சினிமாவிற்குள் ஜாதி வேண்டாம். திரைப்பட விழாவில் இயக்குனர் பேரரசு ஆவேசம்!

D.நிர்மலா தேவி நல்லாசியுடன்   PNP கிரியேசன்ஸ் மற்றும் பிரைம் அசோசியேட்ஸ் இணைந்து வழங்க சௌத் இண்டியன் புரடெக்ஷன்ஸ், தயாரித்துள்ள படம் “கடத்தல்”. கரண், வடிவேலு, நடித்த காத்தவராயன், கதிர், ஹனி ரோஸ் நடித்த காந்தர்வன், கஸ்தூரி முக்கிய வேடத்தில் நடித்த இ.பி.கோ 302 போன்ற படங்களை இயக்கிய சலங்கை துரை இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் கதாநாயகனாக M.R தாமோதர் அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக விதிஷா, ரியா ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் சுதா, நிழல்கள் ரவி, சிங்கம் புலி, தமிழ் வாணன்,  R.ஜெயச்சந்திரன், ரவிகாந்த், ஆதி வெங்கடாச்சலம்,  க.சபாபதி , சந்தோஷ், மோகன் ரெட்டி, மாஸ்டர் தருண், பிரவீன்,  மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கிரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ளது ” கடத்தல் “ஜூலை மாதம் வெளியாகிறது. இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வினில், தயாரிப்பாளர் தமிழ்வாணன் பேசியதாவது….

இவ்விழாவிற்கு வருகை தந்துள்ள அனைவருக்கும் நன்றி. கடத்தல் படத்தில் எனது நண்பர் சலங்கை துரை அவர்கள் சின்னகதாப்பாத்திரம் என்று தான் அழைத்தார்கள் ஆனால் இரண்டு நாயகர்களில் ஒருவராக என்னை நடிக்க வைத்ததற்கு நன்றி. இப்படத்தில் பணிபுரிந்துள்ள அனைவரும் என் நண்பர்கள். படத்திற்கு அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகர் தாமோதரன் பேசியதாவது,

மேடையில் அமர்ந்துள்ள இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு எனது வணக்கம், இந்தப் படத்தை வெளியிட கடும் முயற்சி செய்தோம், பல சிக்கல்களைச் சந்தித்தோம் இறுதியில் இந்தப் படம் வெளியாகவுள்ளது , மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும் நன்றி,

நடிகர் கீர்த்தி வாசன் பேசியதாவது,

இயக்குநர் திடீரென என்னை அழைத்து இப்படி ஒரு படம் உள்ளது நீங்கள் இதில் நடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார், இந்தப் படத்தில் இயக்குநர் துரை சார் மிகப்பெரிய உழைப்பைக் கொடுத்துள்ளார் , படப்பிடிப்பில் அதை நான் நேரில் கண்டேன் , கண்டிப்பாகப் படம் உங்களுக்குப் பிடிக்கும் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி.சினிமாவிற்குள் ஜாதி வேண்டாம் ஜாதியைக் கலக்காதீர்கள். கடத்தல் திரைப்பட குழுவினர்.

இயக்குநர் சலங்கை துரை பேசியதாவது,

வெற்றி பெற்றவர்கள் அனைவரும் எங்களை வாழ்த்துகின்றனர் அதுவே எங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி , நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் உயிரோடு இருக்கிறார்கள் என்பதை மக்களுக்குத் தெரிவிப்பதே பத்திரிக்கையாளர் தான் நீங்கள் எங்களை மக்களிடையே கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று உங்களைக் கேட்டுக் கொள்கிறேன், இந்தப் படம் உங்களுக்கு ஒரு முக்கியமான அனுபவமாக இருக்கும் படத்தில் நடித்துள்ள அனைவரும் புதுமுக நடிகர்கள் எங்களின் இந்த முயற்சியை நீங்கள் தான் ஆதரிக்க வேண்டும் நன்றி.

இயக்குநர் பேரரசு பேசியதாவது,

கடத்தல் இது என்ன கடத்தல்,  ஆள் கடத்தலா? எம் எல் ஏ கடத்தலா? .  உலகிலேயே மிகப்பெரிய கடத்தல் நாள்கடத்தல் தான். நாம் அனைவரும் நாளைக் கடத்திக்கொண்டிருக்கிறோம். சில டைட்டில்களை எப்படி விட்டு வைத்தார்கள் என்று தோன்றும் அப்படியான டைட்டில் இந்தக் கடத்தல். இந்த தயாரிப்பாளருக்கு வாழ்த்துக்கள். செல்வாக்கால் படம் வெற்றி பெறுவதாகச் சொன்னார்கள். அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி படங்களை வெற்றிப்படமாக்கலாம் ஆனால் அந்த வெற்றி நிலைக்காது. எவர்கிரீன் வெற்றி என ஒன்று உண்டு, 10 வருடம் கழித்துப் படத்தின் டைட்டில் சொன்னால் நடித்த நடிகர்கள், படத்தின் கதை, சீன்  எல்லாவற்றையும் மக்கள் சொல்வார்கள் அந்த வெற்றியைச் செல்வாக்கால் தர முடியாது. சில படங்களுக்கு விளம்பரம் நிறையச் செய்ய முடியும் அவர்களுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு விளம்பரம் செய்து தியேட்டருக்கு ஆட்களை வரவைக்கிறார்கள். ஆனால் வெற்றியை மக்கள் தர வேண்டும். என்ன பிரச்சனையை வேண்டுமானாலும் படத்தில் சொல்லலாம் நமது வலியைச் சொல்லலாம் ஆனால் அதை மக்கள் அனைவரும்  கனக்ட் செய்து கொள்ள வேண்டும். ஆனால் மக்கள் சிலருக்கு வலியைத் தரும்படி படமெடுக்கக் கூடாது. வன்முறையைத் தூண்டக்கூடாது. இப்போது மக்கள் என்ன சார் இப்படி படமெடுக்கிறாங்க என்று கவலையுடன் கேட்கிறார்கள். மக்கள் சில நேரம் படம் ஏன் சரியில்லை என கேட்பார்கள் ஆனால் அதை விட, என்ன சார் இப்படி படமெடுக்கிறாங்க? எனக் கேட்பது பெரிய வலி. சினிமாவில் தாழ்த்தப்பட்டவன் என யாருமில்லை. ஜெயித்தவன் ஜெயிக்கப்போகிறவன் என இரண்டே ஜாதிதான் இருக்கிறது. தாழ்த்தப்பட்டவன் என்ற சொல்லை, எனக்குச் சொல்லவே வலிக்கிறது.

உலகமே கொண்டாடிய இசை மேதை ஜீனியஸ் தாழ்த்தப்பட்டவர், அவர் காலில் விழுந்து வணங்கவில்லையா அவரை ஜாதி பார்த்தார்களா சினிமாவில் ஜெயித்தவர் காலில் எல்லோரும் விழுவார்கள். அது தான் சினிமா, அவரை ஜாதி என்ன என பார்க்க மாட்டார்கள். என்னை அஸிடெண்டாக சேர்த்த போது நான் என்ன ஜாதி என கேட்க வில்லை. விஜய் சார் வாய்ப்பு தந்தார் அவர் என்னிடம் கதை தான் கேட்டார் ஜாதி கேட்கவில்லை, தயாரிப்பாளர் சௌத்திரி சார் ஜாதியைக் கேட்கவில்லை. வாய்ப்பு கேட்டு வருகிறவனிடம் ஜாதி என்ன என கேட்பவன் இயக்குநரே இல்லை. சிறுபான்மையினர் ஜாதி மதம் இதையெல்லாம் சினிமாவில் கலக்காதீர்கள். இப்படி ஆரம்பித்தால் தேவர் மகன் கவுண்டர் மகன் என படம் வரும் தனித்தனி ஜாதி குழுக்கள் வரும். அதையெல்லாம் குறை சொல்லவில்லை. ஜாதிப்படம் வரட்டும் ஜாதிப்பெருமை பேசட்டும் ஆனால் அடுத்த ஜாதியைக் குறை சொல்லாதீர்கள். தேவர் மகன் ஜாதிப்பெருமை பேசிய படமா அது  தேவர் ஜாதிக்குள் நடந்த கதையைச் சொன்ன படம், உண்மையில் தேவர் ஜாதியினர் தான் அந்தப்படத்தைத் திட்ட வேண்டாம் ஏனெனில் அவர்களைக் காட்டுமிராண்டி கூட்டம் என்பார் கமல், சிவாஜி அதை மறுத்துப் பேசமாட்டார் அந்தப்படத்தில் ரேவதி யார் ?, தாழ்ந்த ஜாதிப் பெண்ணைக் கல்யாணம் பண்ணியதை பற்றி யாரும் பேசவில்லை. இது போல முன்பு நடந்த கதையை இப்போது பேசி பிரச்சனை ஆக்காதீர்கள்.  சினிமாவிற்குள் ஜாதி வேண்டாம் ஜாதியைக் கலக்காதீர்கள். கடத்தல் திரைப்பட குழுவினர் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி.