நேர்கொண்ட பார்வை – விமர்சனம்

‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் மூலம் அனைவரது பாராட்டுகளைப் பெற்ற இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘நேர்கொண்ட பார்வை’. ‘பிங்க்’ ஹிந்தி படத்தின் ரீமேக்கான இந்தப்படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூர் தயாரித்துள்ளதால் இந்தியா முழுவதிலும் தனிகவனத்தை பெற்றுள்ளது. ‘பிங்க்’ படத்தின் தரமான வெற்றியை இப்படம் தக்க வைத்துக்கொள்ளுமா?
.

ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாசலம், ஆண்டிரியா தாரியங் மூவரும் ஒரே வீட்டில் தங்கியிருந்து அவரவர் வேலையைச் செய்து வரும் தோழிகள். ஓரு நாள் இரவு ஷ்ரத்தா ஸ்ரீநாத் பங்கு பெறும் டான்ஸ் நிகழ்ச்சிக்கு அனைவரும் செல்கின்றனர். நிகழ்ச்சியின் முடிவில் ஏற்கனவே பழக்கமான அர்ஜுன் சிதம்பரம், ஆதிக் ரவிச்சந்திரன், அஷ்வின் ராவ் கொடுக்கும் மது விருந்தில் கலந்து கொள்கின்றனர். அங்கு ஏற்படும் சம்பவத்தில் ஒருவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத்தால் கடுமையாக தாக்கப்படுகிறார்.

பணபலமிக்க அர்ஜுன் சிதம்பரம், ஆதிக் ரவிச்சந்திரன், அஷ்வின் ராவ் ஆகியோர் இதற்கு பழிவாங்கும் விதமாக ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாசலம், ஆண்டிரியா தாரியங் ஆகிய மூவரையும் பாலியல் உள்ளிட்ட பல துன்பங்களுக்கு உட்படுத்தி கோர்ட் மூலம் அவர்களை விபச்சாரிகளாக சித்திரிக்க முயற்சிக்கின்றனர். அவர்களின் இந்த கோரப்பிடியிலிருந்து பாதிக்கப்பட்ட பெண்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதே ‘நேர்கொண்ட பார்வை’படத்தின் கதை!

ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு ரீமேக் செய்யும் போது அந்தந்த மொழிக்கேற்ப மற்றங்கள் செய்வது வழக்கம். ஒரு சில மாற்றங்களைத் தவிர இந்தப்படத்தில் பெரிய மாற்றங்கள் இல்லை. ஆனால் ‘பிங்க்’ படத்தில் இடம் பெற்ற டைலாக்குகள் அப்படியே மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இதனால் அந்தப்படத்தை பார்த்தவர்களுக்கு சற்று சலிப்பு ஏற்படும். இருந்தாலும் படத்தின் வலிமையே அது தான்.

அஜித்குமார் ரசிகர்களுக்காக வைக்கப்பட்ட சண்டைக்காட்சி சூப்பர் மாஸ்! இந்த ஒரு காட்சியே அவர்களுக்கு போதும். வழக்கமான வழ வழ கொழ கொழ இல்லாத ஃபைட் நச்சுன்னு இருக்கு.

பாடல் காட்சியில் ஆரம்பிக்கும் படம் இருபது நிமிடம் ஸ்லோவாக போகும் போது தியேட்டரில் ‘படம் அவ்வளவு தானா ?’ என்ற முனுமுனுப்புக்கள். ஆனால் அஜித் எண்ட்ரிக்கு பிறகு க்ளைமாக்ஸ் வரை அஜித்தின் அதகளம்! சிங்கத்தின் முன் சிறு நரியாக பத்திரிகையாளர் ரங்கராஜ் பான்டே! அஜித்தின் ஆக்ஷனுக்கு முன் அவரது ரியாக்ஷன் எடுபட மறுக்கிறது. ஓவராக்டிங்கோ!

க்ளைமாக்ஸ் காட்சியில் அஜித் கோர்ட்டில் ‘NO’ சொல்லும் காட்சியையும் வசனத்தையும் படம் பார்த்தே அனுபவிக்க முடியும். வேற லெவெல் மாஸ் பண்பட்ட நடிப்பில் மிளிர்கிறார்!

யுவன் ஷங்கர் ராஜாவை போங்கடிக்க விடாமல் வேலை வாங்கியிருப்பார் போல இயக்குனர் எச்.வினோத். சூப்பர் பிஜிஎம். நீரவ் ஷாவின் கேமிராவும், கோகுல் சந்திரனின் எடிட்டிங்கும் படத்தின் பலமாக இருக்கிறது. மற்ற டெக்னிக்கல் விஷயங்கள் அனைத்தும் அஜித்தின் ஆளுமையால் கவனிக்க முடியாமல் போகிறது.

விருப்பமில்லாமல் ஒரு பெண்ணை தொடுவதால் ஏற்படும் பிரச்சனைகள் அதில் சம்பந்த படாதவர்களையும் எப்படி பாதிக்கிறது என்பதை அழகாக சொல்லியிருக்கிறார்கள். அனைவரும் பார்க்க வேண்டிய நல்ல படம்.

‘பிங்க்’ படத்தின் தரமான வெற்றியை போல் ‘நேர்கொண்ட பார்வை’ படமும் தரமான வெற்றியைப் பெற்றுள்ளது.