கல்லூரி விடுதி சம்பவங்களை படமாக்கும் பாலாவின் சிஷ்யர்

PFS ஃபினாகில் பிலிம் ஸ்டுடியோ என்ற பட நிறுவனம் சார்பில் K.அசோக்குமார் P.ராமன், G.சந்திரசேகரன், M .P. கார்த்திக் ஆகிய நால்வரும் இணைந்து தயாரித்திருக்கும் படம் “ மயூரன் “.

இயக்குனர் பாலாவின் நந்தா, பிதாமகன் ஆகிய படங்களில் உதவியாளராக இருந்த நந்தன் சுப்பராயன் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியிருக்கிறார்.

மயூரன் படம் பற்றி இயக்குனர் நந்தன்சுப்பராயன் கூறியதாவது…

மயூரன் என்றால் விரைந்து உன்னை காக்க வருபவன், வெற்றி புனைபவன் என்று பொருள்.மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே நிர்பந்தங்களும் நெருக்கடிகளும் ஒவ்வொரு தனி மனித வாழ்க்கையின் தவிர்க்க முடியாத அங்கமாகத்தான் இருக்கிறது. நிர்பந்தங்கள் இல்லாதவர்கள் அதிர்ஷ்டசாலிகள் நிர்பந்தத்திற்கு பணி யாதவர்கள் போராளிகள். இங்கு அதிர்ஷ்டசாலி களைவிட போராளிகளே அதிகம். நியாயத்தின் பக்கம் நிற்கும் யாவர்க்கும் அதிகாரம் படைத்தவர்களின் பரிசு எப்போதும் உயிர் பயம் காட்டுவது தான், அதற்கு நல்லவர்கள் கொடுக்கும் விலை தனிமை… யார் கண்ணிலும் படாத தலைமறைவு வாழ்க்கை… மற்றும் உனக்கு எதுக்கு வம்பு எனும் அறிவுரைகள் மட்டும்தான்.

சொல்லிக்கொடுக்கப்பட்ட மரபுகளிலிருந்து விலகி நிற்பவனை உலகம் வேறுவிதமாகத்தான் பார்க்கிறது. எதிரான எண்ணம் கொண்டவர்களிடம் குரோதமும், பகையும் வளர்க்கிறது. என் எண்ணம், என் விருப்பம் என்பதைத் தாண்டி, எது நியாயம் எது தர்மம் அது கொடுக்கும் அடுத்த வினாடி ஆச்சரியம் தான் வாழ்க்கை.

முடிந்தவரை நியாய உணர்வுகளை அலங்காரம் இன்றி சொல்லியிருக்கும் படம் தான் மயூரன். படம் ஆகஸ்ட் 2 ஆம் தேதி தயாரிப்பாளர் H.முரளி அவர்கள் Banner மூலமாக வெளியிட பட உள்ளது. என்றார் இயக்குனர் நந்தன் சுப்பராயன்.