வெவ்வேறு சாதியினை சேர்ந்த கூச்ச சுபாவம் கொண்ட சாம் ஜோன்ஸூம், கலகலப்பான ஆனந்தியும் கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்து வருகிறார்கள். ஆனந்தியின் குடும்பத்தினரை பழிவாங்கவும், அரசியலில் முன்னணி இடத்தினை பிடிப்பதற்காகவும் தக்க சமயம் பார்த்து கொண்டிருந்த கரு.பழனியப்பன், நண்பர்களாக பழகிவருபவர்களை காதலர்களாக சித்தரிக்கிறார். இதனால் ஏற்படும் குழப்பத்தினையும், பிரச்சனையையும் எப்படி அவர்கள் எப்படி எதிர்கொண்டனர். கரு.பழனியப்பன் நினைத்தபடி எல்லாம் நடந்ததா? என்பது தான் நதி படத்தின் கதை, திரைக்கதை.
கூச்ச சுபாவமுள்ள கல்லூரி மாணவராக நடித்திருக்கும் சாம் ஜோன்ஸ், கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். சந்திக்கும் தருணங்களில் ஆனந்தியிடம் பழகுவதற்கு தயங்குவதும் அவரிடம் இருந்து விலகுவதுமாக தன்னுடைய கதாபாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார்.
கதாபாத்திரங்களை கவனமாக தேர்ந்தெடுத்து நடித்துவரும் ‘கயல்’ ஆனந்தி பாராட்டும்படியான நடிப்பினை கொடுத்திருக்கிறார். அவர் நடித்த அனைத்து காட்சிகளிலுமே சிறப்பாக நடித்திருக்கிறார்.
ஆனந்தியின் தந்தையாக நடித்திருக்கிறார் ஏ.வெங்கடேஷ், ஒகே! ஆனந்தியின் பெரியப்பவாக நடித்திருக்கிறார் வேல ராமமூர்த்தி. எல்லாப் படத்திலேயும் ஒரே மாதிரியாக நடித்துவரும் அவர், இந்தப்படத்திலும் அந்த மாதிரியாகவே நடித்திருக்கிறார்.
ஒரே காட்சியில் வெவ்வேறு ‘விக்’ குகளுடன், பிரதான வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார் கரு.பழனியப்பன். அரசியல்வாதிகளை அடித்து தூள்…பறக்கவிட்டுள்ளார். தற்போதைய அரசியல்வாதிகளின் முன்னுக்குப் பின்னான முரண் பேச்சினை நினைவூட்டுகிறார். அட்டகாசம்! இந்தப்படத்தில் இவரை பார்த்தவர்கள் இனி அரசியல்வாதிகளை சற்று வித்தியாசமாகத்தான் பார்ப்பார்கள். கரு.பழனியப்பனுக்கு பாராட்டுக்கள்.
கரு.பழனியப்பனுக்கு அல்லக்கைய்யாக வரும் ‘கோடங்கி’ வடிவேல் சிறப்பாக நடித்திருக்கிறார். அவரது வட்டார பாஷை, மதுரை கதைக் களத்திற்கு பலம் சேர்த்துள்ளது.
‘மைக் செட்’ யூடியூப் ஸ்ரீராம் வரும் காட்சிகளும், அவர் நடித்த காட்சிகளும் போர்….
சாம் ஜோன்ஸின் தந்தையாக நடித்திருக்கிறார் முனிஷ்காந்த் . சிறந்த கதாபாத்திரம். மொக்கை காமெடி செய்து வெறுப்பேற்றாமல் குணச்சித்திர நடிகராக நடித்து மனம் கவர்கிறார்.
நீண்ட நாளைக்குப்பிறகு இடைவேளை காட்சி, ரசிகர்களை எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது. அடுத்து என்ன நடக்கும் என்பதை பேசவைத்துள்ளது. இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
உண்மை சம்பவத்தை கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தாலும், க்ளைமாக்ஸ் பலருக்கு பிடிக்காது. வசனத்தில் கவனம் செலுத்தியவர்கள் திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால் கூடுதல் கவனம் பெற்றிருக்கும்.