அறிமுக இயக்குநர் கவின் மூர்த்தி இயக்கத்தில், முகேன் ராவ் நடிப்பில் அமானுஷ்ய சஸ்பென்ஸ் கதையாக உருவாகி வரும் ‘மைலோ’ திரைப்படத்தின் நட்சத்திரப் பட்டாளங்கள் மற்றும் படப்பிடிப்பு நிறைவு குறித்த அதிகாரப்பூர்வ விபரங்களை எஸ்.எஸ்.ஆர் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இப்படத்தில் முகேன் ராவுக்கு ஜோடியாக தேஜு அஸ்வினி நடிக்க, முக்கியக் கதாபாத்திரங்களில் இளவரசு, முனீஷ்காந்த் மற்றும் ஆதித்யா கதிர் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். மேலும், ‘பிக் பாஸ்’ புகழ் ஜனனி மற்றும் விஜயகாந்தின் ‘எங்கள் அண்ணா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தைப் பெற்ற நடிகை இந்திரஜா, சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவிற்கு ரீ-என்ட்ரி கொடுத்து இத்திரைப்படத்தில் ஒரு மிக முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் பிரபல இயக்குநர் மற்றும் நடிகரான சுரேஷ் மேனனும் ஒரு பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மிகப் பெரிய பட்ஜெட்டில் சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகும் இத்திரைப்படத்தின் கதைக் களத்திற்காகச் சென்னை, ஊட்டி, கொல்லிமலை, மூணாறு, திருவனந்தபுரம் மற்றும் மலேசியா உள்ளிட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேசப் பகுதிகளில் மிக பிரம்மாண்டமான முறையில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு, தற்போது ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் முழுமையாக நிறைவடைந்துள்ளது. இத்திரைப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைக்க, ஜிஜு சன்னி காட்சிகளை ஒளிப்பதிவு செய்துள்ளார். வெங்கட் ராஜன் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்ள, உமா சங்கர் மற்றும் ஜெயமுருகன் ஆகியோர் இணைந்து கலை இயக்கத்தைக் கையாண்டுள்ளனர்.
இயக்குநர் கவின் மூர்த்தியுடன் இணைந்து சந்திரன் இப்படத்தின் விறுவிறுப்பான வசனங்களை எழுதியுள்ளார். ஏ. ராஜா இணை இயக்குநராகப் பணியாற்ற, மணி சந்திரா மற்றும் விஜி நடன அமைப்பையும், ஃபீனிக்ஸ் பிரபு மற்றும் மிராக்கிள் மைக்கேல் ஆகியோர் அதிரடியான சண்டைப் பயிற்சிகளையும் மேற்கொண்டுள்ளனர். புத்திசாலித்தனமான செல்ல நாயின் துணையுடன், 18 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு கொடூரமான குற்றத்தின் பின்னணியில் இருக்கும் மர்மத்தை நாயகன் கண்டறியும் ஒரு வித்தியாசமான மற்றும் புதுமையான முயற்சியாக இப்படம் செதுக்கப்பட்டுள்ளது. தற்போது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி வரும் நிலையில், ‘மைலோ’ திரைப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீடு மற்றும் திரையரங்கு ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்புகள் மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் எனப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.