மாஸ்டர் விமர்சனம்! – (விளம்பரம் அல்ல)
கல்லூரி பேராசிரியராக இருக்கும் விஜய், கல்லூரியில் நடக்கும் ஒரு பிரச்சனை காரணமாக சிறுவர் சீர்த்திருத்த பள்ளிக்கு ஆசிரியராக செல்கிறார். அப்பள்ளியில் நடக்கும் அசாதாரண சூழ்நிலை அவரை அதிர்ச்சி அடைய செய்கிறது. அதன் பின்னணியில் இருப்பவர்களை கண்டுபிடித்து சிறுவர்களை மீட்டு நல்வழிபடுத்துவதே மாஸ்டர் படத்தின் முழுக்கதை
கிளாஸ் அண்ட் மாஸ் ஹீரோவான விஜய் அவருடைய கதாப்பாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துகிறார். வழக்கமான ‘பஞ்ச்’ டயலாக் , தொடை தட்டி வில்லனுக்கு சவால் விட்டு அடியாட்களை பறக்கவிடுவது போன்ற இத்யாதிகளை அடக்கி வாசித்து நடித்திருக்கிறார். ஆனால் அவரது ஸ்டைலிஷ், யங் லுக் வாவ்….
விஜய், 24*7 போதையில் இருப்பவராக முதல் பாதி முழுவதும் அசால்ட்டாக நடித்திருக்கிறார். சற்றே வித்தியாசமான விஜய், ரசிகர்களின் மனதை கவர்கிறார். குடிப்பதற்காக விஜய் சொல்லும் காரணம் ‘2021’ ன் மிகப்பெரிய நகைச்சுவை!
பக்காவான மாஸ் வில்லனாக நடித்திருக்கிறார், விஜய் சேதுபதி. அவர் நடித்திருக்கும் ஒவ்வொரு காட்சியிலும் அதகளம் செய்துள்ளார். அவருடைய கதாபாத்திரத்தை வெகு சுலபமாக அவருக்கே உரித்தான ஸ்டைலில் கலக்கடித்துள்ளார். டயலாக் டெலிவரி சூப்பர்!
விஜய்சேதுபதி, விஜய்யுடன் நடித்துள்ள காட்சிகளில் விஜய்யை டாமினேட் செய்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் மாளவிகா மோகனனுக்கு விஜய்யை கட்டிபிடித்து காதல் பாட்டுபாட பாடலும் இல்லை. காதல் வசனம் பேச காட்சிகளும் இல்லை. அவரது கதாப்பாத்திரத்தையே தூக்கியிருந்தாலும் படத்துக்கு எந்த கேடும் இல்லை.
நாசர், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், ஸ்ரீமன், சாந்தனு பாக்யராஜ், கெளரி கிஷன் என படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இருந்தாலும், அனைவருமே செட் ப்ராப்பர்ட்டி ஆகவே வந்து போகிறார்கள்.
அர்ஜுன் தாஸுக்கு மட்டுமே முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது.
மாநகரம், கைதி படங்களின் மூலம் சிறந்த திரைக் கதையாசிரியராகவும், இயக்குநராகவும் அறியப்பட்டவர் லோகேஷ் கனகராஜ். அவருடன், ரத்னகுமார், பொன் பார்த்திபன் என, மூன்று பேர் திரைக்கதை எழுதியும் இந்தப்படத்தில் திரைக்கதை சொதப்பலோ சொதப்பல். ரசிகர்களிடம் பெரும் செல்வாக்கு பெற்ற இரண்டு பெரிய நடிகர்களை வைத்துக்கொண்டு நம்மை சலிப்படைய செய்திருக்கிறார்கள்.
பாடல்கள், பின்னணி இசை என இரண்டுக்குமே அனிருத் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. “வாத்தி கம்மிங்…” என்ற ஒற்றை பாடலை வைத்துக்கொண்டு ஒப்பேற்றியிருக்கிறார்.
மொத்தப்படத்திற்கும் ஆறுதல் சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சொன்னதை செய்துள்ளார், படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ். படத்தின் மிகப்பெரிய குறை அதன் நீளம் தான். குறைக்க வாய்ப்பு இருந்தும் (அக்கறை) விட்டுள்ளனர்!?
இப்படி பல குறைகளையும் தாண்டி படத்தை விஜய் மற்றும் விஜய் சேதுபதிக்காக பார்க்கலாம்!!!
இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு இனிமேல் இதுபோல் ஒருவாய்ப்பு கிடைப்பது மிக அரிது!!!!