‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ –  விமர்சனம்!

சித்தார்த் நடித்த ‘எனக்குள் ஒருவன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர், பிரசாத் ராமர். நீண்ட இடைவேளைக்கு பிறகு, ‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ படத்தினை இயக்கியிருக்கிறார்.  ‘பூர்வா புரொடக்‌ஷன்ஸ்’ சார்பில், பிரபல பாடகரும், இசையமைப்பாளருமான பிரதீப் குமார், தயாரித்து, இசையமைத்து பாடல்களை எழுதியிருக்கிறார்.

‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ படத்தில், செந்தூர் பாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கி, ப்ரீத்தி கரண் கதாநாயகியாக நடித்துள்ளார். சுரேஷ் மதியழகன், பூர்ணிமா ரவி, தமிழ்செல்வி, ஷிவானி கீர்த்தி, அபிஷேக் ராஜு, மாலிக், நாகராஜ், எஸ்.கே.தாஸ், எம். அமுதாராணி, மினு வாலண்டினா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

எஸ். ஹரி உத்ராவின் உத்ரா புரொடக்ஷன்ஸ், இப்படத்தினை திரையரங்குகளில் வெளியிட்டுள்ளது.

செந்தூர் பாண்டியன், தன்னுடன் பழகும் எல்லா பெண்களையும் காதல் வலை வீசி, படுக்கையில் வீழ்த்தும், சாதுர்யம் படைத்த, ஒரு அயோக்கியன். இவனது வலையில், மயிலாடுதுறையில் வசிக்கும் ப்ரீத்தி கரணும் சிக்குகிறார். வழக்கம்போல் தனது காம விளையாட்டினை நிகழ்த்த மதுரையிலிருந்து மயிலாடுதுறைக்கு நண்பனுடன் செல்கிறான். அவன் நினைத்தது நடந்ததா, இல்லையா? என்பதே ‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ படத்தின் கதை.

ஆரம்பக் காட்சியிலேயே செந்தூர் பாண்டியன், காலியான ஒரு தியேட்டரினுள் ஒரு பெண்ணின் வாயுடன், வாய் வைத்து உறிஞ்சி எடுக்கிறார். அப்போதே, தெரிந்து விடுகிறது படத்தின் போக்கு! அதன் பிறகு எல்லாமே காட்சிகளில் இல்லாவிட்டாலும் வசனத்தில் ‘A’ படம் என்பதை நினைவு படுத்துகிறது. வீட்டிற்குள் தனது காரியத்தை முடித்துக்கொள்ள நினைக்கும் செந்தூர் பாண்டியனுக்கு, அது, கைகூடாததால் பூம்புகார் செல்கிறார்கள். ஆள் நடமாட்டமில்லாத அந்த இடத்தில் அத்துமீற, அங்கே நடக்கும் சம்பவம், செந்தூர் பாண்டியனுக்கு ஒரு பாடம் புகட்டுகிறது.

பூம்புகாரில் ப்ரீத்தி கரண் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும், சிறப்பானவை. பெண்கள் நினைவு கொள்ள வேண்டிய கருத்துக்கள். செந்தூர் பாண்டியன் போன்ற நபர்களுக்கு நல்ல ட்ரீட்!

கதாநாயகன் சிவா கதாபாத்திரத்தில் நடித்துள்ள செந்தூர் பாண்டியன் சுமாரான நடிப்பினையே கொடுத்துள்ளார். பூம்புகாரில் நடக்கும் காட்சிகள் பரவாயில்லை! இவரது நண்பனாக நடித்திருப்பவர் சிறப்பாக நடித்திருக்கிறார். காண்டம் வாங்கும் காட்சிகளில், சிரிப்பினை வரவழைக்கிறார். படம் தொய்வடையும் காட்சிகளில் இவரது காட்சிகள் காப்பாற்றுகிறது.

ப்ரீத்தி கரண் சிறப்பாக நடித்திருக்கிறார். அவரது கதாபாத்திரத்தினை உணர்ந்து நடித்துள்ளார். அசாதாரண சூழ்நிலையை அவர் கையாள்வது சிறப்பு!

ஆண்கள் எல்லோருமே தவறானவர்கள், என்ற கருத்தினை வலியத் திணித்துள்ளார், இயக்குநர் பிரசாத் ராமர். அதோடு க்ளைமாக்ஸ் சொல்ல முடியாமலும் படத்தை முடித்துள்ளார்.