ஒரு திட்டமிட்ட குண்டு வெடிப்பில், மனைவியை இழந்த அருண் விஜய், உயிருக்கு போராடும் தனது மகளின் அறுவை சிகிச்சைக்காக லண்டன் வருகிறார். லண்டன் ஆஸ்பத்திரியில் மகள் சிகிச்சைக்கான அனைத்தும் தயாராகி வருகிறது. அதற்கான பணத்தினை ஏற்பாடு செய்வதற்காக செல்லும் வழியில், அவரது பர்ஸினை பறித்த ரௌடிகளுடன் ஏற்படும் சண்டையில், லண்டன் போலீஸார் அவரை கைது செய்து சிறையில் அடைக்கின்றனர்.
லண்டன் சிறைச்சாலையின் அதிகாரியான எமி ஜாக்சனிடம், அருண்விஜய் தன்னுடைய நிலையை எடுத்துச்சொல்ல, அதை அவர் நம்ப மறுத்து விடுகிறார். அந்த சிறைச்சாலையில் இருக்கும் சர்வதேச பயங்கரவாதிகள் மூன்று பேர் அங்கிருந்து தப்பிக்க முயற்சிக்கின்றனர். அவர்களை தப்ப விடாமல் அருண் விஜய் தடுத்து விடுகிறார். இதனால், பயங்கரவாதிகள் சிகிச்சையிலிருக்கும், அருண்விஜய்யின் மகளை சிறை பிடிக்கிறார்கள். இதற்கு பிறகு நடக்கும் அதிரடி ஆக்ஷன் காட்சிகளே… ‘மிஷன் சாப்டர் 1’ படத்தின் கதை.
மனவியின் இறப்பிற்கு பின்னர், தனது மகளின் உயிரைக் காப்பாற்றத் துடிக்கும், தந்தையாகவும், பயங்கரவாதிகளை அடித்து நொருக்கும் இடங்களிலும், இருவேறுபட்ட நடிப்பினை கொடுத்து ரசிகர்களை கவர்ந்து விடுகிறார். அவரது உடல் தோற்றம் ஆக்ஷன் காட்சிகளுக்கு வலிமை சேர்த்துள்ளது. பல காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்து அவரது ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளார்.
லண்டன் சிறைச்சாலையின் அதிகாரியாக நடித்திருக்கும் எமி ஜாக்சன், ஆரம்பக் காட்சிகளில் மட்டுமே அதிரடி காட்டியிருக்கிறார். பல ஆக்ஷன் காட்சிகளில் அவர் எதுவுமே செய்யாமல் நிற்பது ஏமாற்றம் தருகிறது. அவரை இன்னும் பயன் படுத்தி இருக்கலாம். நர்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிமிஷா சஜயன் அவரது வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார்.
பயங்கரவாதியாக நடித்திருக்கும் பரத் போபண்ணா, அப்பாவி சர்தார் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அபி ஹாசன், மற்றும் விரஜ், ஜேசன் ஷா உள்ளிட்டோரும் குறிப்பிடும்படி நடித்துள்ளனர்.
சந்தீப் கே.விஜயனின் ஒளிப்பதிவு, ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசை, பின்னணி இசை படத்திற்கு பலமாக இருக்கிறது.
இயக்குநர் விஜய், திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
மொத்தத்தில், ‘மிஷன் – சாப்டர் 1’ கமர்ஷியல் பிரியர்களுக்கானது!