மினி ஸ்டுடியோ சார்பில், வினோத் குமார் தயாரித்து, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம், மார்க் ஆண்டனி. இதில், விஷால், எஸ்.ஜே. சூர்யா, ரிது வர்மா, சுனில், அபிநயா ஆனந்த், ரெடின் கிங்ஸ்லி, நிழல்கள் ரவி, Y.G. மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
செல்வராகவன் ஒரு விஞ்ஞானி. அவர், தனது கடுமையான தொடர் முயற்சிக்கு பிறகு டைம் ட்ராவல் மெஷின் ஒன்றை கண்டுபிடிக்கிறார். அதை பயன்படுத்தி, விபத்தில் காலை இழந்த தன்னுடைய மனைவியின் காலை சரி செய்கிறார்.
டைம் ட்ராவல் மெஷினை கண்டுபிடித்த செல்வராகவன் சந்தோஷத்தில் ஒரு கிளப்புக்கு செல்கிறார். அங்கே நடக்கும் ஒரு கேங் வாரில், அவர் கொல்லப்படுகிறார். பல வருடங்களுக்கு பிறகு, அந்த டைம் ட்ராவல் மெஷினும், அதை பயன் படுத்துவதற்கான விவரங்களும் விஷாலிடம் கிடைக்கிறது. அதை வைத்து விஷால், தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை தனக்கு பிடித்தபடி மாற்றுகிறார். ஆனால் அவருக்கு சில அதிர்ச்சிகரமான நிகழ்வுகள் நடக்கிறது. அது என்ன? என்பது தான், ‘மார்க் ஆண்டனி’ பேண்டஸி திரைப்படத்தின் சுவாரசியமான திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!
படம் ஆரம்பித்த முதல் அரை மணி நேர, கார்த்தியின் போரடிக்கும் வாய்ஸ் ஓவர் இன்ட்ரோவிற்கு பிறகு, மெல்ல, மெல்ல வேகம் எடுக்கும் திரைக்கதை, க்ளைமாக்ஸ் வரை டிவிஸ்ட்டுகளுடன் 2 பாகத்திற்கான லீடுடன் முடிகிறது.
விஷால், தந்தை – மகனாக, மார்க் மற்றும் ஆண்டனியாக, மிரட்டும் டானாகவும், சாதுவானவராகவும், இரண்டு கதாபாத்திரங்களிலும், வித்தியாசம் காட்டி நடித்திருக்கிறார். இரண்டு கதாபத்திரங்களும் ரசிகர்களை கவர்கிறது. அப்பாவாக பல கெட்டப்புகளில், பட்டையை கிளப்புகிறார். க்ளைமாக்ஸ் காட்சியில் மொட்டைத் தலையுடன், விஜய் போல் டான்ஸ் ஆடி, சண்டைபோடும் காட்சிகளில், தியேட்டரில் விசில் பறக்கிறது.
விஷாலின் கதாபாத்திரங்களை ஓவர் ஷேடோ, செய்யுமளவிற்கு எஸ். ஜே. சூர்யா, தந்தை மகன் கதாபாத்திரங்களில், ஜாக்கி பாண்டியன், மதன் பாண்டியனாக படம் முழுவதும், ரசிகர்களை சோர்வடைய செய்யாமல் பார்த்துக் கொள்கிறார். நக்கல், வில்லத்தனம், பொம்பள சோக்காலியாக, பல பரிமாணங்களில் அதகளம் செய்கிறார். அதிலும் பஸ்ஸில் சில்க் ஸ்மிதாவை பார்த்து ஜொள்ளுவிட்டு, ஆட்டம் போட்டுவிட்டு, அதற்கு பிறகு மகனிடம் திட்டு வாங்கும் காட்சி, மரண மாஸ்! தியேட்டரில் உள்ள மொத்தபேரும் சிரிக்கின்றனர்.
ஜெயிலருக்கு பிறகு மார்க் ஆண்டனி படத்திலும் சுனில், ஏகாம்பரம் கதாபாத்திரத்தில் கவனிக்கும்படி நடித்திருக்கிறார்.
இவர்களைப் போலவே செல்வராகவன், நிழல்கள் ரவி, Y.G. மகேந்திரன், ரெடின் கிங்ஸ்லி ஆகியோரும் கவனிக்கும்படி நடித்துள்ளனர். மார்க் ஆண்டனி 2 பாகத்தில், செல்வராகவனுக்கு முக்கியமான பங்கு இருப்பது போல் இருக்கிறது.
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், திரைக்கதை முதல் அரை மணி நேரம் தவிர்த்து, பாராட்டும் படி இருக்கிறது. சற்றே குழப்பமான, விறுவிறுப்பான, சுவாரசியமான அவரது திரைக்கதைக்கு, எடிட்டர் பெரிதும் பலமாக இருந்திருக்கிறார்.
அபிநந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவு, சிறப்பு! ஜிவி பிரகாஷின் பின்னணி இசையில் குறையில்லை! பாடல்களில் திருப்தி ஏற்படவில்லை. ஒலியின் அளவு சற்று இம்சை செய்கிறது. மியுசிக் சூப்பர்வைசர் கவனமுடன் இருந்திருக்கலாம்.
1970 களின் ஆடை வடிவமைப்பினை பாராட்டும்படி செய்திருக்கிறார்கள், சத்யா, சீனு.
பேண்டஸி படங்களில் லாஜிக் பார்க்கக் கூடாது, என்றாலும், சில்க் ஸ்மிதா உள்ளிட்ட சில காட்சிகளில் இன்னும் கவனமாக இருந்திருக்கலாம். (1975ல் கதை சித்தரிக்கப்பட்டுள்ளது, அவங்க நடிக்க வந்தது 1979)
மொத்தத்தில், மார்க் ஆண்டனி விஷாலுக்கு வெற்றி கொடுக்கும்.