பி.எஸ்.எஸ் புரொடக்ஷன்ஸ், உத்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம், ‘எண்.6 வாத்தியார் கால்பந்தாட்டக் குழு’. எழுதி, இயக்கியிருக்கிறார் செ.ஹரி உத்ரா. இதில், சரத், அயிரா, கஞ்சா கருப்பு, அருவி மதன், சோனா, நரேன், இளையா, எஸ்.எம்.டி.கருணாநிதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வினோத் ராஜா ஒளிப்பதிவு செய்திருக்க, ஏ.ஜே.அலிமிர்ஸா இசையமைத்துள்ளார்.
‘எண்.6 வாத்தியார் கால்பந்தாட்டக் குழு’ திரைப்படத்தில், மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்து, 300 க்கும் மேற்பட்ட நிஜமான கால்பந்து விளையாட்டு வீரர்கள் நடித்துள்ளதாக கூறப்பட்டதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு இருந்தது. அதை பூர்த்தி செய்திருக்கிறதா? பார்க்கலாம்.
அன்றாட கூலி வேலை செய்யும் தொழிலாளர்களின் பிள்ளைகள், கால்பந்து விளையாட்டில், சிறு வயதிலிருந்து ஆர்வத்துடன் இருந்து வருகின்றனர். இவர்களின் விளையாட்டு திறமைகளை ஊக்குவிக்கும் விதமாக, ‘எண்.6 வாத்தியார் கால்பந்தாட்டக் குழு’ என்ற பெயரில் அணி அமைத்து அவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார், அருவி மதன். அதன் மூலம் இவர்களின் திறமை வெளிப்படுகிறது. வாய்ப்புகள் தேடி வர ஆரம்பிக்கிறது.
‘எண்.6 வாத்தியார் கால்பந்தாட்டக் குழு’ அணியினர் கூலி வேலைகளுக்கு செல்லாமல், கால்பாந்தாட்ட விளையாட்டில் தீவிரம் காட்டுவது, அந்த ஊரில் பல்வேறு தொழில்களை செய்து வரும், மரக்கடை அதிபருக்கு பிடிக்கவில்லை. இதனால், அவர்கள் விளையாட்டிற்கு தடை ஏற்படுத்துவதுடன், அவர்களை கொலை செய்ய முயற்சிக்கிறார். இதன் பிறகு என்ன நடந்தது, என்பது தான், ‘எண்.6 வாத்தியார் கால்பந்தாட்டக் குழு’ படத்தின் கதை.
ஆரம்பம் முதல் இறுதி வரை, ‘எண்.6 வாத்தியார் கால்பந்தாட்டக் குழு’ திரைப்படத்தில் எந்த காட்சியிலும், உயிர்ப்பு இல்லாதது, படத்தின் மிகப்பெரிய பலவீனம். ஒரு முதலாளிக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே நடக்கும் பிரச்சனையை, மேல் சாதி, கீழ் சாதி என வலிந்து சாதிப்பிரச்சனை பற்றிய காட்சிகள் வைக்காமல், சாதிய ரீதியாக ஒடுக்க நினைப்பவர்களுக்கு எதிராக போராடுவோம், என காட்சிக்கு காட்சி, பேசுகிறார்கள். வில்லன் அதை பற்றி எந்தவிதமான முன்னெடுப்புகளையும் செய்யவில்லை! பின் எதற்காக அந்த வசனங்கள், இயக்குநருக்கே வெளிச்சம்!?
கால்பந்து விளையாட்டு பற்றிய எந்தவிதமான அடிப்படைக் காட்சிகளும் இல்லை. திரைக்கதையிலும் ஏகப்பட்ட குளறுபடிகள். சம்பந்தமே இல்லாமல், துண்டு காட்சிகள் அவ்வப்போது வருகிறது. உதாரணமாக இரவு நேரத்தில் நடக்கும் ஒரு சண்டைக்காட்சியில், பயிற்சியாளர் மதன், விசில் ஊதுகிறார். குறுக்கவும் நெடுக்கவும் நடந்து போகிறார். ஏன், எதற்கு? என்றே தெரியவில்லை!
புதுமுகமாக அறிமுகமாகியிருக்கும் ஷரத் – அயிரா சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள் இன்னும் மோசம்!
நன்றாக நடிக்கத் தெரிந்த, அருவி மதனையே நடிக்க வைக்க முடியாத, இயக்குநர் ஹரி உத்ரா, மற்ற நடிகர், நடிகைகளை நடிக்க வைத்துவிடுவாரா, என்ன? இந்தக் காட்சி நன்றாக இருக்கிறது என, எந்தக் காட்சியையுமே சொல்ல முடிய வில்லை!
மொத்தத்தில், பந்தே இல்லாமல் விளையாடியிருக்கிறார்கள்.