விஜயானந்த் – விமர்சனம்!

இந்தியா முழுவதிலும் நன்கு பிரசித்தி பெற்றவர், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த விஜய் சங்கேஸ்வர். ‘விஜயானந்த் ரோட்லைன்ஸ்’ நிறுவனத்தின் நிறுவனரான இவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகியிருக்கிறது. இதற்கு திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார், ரிஷிகா ஷர்மா. இப்பபடத்தினை VRL Film Productions’ சார்பில் ஆனந்த் சங்கேஸ்வர் தயாரித்துள்ளார். இதில் நிஹால், ஶ்ரீ பிரகலாத், ஆனந்த் நாக், வினய பிரசாத், பரத் போபண்ணா, அர்ச்சனா கொட்டிகே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஒரே ஒரு லாரியுடன் தனது பயணத்தை தொடங்கிய விஜய் சங்கேஸ்வர், இன்று சுமார் 5,000 லாரிகளுக்கும் மேலாக, சரக்கு போக்குவரத்து துறையில் தன்னிகரில்லாது அரசியல், பத்திரிக்கை துறையிலும் மிகப்பெரிய சாதனைகளை, எப்படி நிகழ்த்தி வருகிறார். அதற்காக எதிர்கொண்ட பிரச்சனைகள் என்ன? என்பது தான் விஜயானந்த் படத்தின் கதை.

தொழிலதிபர் விஜய் சங்கேஸ்வர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் நிஹால், கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். அவரது கதாபாத்திரம் புதிதாக தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கு புதிய நம்பிக்கையை தரும்.

 

விஜய் சங்கேஸ்வரின் மகனான ஆனந்த் சங்கேஸ்வர்  கதாபாத்திரத்தில்  நடித்திருக்கும் பரத் போபண்ணா,  விஜய் சங்கேஸ்வரின் மனைவியாக நடித்திருக்கும் ஶ்ரீ பிரஹலாத், அப்பாவாக நடித்திருக்கும் ஆனந்த் நாக், பத்திரிகையாளராக  நடித்திருக்கும்  பிரகாஷ் பெலவாடி மற்றும் வினய பிரசாத், அர்ச்சனா கொட்டிகே உள்ளிட்ட நடிகர்கள் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

கீர்த்தன் புஜாரியின் ஒளிப்பதிவு அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்றபடி ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

காட்சிகளுக்கேற்ற பின்னணி இசை கொடுத்திருக்கிறார், இசையமைப்பாளர் கோபி சுந்தர். அவரது  இசையில் ‘காளிதாசன் சாகுந்தலா’ பாடல் திரும்ப கேட்கும் வகையில் இனிமையாக இருக்கிறது.

பலத்த போட்டியிருக்கும் சரக்கு போக்குவரத்து துறையில் சில சம்பவங்கள் இன்னும் விரிவாக சொல்லப்படவில்லையோ..! என்ற உணர்வு ஏற்படுகிறது. சினிமாவிற்கான சில ஹீரோயிசத்தை சேர்த்து இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாக சொல்லியிருக்கலாம்.

இருந்தாலும்,  ‘விஜயானந்த்’ சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கான ஊக்கமருந்து!