சமகால இளைஞர்களின் மோக மனநிலையையும், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் மையமாகக் கொண்டு வெளியாகியுள்ள வெப் சீரிஸ் தான் ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’. கிராமத்து பின்னணியில் தொடங்கி சென்னை மாநகரத்தின் பரபரப்பான சூழல் வரை பயணிக்கும் இந்தத் தொடர், வெறும் விளையாட்டுத் தொடராக மட்டும் இல்லாமல், சமூகத்திற்குத் தேவையான ஒரு முக்கிய எச்சரிக்கையையும் விவாதிக்கிறது.
கிராமத்துச் சூழலில் வளரும் நான்கு கல்லூரி நண்பர்களுக்கு கிரிக்கெட் தான் எல்லாமே. தங்களுக்குப் பிடித்த கிரிக்கெட் நட்சத்திரத்தின் கடைசிப் போட்டியை நேரில் பார்க்க வேண்டும் என்பது அவர்களின் வாழ்நாள் லட்சியம். ஆனால், சென்னைக்குச் சென்று போட்டியை காண்பதற்கான பண வசதி அவர்களிடம் இல்லை. தங்களின் லட்சியத்தை அடைய அவசரப் பணம் தேவைப்படும் சூழலில், அவர்கள் ‘குறுக்கு வழி’ ஒன்றினை தேர்ந்தெடுக்கின்றனர். அது என்ன? அதன் பின் விளைவுகள் என்ன? என்பதுதான் இந்த 6 எபிசோடுகள் கொண்ட தொடரின் முக்கியக் கதை.
அதிர்ச்சியூட்டும் கிரிக்கெட் பந்தய உலகம் குறித்த உண்மைக்கு நெருக்கமான காட்சிகள், இந்தத் தொடரின் இரண்டாம் பாதியில் வருகிறது. பணப் பந்தயம் (Betting) மற்றும் சூதாட்டம் குறித்த காட்சிகள் பார்ப்பவர்களை உறைந்து போகச் செய்கின்றன. கிரிக்கெட் மைதானத்தில் வீசப்படும் ஒவ்வொரு பந்துக்கும், ஒவ்வொரு ஓவருக்கும் பின்னணியில் எப்படிப் பந்தயம் கட்டப்படுகிறது என்பதைத் திரைக்கதை மிக நுணுக்கமாக விவரிக்கிறது. “சில நிமிடங்களில் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்” என்ற மாயை இளைஞர்களை எப்படி ஈர்க்கிறது என்பதைப் பார்க்கும் போது நமக்கே அந்தப் பதற்றம் தொற்றிக் கொள்கிறது. தங்களின் உழைப்பையும், எதிர்காலத்தையும் எப்படிச் சில நிமிடங்களில் இழக்க முடியும் என்பதைத் திரையில் பார்க்கும்போது பெரும் அதிர்ச்சி ஏற்படுகிறது. இது ஏதோ கற்பனைக் கதை அல்ல, இன்று நிஜ வாழ்க்கையில் நடக்கும் எதார்த்தம் என்பதை இயக்குநர் மிக நெருக்கமாகக் காட்டியுள்ளார்.
பந்தயத்தில் பணம் கிடைக்காமல் இளைஞர்கள் படும் மன உளைச்சல், அவர்களைச் சுற்றியுள்ள மாஃபியாக்களின் மிரட்டல்கள், வன்முறைகள் ஆகியவை மிகத் தீவிரமாகப் படமாக்கப்பட்டுள்ளன. “இதற்குள் நுழைவது எளிது, ஆனால் வெளியேறுவது சாத்தியமில்லை” என்ற எதார்த்தம் இளைஞர்களுக்குப் பயத்தை ஊட்டக் கூடியது.
முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள வைபவ் முருகேசன், லாவண்யா அன்பழகன், வெங்கட் பாலமுரளி , ஜெகபர் சாதிக் ஆகியோர், கிராமத்து நட்பு மற்றும் சென்னை மாநகரப் பதற்றத்தை மிக எதார்த்தமாகத் தங்களின் நடிப்பில் கொண்டு வந்துள்ளனர். குறிப்பாக டிக்கெட் வாங்க வைத்திருக்கும் பணத்தை பிடுங்கும் கும்பலுடன் நடக்கும் சண்டைக்காட்சியை குறிப்பிடலாம்.
இசை அமைத்திருக்கிறார் பரத். கிரிக்கெட் போட்டியின் விறுவிறுப்பையும், சூதாட்டக் காட்சிகளின் போது ஏற்படும் பயத்தையும் பின்னணி இசை நன்றாகத் தாங்கிப் பிடிக்கிறது. பொழுதுபோக்கைத் தாண்டி, இன்றைய தலைமுறைக்குத் தேவையான ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்திய விதம் பாராட்டத்தக்கது.
சில இடங்களில் அடுத்தடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை எளிதாகக் கணித்துவிட முடிகிறது. இடைப்பகுதியில் சில காட்சிகள் கதையின் வேகத்தைச் சற்றே குறைக்கின்றன.
கிரிக்கெட் விளையாட்டு மற்றும் வீரர் மீதான ஆர்வம் என்பது வேறு. அதை வெறும் விளையாட்டாக பார்க்க வேண்டுமே தவிர, அதன் வெறித்தனமான பின்பற்றுதல் கூடாது. என்பதை நியாயம் சேர்க்கும் வகையில் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் சவிர் சுதாகர்.