‘அரசால் சினிமாவிற்கு பலன் இல்லை!’ – ஆர்.கே.செல்வமணி குற்றச்சாட்டு!

பிரண்ட்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஸ்ரீ ஐயப்பா மூவிஸ் நிறுவனங்கள் சார்பில் பொள்ளாச்சி எஸ்.மகாலிங்கம், டி.கண்ணன் மற்றும் ஆயிஷா அக்மல் இணைந்து தயாரிக்கும் படம் ‘மிக்ஸிங் காதல்’. இயக்குநர் என்.பி.இஸ்மாயில் இயக்கியிருக்கும் இப்படத்தில் அறிமுக நடிகர் ஷிண்டே நாயகனாக நடித்திருக்கிறார். சம்யுக்தா வின்யா நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் ஸ்ரேயா பாவ்னா, பிரியங்கா, திவ்யா, அம்பானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

சாதிக் கபீர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ராஜேஷ் மோகன் மற்றும் கோனேஸ்வரன் இசையமைத்துள்ளனர். கவித படத்தொகுப்பு செய்ய, கலை இயக்குநராக ஏ.கார்த்திக் பணியாற்றியிருக்கிறார்.  இஸ்மாயில் மற்றும் கோனேஸ் பாடல்கள் எழுதியுள்ளனர். மக்கள் தொடர்பாளராக கார்த்திக் பணியாற்றியிருக்கிறார்.

விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் ‘மிக்ஸிங் காதல்’ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா, காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14 ஆம் தேதி சென்னை, பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி, கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம், இசையமைப்பாளர் தினா, தயாரிப்பாளர்கள் சங்க இணைச் செயலாளர் செளந்தர பாண்டியன், தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு உறுப்பினர் மற்றும் பி.ஆர்.ஓ சங்க தலைவர் விஜயமுரளி, இயக்குநர் ரஷீத், மூத்த பத்திரிகையாளர் உமாதி உள்ளிட்ட ஏராளமானவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டார்கள்.

மிக்ஸிங் காதல் படத்தின் இசைத்தட்டை வெளியிட்ட பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வம்ணி பேசுகையில்,

“இயக்குநர் இஸ்மாயில் எனக்கு நெருங்கிய நண்பர், அவர் என்னை அழைத்த போது, நீண்ட நாட்களுக்குப் பிறகு படம் பண்ணியிருக்கே, நிச்சயம் நான் வருவதாக சொன்னேன். இன்று காதலர் தினம், அதனால் என் மனைவியை டின்னர்க்கு அழைத்துச் செல்வதாக கூறினேன், அவரும் இதற்காக ஊரில் இருந்து வந்திருக்கிறார். அதனால், காலதாமதம் பண்ணி மிக்ஸிங் காதல் மூலம் என் காதலை கெடுத்துவிடாதே, என்று சொன்னேன். அவரும் உங்களை உடனடியாக அனுப்பி வைத்துவிடுகிறேன், என்றார். ஆனால், இங்கு வந்தால் 7.30 மணி நிகழ்ச்சி தொடங்கவில்லை, இதுபோன்ற சூழ்நிலை சில நேரங்களில் ஏற்படத்தான் செய்யும், நாம் அதை பொறுத்துக் கொள்ள வேண்டும். நானும் இஸ்மாயிலுக்காக பொறுத்துக் கொண்டேன். படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலரை பார்த்தேன், மிக சிறப்பாக இருந்தது. ஒளிப்பதிவு, இசை, பாடல் வரிகள் அனைத்துமே ஈர்க்க கூடியதாக இருந்தது. இஸ்மாயில் இந்த படத்தை மிக சிரமப்பட்டு எடுத்திருக்கிறார்.

தற்போதைய காலக்கட்டத்தில் திரையுலகம் கொரோனா காலக்கட்டம் போல் தான் சென்றுக் கொண்டிருக்கிறது. இன்று சினிமாவின் தேவை சமூகத்திற்கு அதிகமாக தேவைப்படுகிறது. அனைவரும் அனைத்து படங்களையும் பார்க்கிறார்கள், ஆனால் அவர் படங்களை எதில் பார்க்கிறார்கள் என்பது தான் தயாரிப்பாளர்களுக்கு தெரியவில்லை. ஒரு திரைப்படத்தின் மூலம் பல வழிகளில் வருமானம் வருகிறது, ஆனால் அவை தயாரிப்பாளருக்கு கிடைக்காத ஒரு நிலை தான் இங்கிருக்கிறது.

ஆண்டுக்கு சுமார் 250-க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகிறது. அதன் மூலம் திரைப்படத்துறையில் சுமார் ரூ.3 ஆயிரம் கோடி வியாபாரம் நடைபெறுகிறது. அதன் மூலம் ஜி.எஸ்.டியாக ரூ.540 கோடியும், லோக்கல்பாடி வரியாக ரூ.100 கோடி மற்றும் வருமான வரி என சினிமாத்துறை மூலம் அரசுக்கு சுமார் ரூ.1000 கோடி கிடைக்கிறது. ஆனால், சினிமாத்துறைக்கான ஒரு முறையான கட்டமைப்பு இல்லை.

இன்று ஒரு திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது என்றால், அது என்ன ஷோவில் ஓடுகிறது, என்று சரியாக தெரிவதில்லை. மல்டிபிளக்ஸில் ஓடிகொண்டிருக்கும் படத்தை குறிப்பிட்ட ஸ்கிரீனில் போட்டிருக்கிறார்கள், சென்று பார்க்கலாம் ஒரு நாள் 11 மணி காட்சியில் ஓடிக்கொண்டிருக்கிறது, மறுநாள் 3 மணி காட்சியாக மாற்றபப்டுகிறது. எப்படி வேண்டுமானாலும், எந்த நேரத்தி வேண்டுமானாலும் திரையிடலாம் என்ற ஒரு சூழல் தான் நிலவுகிறது. அதுவும் இதுபோன்ற சிறிய படங்களுக்கு தான் அது நிகழ்கிறது. என் காலத்தில் திரைப்படம் எடுப்பது சிரமமான விசயமாக இருந்தது, ஆனால் படத்தை எடுத்து முடிவிட்டால் அது நிச்சயம் வெளியாகி விடும். தற்போதைய காலகட்டத்தில் ஒரு படத்தை எடுப்பது சுலபம் ஆனால் அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பது தான் மிகவும் சிரமமாக இருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் படம் தயாரிப்பவர்கள் இரண்டு விசயங்களை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். ஆங்கிலப் படம் போல் எடுக்கிறேன், என்று சொல்லிக் கொண்டு நம் கலாச்சாரத்தை தாண்டிய படங்களை எடுக்க கூடாது. காரணம், ஆங்கிலலப் படங்கள் நமக்கு இப்போது சாதாரணமாக ஆகிவிட்டது. ஓடிடி போன்றவற்றின் மூலம் எந்த ஒரு நாட்டின் படத்தையும் நாம் பார்த்துவிடுகிறோம். அதனால், ஆங்கிலப் படம் போல் எடுக்கிறேன், என்று முயற்சிக்காமல் நம் கலாச்சாரம், நம் வாழ்வியலை எதார்த்தமாக எடுத்தாலே அதை மக்கள் கொண்டாடுவார்கள், நம் மக்கள் மட்டும் இன்றி உலக மக்களும் அதுபோன்ற படங்களை தான் பார்க்க ஆவலோடு இருக்கிறார்கள். இன்று ஒரு தமிழ் படத்தை அர்ஜெண்டினா நாட்டில் பார்க்கிறார்கள், அதே போல் அர்ஜெண்டினா படத்தை நாமும் பார்க்க முடிகிறது. எனவே, நம் கதைகளை குறைந்த முதலீட்டில் சொல்லக்கூடிய படங்களை எடுக்க வேண்டும், அதேபோல் அந்த படங்களை மக்களிடம் எப்படி கொண்டு சேர்க்க வேண்டும் என்ற யுக்தியை சரியாக கையாள வேண்டும், இந்த இரண்டு விசயங்களை மனதில் வைத்து படம் தயாரித்தால் நிச்சயம் வெற்றி பெறலாம்.

மிக்ஸிங் காதல் படத்தை பார்க்கும் போதே அதில் ரசிகர்களுக்கான அனைத்து விசயங்களும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இஸ்மாயில் எடுத்திருக்கிறார், என்பது தெரிகிறது. படம் சிறப்பாக வந்திருக்கிறது. இந்த சிறிய படத்தின் நிகழ்ச்சிக்கு இவ்வளவு மீடியாக்கள் வந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. கேமரா வைப்பதற்கே இடம் இல்லாத அளவுக்கு நிறைய கேமராக்கள் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறது என்றால் இஸ்மாயில் ஏதோ ஒரு வகையில் ஊடகத்தினருடன் நட்பாக இருக்கிறார், என்று தெரிகிறது. எனவே, இந்த படத்தை அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்த்து ஒத்துழைக்க வேண்டும், என்று மீடியாக்களிடம் கேட்டுக் கொள்கிறேன். படம் சிறப்பாக வந்திருக்கிறது. படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர், நடிகைகள் என அனைவருக்கும் வாழ்த்துகள். படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன், நன்றி.” என்றார்.