வேலைக்கு சென்ற கபாலி விஸ்வந்த், நீண்ட நாட்கள் தொடர்பில்லாமல் இருப்பதால், அவரைத்தேடி, அவரது நண்பர் வெற்றி, திருப்பதி செல்கிறார். அங்கே செம்மரம் கடத்துபவர்களுடன் வெற்றி பேசிக்கொண்டிருக்கும் போது, ஆந்திர வனத்துறை சிறப்பு அதிகாரி கணேஷ் வெங்கட்ராமன், அவர்களை கைது செய்கிறார்.
கபாலி விஸ்வந்துடன் வெற்றியின் ஊரைச்சேர்ந்த சிலர், வலுக்கட்டாயமாக செம்மரம் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதை உணரும் வெற்றி, அங்கிருந்து தப்பிச்செல்ல முயற்சி செய்கிறார். அவர் தப்பித்தாரா, இல்லையா? என்பது தான் ‘ரெட் சாண்டல் வுட்’ படத்தின் கதை.
செம்மரக்கடத்தலில் ஈடுபட்டதாக, ஆந்திர போலீசாரால் 20 தமிழர்கள் கொல்லப்பட்டதை, பத்திரிக்கை செய்திகள் வாயிலாக படித்து தெரிந்து கொண்டவர்களுக்கு, உண்மையில் என்ன நடந்தது? என்பதை தெரிந்து கொள்ள அவசியம் இருக்குமல்லவா? அதை, இப்படியும் நடந்திருக்கலாம், என்ற, சில புனைவுகளுடன் காட்சிப் படுத்தியிருக்கிறார்கள்.
செம்மரக்கடத்தலின் பின்னணி என்ன? தமிழர்கள் எப்படி இந்த கடத்தல் வேலைகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்? என்பதை முடிந்த வரை சொல்லியிருக்கிறார்கள். ஆந்திர அரசியல் புள்ளிகளை தொட்ட படக்குழு, தமிழக அரசியல் புள்ளிகள் அறவே இல்லை, என்பதை போல் படமாக்கியிருப்பது ஏமாற்றம்.
நாயகனாக நடித்திருக்கும் வெற்றி, ஓகே.
விவசாயியாக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர், அவர்களின் துயரத்தினை எடுத்துச்சொல்லி கண்கலங்க வைக்கிறார். இவர்களை போன்ற அப்பாவிகள் வேறு வழியின்றி, எப்படி சிக்குகின்றனர், என்பதை தெளிவாக காட்சிப்படுத்தியுள்ளனர். மரத்தினை வெட்டுவதற்கு முன்னர் அதற்கு மரியாதை செலுத்துவது, விவசாயி இயற்கை மேல் வைத்துள்ள, நேசத்தை வெளிப்படுத்துகிறது.
வில்லனாக நடித்திருக்கும் கே.ஜி.எப் ராம், வழக்கமான வில்லத்தனம் காட்டுகிறார்.
கணேஷ் வெங்கட்ராமன், வனத்துறை சிறப்பு அதிகாரியாக நடித்திருக்கிறார்.
மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் நடிகர், நடிகைகளும் கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடித்திருக்கிறார்கள்.
ஆந்திர வனப்பகுதியில் வளரும் செம்மரத்தின் சிறப்பு குறித்து கூறப்படும் ஆரம்பக்காட்சியினை போல், அனைத்து காட்சிகளும், படமாக்கப்பட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார்.
மாநிலங்களுக்குள் நட்புடன் நடக்கும், சர்வதேச செம்மரக்கடத்தலின் முரட்டு மாஃபியாவை முடிந்தவரை காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். அதற்கு பாராட்டுகள்.
‘ரெட் சாண்டல் வுட்’ அப்பாவித் தமிழர்களின் வேர்வையும், ரத்தமும்!