இயக்குநர் ரத்ன குமார் இயக்கத்தில் வைபவ் மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘மேயாத மான்’. இப்படம் வெளியாகி ஏறத்தாழ பத்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இதன் இரண்டாம் பாகமான ‘மேயாத மான் 2’ குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கார்த்திகேயன் சந்தானத்தின் ஸ்டோன் பென்ச் நிறுவனத்துடன், இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் (G Squad) நிறுவனமும் கைகோர்த்து இப்படத்தைத் தயாரிக்கின்றன.
இந்தப் புதிய கூட்டணி குறித்துப் பேசிய இயக்குநர் ரத்ன குமார்,
‘மேயாத மான்’ வெளியாகி பத்து ஆண்டுகள் கடந்துவிட்ட சூழலில், இடையில் ‘ஆடை’, ‘குலுகுலு’, ’29’ ஆகிய படங்களை இயக்கியதோடு, லோகேஷ் கனகராஜுடன் இணைந்து ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘லியோ’ படங்களில் எழுத்தாளராகவும் பணியாற்றியதை நினைவுகூர்ந்தார். இருப்பினும், எங்கு சென்றாலும் ரசிகர்கள் ‘மேயாத மான்’ படத்தைப் பற்றியே சிலாகித்துப் பேசியதாகவும், எப்போது அதன் இரண்டாம் பாகத்தை எடுப்பீர்கள் எனக் கேட்டுக்கொண்டே இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். செய்ததையே மீண்டும் செய்ய விருப்பமில்லாமல் இருந்த தனக்கு, ’29’ திரைப்படம் வெளியான பிறகு ரசிகர்கள் பகிர்ந்த நிஜ வாழ்க்கை அனுபவங்களே ‘மேயாத மான் 2’ கதைக்கான ஆர்வத்தைத் தூண்டியதாகக் கூறினார்.
இப்படத்தின் பணிகளைத் தொடங்கியபோது, முதல் பாகத்தின் தொடர்ச்சியாகத் தெரியாமல் முற்றிலும் புதிய கதைக்களம் அமைந்ததாக ரத்ன குமார் குறிப்பிட்டார். முதல் பாகத்தைப் போலவே இதிலும் வைபவ் அதே உற்சாகமான பாணியிலும், பிரியா பவானி சங்கர் ‘மது’வாகவும், இந்துஜா ‘சுடர்’ கதாபாத்திரத்திலும், விவேக் பிரசன்னா ‘வினோத்’ வேடத்திலும் நடிக்கவுள்ளனர். இவர்களுடன் சில புதிய கதாபாத்திரங்களும் இணைகின்றன. இது வெறும் சம்பிரதாயத்திற்காக எடுக்கப்படும் இரண்டாம் பாகமாக இல்லாமல், இசை, கதை மற்றும் கதாபாத்திரங்களால் தனித்து நிற்கும் மறக்க முடியாத திரைப்படமாக இருக்கும் என இயக்குநர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் பேசும்போது,
தனது ஸ்டோன் பென்ச் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமான ‘மேயாத மான்’ வெளியாகி பத்து ஆண்டுகளில் 20 படங்களைத் தயாரித்துவிட்டதாகவும், ‘மேயாத மான் 2’ தனது 22-ஆவது தயாரிப்பாக அமைவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார். லோகேஷ் கனகராஜ் மற்றும் ஜி ஸ்குவாட் நிறுவனத்துடன் மீண்டும் இணைந்திருப்பது ஒரு நல்ல சகாப்தத்தின் தொடக்கம் என்றும், பழைய கொண்டாட்டம் மீண்டும் திரும்பியுள்ளது என்றும் அவர் உற்சாகத்துடன் குறிப்பிட்டுள்ளார். படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளன.