V6 பிலிம் பிரைவேட் லிமிடெட் சார்பில் S.வேலாயுதம் தயாரிப்பில் உருவாகி இருக்கிறது நாற்கரப்போர். இந்தப்படத்தில் இறுகப்பற்று படம் மூலம் கவனம் பெற்ற நடிகை அபர்ணதி கதாநாயகியாக நடிக்க, படத்தின் மைய கதாபாத்திரமாக சேத்துமான் படத்தில் நடித்த அஸ்வின் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் காலா, கபாலி புகழ் லிங்கேஸ், வில்லனாக சுரேஷ் மேனன் ஆகியோர் நடிக்கின்றனர்.
ஹெச்.வினோத், ராஜபாண்டி உள்ளிட்ட இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் இயக்குநர் ஸ்ரீ வெற்றி. இவர் ‘நாற்கரப் போர் படத்தின் மூலமாக இயக்குநராக அடியெடுத்து வைக்கிறார்.
‘சதுரங்க விளையாட்டை மையப்படுத்தி இந்த படம் உருவாகி உள்ளது. ஏழை-பணக்காரன், உயர் ஜாதி-தாழ்ந்த ஜாதி என இவர்களுக்கு இடையே காலங்காலமாக இருக்கும் பிரச்சினைகளை சதுரங்க விளையாட்டின் பின்னணியில் இந்த படம் பேசுகிறது. குப்பை அள்ளும் சமுதாயத்தில் இருந்து வந்த ஒருவன் எப்படி ‘கிராண்ட் மாஸ்டர்’ ஆகிறான் ? அதற்காக அவன் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன என்பது இந்தப்படத்தின் கரு.
நாற்கரப்போர் படம் குறித்து இயக்குநர் ஸ்ரீ வெற்றி கூறியதாவது..
‘சிறுவயதிலேயே எனக்கும் என் நண்பனுக்கும் சதுரங்க விளையாட்டில் ஆர்வம் எழுந்தது. என் நண்பன் படிப்பை விட செஸ் விளையாடுவதில் ஆர்வம் செலுத்தினான். எப்படியோ சிறுக சிறுக பணம் சேர்த்து ஒரு செஸ் போர்டு வாங்கி தொடர்ந்து அதில் விளையாடி பயிற்சி பெற்றோம். வீட்டிற்கு தெரியாமலேயே எங்கள் ஊரான திண்டுக்கல்லில் இருந்து மதுரைக்கு சென்று பயிற்சி மையத்தில் சேர முயற்சித்தோம். ஆனால் அங்கே பயிற்சி கட்டணம் அதிகம் என்று கூறி எங்களை திருப்பி அனுப்பி விட்டனர். அன்று வீடு திரும்பியபோது இந்த உண்மையை கண்டுபிடித்து விட்ட எங்களது பெற்றோர் எங்களை அடித்து உதைத்து அந்த செஸ் போர்டையும் தீயிலிட்டு கொளுத்தி விட்டனர்.
ஆனால், என் நண்பன் படிப்பிலும் கவனம் செலுத்த முடியாமல் விளையாட்டையும் விளையாட முடியாமல் மன அழுத்தத்திற்கு ஆளாகி ஒரு கட்டத்தில் லாரியில் விழுந்து தற்கொலை செய்து கொண்டான். அந்தப் பாதிப்பில் இருந்து நான் மீண்டு வரவே பல நாட்கள் ஆனது. அதேபோல எங்கள் தெருவில் தூய்மை பணியாளராக பணியாற்றும் ஒரு அம்மா எங்கள் வீட்டில் மட்டும் நெருங்கி பழகி வந்தார். ஒரு கட்டத்தில் அவர் இறந்துவிட அவரது இறுதிச் சடங்கை செய்த சில பேரில் நானும் ஒருவன். அவரது மரணமும் என்னை பாதித்தது. அதன் பிறகு சினிமாவுக்கான கதையை நான் உருவாக்கிய போது என் நண்பனின் விளையாட்டையும் தூய்மை பணி செய்த அந்த அன்னையின் கஷ்டங்களையும் ஒன்றாக்கி இந்த நாற்கர போர் கதையை எழுதினேன்.
இந்தியாவில் விளையாட்டுகளை நிர்வகிக்கும் பல கூட்டமைப்புகளும் சங்கங்களும் சுயநல அரசியல் மோதல் நடக்கும் களங்களாக மாறிப்போயிருக்கின்றன. . இது எல்லாவற்றையும் கடந்துதான் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அதிக வெற்றிகளையும், புகழையும் குவித்து வருகின்றனர். கீழடியில் நடக்கும் அகழ்வாராய்ச்சியில் சூளையில் சுடப்பட்ட சதுரங்க காய்கள் கிடைத்துள்ளது. இந்த காய்களின் ஆயுள் கிட்ட தட்ட கி.மு 6-ஆம் நூற்றாண்டு இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருகிறது. அந்தவகையில் சதுரங்க விளையாட்டிற்கும் ஆதி தமிழ்நாடாய் திகழ்வதில் இன்னும் பூரிப்பு.
இன்று தமிழக அரசால் ஒலிம்பியாட் போட்டிகள் நடத்தப்பட்டு மாணவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும், சிறப்பு கவனத்தையும் சதுரங்க விளையாட்டு பெற்றிருக்கிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் 24 கிராண்ட் மாஸ்டர்கள் இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியின் உச்சம். மத நல்லிணக்கத்துக்காகவும், மக்களை ஒண்றினைக்கும் கருவியாகவும் விளையாட்டு இருக்கிறது. ஆனால் அந்த விளையாட்டை விளையாடவும், ஒரு விளையாட்டை தேர்தெடுக்கவும் கூட ஒரு தகுதி தேவைப்படுகிறது. இன்றும் எங்கோ ஒரு இடத்தில் தன்னால் விருப்பப்பட்ட விளையாட்டை தேர்தெடுத்து விளையாட முடியாமல் எத்தனையோ பேர் மறைந்து போயிருக்கிறார்கள்.
நாம் இன்றும் கண்டுகொள்ளாத மனிதர்களிடமும் நம்மை போல அனைத்து ஆசைகளும் இருக்கிறது. அதை சொல்லும் படம் தான் ‘நாற்கரப்போர்’. இது ஒரு சமூகத்தினருக்கான படம் அல்ல… ஒட்டு மொத்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கானது.” என்கிறார் ஸ்ரீ வெற்றி.
நாற்கரப்போர்’ படம் ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியிடுவதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.