற முதியவர். அவர் வசிக்கும் கிராமம் நவீனத்தினால் அதன் இயற்கை செழிப்பு மெல்ல மெல்ல அழிந்துவரும் நிலையில், இவர் மட்டும் பாரம்பரிய விவசாயம் மூலமாக பிழைப்பை நடத்தி வருகிறார். அவர் வசிக்கும் சுற்றுவட்டாரத்தில் தண்ணீர் இல்லாவிட்டாலும் இவரது நிலத்தில் மட்டும் தண்ணீர் கிடைத்து வருகிறது.

மாயாண்டி முதியவரின் கிராமத்தில் நிலவிவரும் வறட்சியை கருத்தில் கொண்டு, ஊர் மக்கள் அனைவரும் ஒன்றுகூடி கோவில் திருவிழாவினை நடத்த முன் வருகின்றனர். அதன் காரணமாக  சாமிக்கு படையல் போடுவதற்கு புது நெல்லினை மாயாண்டி முதியவரிடம் கேட்க, அவரும் தனது வயலில் நெல் விதைக்கிறார். அப்போது ‘மயில்’ பறவையினை கொன்றதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டு சிறைக்கு செல்கிறார். சிறைக்கு சென்றவர் என்ன ஆனார்? படையலிட நெல்லினை கொடுத்தாரா? இல்லையா? என்பது தான் ‘கடைசி விவசாயி’ படத்தின் கதை, திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!

கவிஞர் வாலி எழுதி, டி.எம்.சௌந்தராஜன் பாடிய ‘கற்பனை என்றாலும்.. கற்சிலை என்றாலும்.. கந்தனே உன்னை மறவேன்’ பாடலுடன் தொடங்கும் திரைப்படத்தில் பல காட்சிகள் படம் பார்ப்பவர்களின் அவரவர் பார்வைக்கு ஏற்ற படி அமைக்கப்பட்டுள்ளது. முக்கியமாக விஜய்சேதுபதியின் கதாபாத்திரம். சாலை வழியாக பயணிக்க முடிந்தாலும் காட்டு வழியாக அவர் பயணிப்பது ‘கடைசி’ விவசாயத்தை பற்றிய முக்கிய குறியீடு! ( சேலம் – சென்னை எட்டு வழிச்சாலையை கற்பனை செய்து கொள்ளலாம்.) இப்படி பல காட்சிகள் சற்று உற்று நோக்கினால் புரிந்து கொள்ளலாம். அதுபோல் ‘விதை’யில்லா தக்காளி விவசாயமும் பல எச்சரிக்கைகளை விடுக்கிறது.

நயவஞ்சக ரியல் எஸ்டேட்காரர்களின் ஆசை வார்த்தைகளினால் நிலத்தை விற்று ‘யானை’ துணையுடன் வலம் வரும் யோகிபாபுவின் கதாபாத்திரமும் கவனம் ஈர்க்கிறது.

நல்லாண்டி பெரியவர் ‘மாயாண்டி’ கதாபாத்திரத்தின் மூலம் பாரம்பரிய விவசாயிகளுக்கு பெருமை சேர்த்துள்ளார். நிலத்தை விற்று விட்டு அந்த பணத்தை ‘தலைக்கு வைத்து படுக்கவா’ என அவர் கேட்கும் இடம், இனி நிலம் விற்பவர்களை சற்றே யோசிக்க வைக்கும்.

‘வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்..! ‘ என்று கூறிய வள்ளலார் அவர்களின் மறு உருவமாக ‘மாயண்டி’ கதாபாத்திரத்திற்கு சிறப்பு சேர்த்து இருக்கிறார், நல்லாண்டி பெரியவர். கோர்ட்டில் நடக்கும் காட்சியின் போது இடம் பெறும் வசனங்கள் அதற்கு சாட்சி.

சந்தோஷ் நாராயணன் – ரிச்சர்ட் ஹார்வி இருவரின் இசை கூட்டணி பல காட்சிகளுக்கு உயிரூட்டி இருக்கிறது.

பரந்து விரிந்து கிடக்கும் இயற்கை அழகினை திரைக்குள் கொண்டுவந்து இருக்கிறது எழுதி, இயக்கியிருக்கும் மணிகண்டனின் ஒளிப்பதிவு. தியேட்டருக்காகவே உருவாக்கப்பட்ட காட்சியமைப்புகள் ரசிக்க வைக்கிறது. டைட்டில் காட்சியிலிருந்து க்ளைமாக்ஸ் வரை ஒளிப்பதிவு பிரமாண்டம்.

படத்தின் மிகப்பெரிய பலம் சிறப்பான கதாபாத்திர தேர்வு. படத்தில் நடித்த ரெய்ச்சல் ரெபேகா, முனீஸ்வரன், காளிமுத்து உள்ளிட்ட  அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

கிராம மக்களின் வாழ்வியலை அவர்களின் கிராமத்திற்கே சென்று ரசித்த உணர்வினை ஏற்படுத்தி சில விழிப்புணர்வினையும் ஏற்படுத்துகிறது. கடைசி விவசாயி.

ஒவ்வொரு கிராமத்திலும் மாயாண்டியை போல் கடைசி விவசாயம் செய்துவரும் அனைவருக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

‘கடைசி விவசாயி’ உலக மக்களுக்கான இறுதி எச்சரிக்கை!?