‘மீண்டும்’ : விமர்சனம்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘மீண்டும்’ படத்தின் கதை, திரைக்கதை எழுதி, இயக்கி இருக்கிறார், சரவண சுப்பையா. ஒளிப்பதிவினை ஶ்ரீனிவாஸ் தேவாம்ஸம் செய்து இருக்கிறார். இசை அமைத்து இருக்கிறார், நரேன் பாலகுமார்.

இதில், கதிரவன், சரவண சுப்பையா, அனகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் ப்ரணவ் ராயன், எஸ்.எஸ்.ஸ்டேன்லி, சுப்ரமணியன் சிவா, யார் கண்ணன், கேபிள் சங்கர், ‘களவாணி’ துரை சுதாகர், சுபா பாண்டியன், இந்துமதி மணிகண்டன், மோனிஷா, அனுராதா நாகராஜன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒரு பெண்ணிற்கும் அவரது இரண்டு கணவர்களுக்கும் இடையே ஒரு குழந்தைக்காக நடக்கும் உணர்வுகளின் பாசப் போராட்டமே ‘மீண்டும்’ படத்தின் கதைக்கரு.  இந்த கதைக்காக இயக்குநர் கே.பாலசந்தர் இருந்திருந்தால் சரவண சுப்பையாவை கட்டிப்பிடித்து பாராட்டி இருப்பார்!

கதிரவன், சரவண சுப்பையா, அனகா ஆகிய மூவரும் தங்களது கதாபாத்திரத்தினை உணர்ந்து நடித்து இருக்கிறார்கள். அனகாவிற்கு அழுத்தமான கதாபாத்திரம். அதனை உணர்ந்து பாசத்திற்காக ஏங்கும் அம்மாவை கண்முன் நிறுத்துகிறார். குழந்தைக்காக இரண்டு கணவர்களுக்குமிடையே அவர் படும் போராட்டத்தினை முக பாவனையில் சிறப்பாக காட்டி இருக்கிறார். அதை போலவே காதல் காட்சிகளில் கண்களில் காதல் வலை வீசி மனம் கவர்கிறார்.

இரண்டு ஆண்களுக்கு நடுவே ஒரு பெண்ணிற்கு எந்த இழுக்கும் ஏற்படாமல்  இயக்குநர் சரவண சுப்பையா திரைக்கதையை வடிவமைத்த விதம் சூப்பர். இதையே க்ளைமாக்ஸ் வரை கொண்டு சென்றிருந்தால் சிறப்பாக இருந்து இருக்கும். அதை விடுத்து வலுக்கட்டாயமாக கருப்பு பணம், செயற்கை சுனாமி என திரைக்கதையை வேறு ஒரு கோணத்தில் கொண்டு செல்வது சோர்வைத் தருகிறது. அதை சரியாக செய்திருந்தால் கூட பரவாயில்லை! அதையும் சிறு பிள்ளை தனமாக செய்து இருக்கிறார்கள். சிறுவர்கள் விளையாடும் ‘கள்ளன் போலீஸ்’ என்னும் விளையாட்டே பரவாயில்லை! என தோன்றுகிறது.

இன்னொரு நாட்டின் சிறையிலிருந்து இந்திய ‘உளவாளி’ கதிரும் அவரது சகாக்களும் தப்பிக்கும் காட்சியும், இந்தியன் எம்பஸி அருகே நடக்கும் துப்பாக்கி சண்டைக் காட்சியும் சிரிப்பினை வரவழைக்கிறது. படத்தில் பாதிக்கு மேல் இடம் பெறும் மலையாள வசனங்கள் புரியவில்லை!

நடிகராக சரவண சுப்பையா நன்றாக நடித்து இருக்கிறார். இயக்குநராக ஏமாற்றி இருக்கிறார்.

அழகான ‘கவிதை’ எழுதிய காகிதத்தை கழுதையிடம் கொடுத்தால் அது என்ன செய்யும்!?

அது சிறப்பா செஞ்சுருச்சு!