செயற்கை முறையில் குழந்தை பெற துடிக்கும் பெண்! – ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ விமர்சனம்!

திருமணம் செய்து கொள்ளாமல், செயற்கை முறையில் குழந்தை பெற்று கொள்ள விரும்புகிறார், அனுஷ்கா. இதற்கான, விந்து தானம் செய்பவரை, டாக்டரின் ஆலோசனைப்படி முடிவு செய்து, அவரே தேடி வருகிறார். அனுஷ்காவின் விருப்பத்திற்கேற்ப நவீன் பொலிஷெட்டி தேர்வு செய்யப்படுகிறார். அவரிடம் அனுஷ்கா தனது விருப்பத்தினை தெரிவித்து, அதற்கு சம்மதம் வாங்குகிறார். ஆனால், நவீன் பொலிஷெட்டி அனுஷ்காவின் மீது காதல் கொள்கிறார். இப்படி, செயற்கை முறையில் அனுஷ்கா குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவது ஏன்? நவீன் பொலிஷெட்டி காதல் என்னவானது? என்பது தான், ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ படத்தின் கதை.

முற்றிலும் மாறுபட்ட வித்தியாசமான கதைக்களத்துடன் வெளிவந்துள்ள ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’, இளைஞர்களிடம் நல்ல வரவேற்பினை பெறும், என்பதில் சந்தேகம் இல்லை. ஏனென்றால், இளைஞர்களின் மனம் கவரும் விஷயங்கள் இதில் ஏராளமாக இருக்கிறது.

அனுஷ்கா – நவீன் பொலிஷெட்டி இருவருக்குமான வயது வித்தியாசத்தினை, திரைக்கதையில் அழகாக தெளிவு படுத்தியிருக்கிறார்கள். ரொமான்ஸ் சீன், டூயட் சீன் என, எதுவுமே இல்லாமல், நவீன் பொலிஷெட்டியின் இளமை குறும்புகளுடனும், அடல்ட் ஜோக்குகளுடனும் கதை பயனிக்கிறது.  அவர், கதாபாத்திரத்தினை உணர்ந்து நடித்துள்ளார்.

அனுஷ்காவிற்கு அழுத்தமான கதாபாத்திரம், அதை மிகவும் லாவகமாக கையாண்டு இருக்கிறார்.

நீரவ்ஷாவின் ஒளிப்பதிவு, காட்சிகளை பிரம்மாண்ட படுத்துகிறது. ரதனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ஓகே!

மனித உறவுகளில், நம்பிக்கையும் ஆதரவும் தரும் துணை எவ்வளவு அவசியம், என்பதை உணர்த்தும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் கதையில், அதை பற்றி இயக்குநர் மகேஷ் பாபு, இன்னும் கொஞ்சம் அழுத்தமாகவும், விரிவாகவும் சொல்லியிருக்கலாம். அதேபோல் அனுஷ்கா திருமண உறவை வெறுக்கும் காரணத்தையும், அழுத்தமாக சொல்லியிருக்க வேண்டும்.

முதல் பாதியில் இன்னும் கொஞ்சம் சுவாரசியம் சேர்த்திருக்கலாம்.

‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ வித்தியாசமான கோணத்தில் புதிய காதல் கதை!