‘சர்க்கரை தூக்கலா ஒரு புன்னகை’ : விமர்சனம்.

‘நபீஹா புரடக்‌ஷன்’ நிறுவனத்தின் சார்பில், நுபாயஸ் ரகுமான் தயாரித்துள்ள படம் ‘சர்க்கரை தூக்கலா ஒரு புன்னகை’. இயக்குநர் மகேஷ் பத்மநாபன் இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் கதாநாயகனாக ருத்ரா நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘கடுகு’  படத்தில் நடித்த சுபிக்‌ஷா நடித்துள்ளார்.  இவர்களுடன் ‘ராட்சசன்’ வினோத் சாகர், பீட்டர் ஹார்ட்லி, கணபதி, சுபலட்சுமி, சுனந்தா ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘சர்க்கரை தூக்கலா ஒரு புன்னகை’  படம் வரும் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஆனால் அதற்கு முன்னரே ‘செவன் கலர்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல்’ , ‘சில்வர் ஸ்கிரீன் இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல்’ , இண்டியன் மீராக்கி அவார்டு 2021, ஆர்ஐஎஃப்எஃப் உள்ளிட்ட திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பல விருதுகளை பெற்றுள்ளது. இதில் சிறந்த நடிகருக்கான 5 விருதுகள் படத்தின் நாயகன் ருத்ராவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இப்படி பல விருதுகளை குவித்துள்ள இந்தப்படம் எப்படி இருக்கிறது? பார்க்கலாம்.

எஃப் எம் சேனலில் வேலை செய்யும் சுபிக்‌ஷா, ‘நேஷனல் ஜியாகிரபிக்’ சேனல் நடத்தும் போட்டிக்காக ஒரு டாகுமெண்டரி படம் எடுக்க காட்டுக்குள் செல்கிறார். அவருக்கு துணையாக நேச்சர் சவுண்ட் எஃபெக்ட்ஸ் ரெக்கார்டிங் செய்வதில் வல்லுனர் ஆன, ருத்ரா அவருக்கு உதவி புரிகிறார். எதிர்பாரா வண்ணம் அவர்களுக்கு முதல் பரிசு கிடைக்கிறது. இதன் பிறகு காதலர்கள் ஆகும் இருவரும் நெருக்கமாவதுடன், ஒரே வீட்டில் வசித்தும் வருகிறார்கள்.

இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து வரும் ‘வயதான’ பீட்டர் ஹார்ட்லி என்பவர், பண்டிகையின் போது விழாக்களில் இசைக்கும் வாத்தியங்களின் இசையை ரெக்கார்ட் செய்வதற்காக வருகிறார். அதற்காக சுபிக்‌ஷாவுடன் இணைந்து செயல்படுகிறார்.  இதனால் சுபிக்‌ஷா அவருடன் நெருக்கமாக இருப்பதாக உணரும் ருத்ரா அவரிடம் இருந்து விலகிச் செல்கிறார். இதன் பிறகு என்ன நடந்தது. என்பது தான், ‘சர்க்கரை தூக்கலா ஒரு புன்னகை’ படத்தின் கதை.

ஒரு நல்ல சூப்பரான ‘மியுசிக்கல் லவ் ஸ்டோரி’ எடுக்கனும்னு ஆசை பட்டு இருக்கிறார், ‘சர்க்கரை தூக்கலா ஒரு புன்னகை’ படத்தின் தயாரிப்பாளர் நுபாயஸ் ரகுமான். ஆனால் அவர் நினைத்தது நடக்கவில்லை! ஏன் என்றால், படத்தின் இயக்குனர் அதற்கு எந்த விதத்திலும் முயற்சி செய்யவில்லை! இயக்குனரின் தலைமையில் முழுக்க முழுக்க ஆர்வக் கோளாறால் இந்தப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

போதிய அனுபவம் இல்லாத நடிகர்களால் கதாபாத்திரங்கள் அனைத்தும் வலுவில்லாமல் இருக்கிறது. பல கதாபாத்திரங்கள் திரைக்கதை நகர்வுக்கு எந்த விதத்திலும் உதவவில்லை. ருத்ரா, சுபிக்‌ஷா இருவரும் முடிந்த அளவு படத்திற்காக உழைத்துள்ளனர். இயக்குனர் இன்னும் சரியாக பயண்படுத்தி இருக்கலாம்.

வசனம் எழுதியவர் குறைந்தபட்ச அடிப்படை தகுதி கூட இல்லாதவராக இருக்கிறார். உதாரணமாக காட்டுக்குள் சுபிக்‌ஷா பேசும் காட்சி ஒன்றில் ‘காட்டுக்குள் இவ்வளவு மரங்களா’ என வசனம் வரும். இதை எப்படி எடுத்துக்கொள்வது?

இன்னொரு காட்சியில் ருத்ராவின் அப்பாவாக நடித்திருக்கும் ‘கணபதி’ ஒரு காட்சியில் குடித்தால் கவலைகள் தீரும் ‘குடி’ என வலியுறுத்துகிறார். இது எந்த ஊரு நியாயம்? இது மாதிரி பல காட்சிகள்.

நல்ல அழகான லொக்கேஷனை தேர்வு செய்ததுள்ளனர். அதை தங்களது கேமிராவினால் அழகாக படமாக்கிய பிஜு விஸ்வநாத், சிபி ஜோசப் இருவருக்கும் பாராட்டுக்கள். இசையமைப்பாளர் ராஜேஷ் அப்புக்குட்டன் பரவாயில்லை!

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார், மஹேஷ் பத்மநாபன். செலவு செய்ய நல்ல தயாரிப்பாளர் கிடைத்தும் அதை சரியாக பயண்படுத்தாமல் விட்டுள்ளார்!