முத்துக்குமார் தயாரிப்பில் செல்வம் மாதப்பன் இயக்கத்தில், ‘படிக்காத பக்கங்கள்’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய கவிப்பேரரசு வைரமுத்து,
“இந்தப் ‘படிக்காத பக்கங்கள்’ இசை வெளியீட்டு விழா மிகவும் முக்கியமான நிகழ்வு. இந்த விழாவிற்கு நான் மகிழ்ச்சியோட வந்திருக்கிறேன். வளரக்கூடிய கலைஞர்களை வாழ்த்த வேண்டும்; சாதிக்கத் துடிக்கிற கலைஞர்களை வாழ்த்த வேண்டும்; பழையன கழிய புதியன புகுகிற போது புதிய முகங்களை புதிய ஆற்றல்களை வரவேற்று வாழ்த்த வேண்டும். ஏனென்றால் எந்தப் புற்றில் எந்தப் பாம்பு என்று பார்ப்பவன் பழைய கால மனிதன், எந்தப் பூவில் எந்தத் தேனோ என்று பார்ப்பவன் புதிய காலத்து மனிதன். இந்த மலர்களில் எந்தப் பூவில் எந்தத் தேன் என்று யார் அறிவார்? அதனால் இவர்களை வாழ்த்த வந்திருக்கிறேன்.
தொழில்நுட்பக் காலம் மனிதர்களைத் தமிழ் சினிமா ரசிகர்களைத் துண்டாடி விட்டது. கைத் தொலைபேசியில் ஒரு கூட்டம் கணிப்பொறியில் ஒரு கூட்டம், ஹோம் தியேட்டரில் ஒரு கூட்டம், திரையரங்கில் ஒரு கூட்டம், ஒடிடி-யில் ஒரு கூட்டம் என மொத்தமுள்ள 35 லட்ச ரசிகர்களை 35 பிரிவுகள் துண்டாடிவிட்டன. இந்த 35 பிரிவுகளிலும் கரங்களை நுழைப்பவன்தான் வெற்றி பெற முடியும். இதனால்தான் தமிழ் சினிமா தடுமாறிக் கொண்டிருக்கிறது. இதை நாம் மீட்டெடுக்க வேண்டும்.
திரையுலகில் இது எனக்கு 44 ஆவது ஆண்டு. இந்த 44 ஆவது ஆண்டில் எனக்குப் பிடித்த சில பாடல்களில் ஒன்றாக, இந்தப் படிக்காத பக்கங்களில் எழுதியுள்ள ‘சரக்கு’ என்ற பாடலும் இடம்பெறும். இதுதான் நான் இயங்குவதற்கான காரணம். முத்துகுமார் எனக்குச் சுதந்திரத்தைத் தந்திருந்தார். அந்தச் சுதந்திரத்தை, இந்தியா அடைந்த சுதந்திரம் மாதிரி தவறாகக் கையாளவில்லை. சரியாகவே கையாண்டிருக்கிறேன். அதனால்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வந்திருக்கிறேன். என்னுடைய முன்னோடிகள் மருதகாசி, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கவியரசு கண்ணதாசன், உடுமலை நாராயணகவி, கவி கே.பி.காமாட்சி சுந்தரம் என இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். இத்தனைப் பெருமக்களும் தமிழ் பாடலில் ஒரு கருத்தைச் சொல்ல முயற்சித்திருக்கிறார்கள். படத்தோட நடிகர்கள், இயக்குநர்கள் என எல்லோரையும் மறந்து விடுகிறார்கள். ஆனால், பாட்டும் இசையும் இசையமப்பாளரும், பாட்டை எழுதியவரும் நிலைத்து நிற்கிறார்கள். பாட்டு வரிகளால், இசையால், ஒரு சமூகம் நினைக்கப்படும்.
நவீன பெண்களின் பிரச்னைகளை மைய்யப்படுத்தி, ‘படிக்காத பக்கங்கள்’ திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். கட்டாயம் படத்தைப் பாருங்கள். இதுவரை மதுவைக் கொண்டாடித்தான் பாட்டு இருந்திருக்கிறது. இந்தப் படத்தில் நான் எழுதி இருக்கும் பாட்டு முழுக்க முழுக்க மதுக்குடிக்கு விரோதனமான பாட்டு.
மதுவின் கொடுமை தெரியுமா உங்களுக்கு? ஒரு மணி நேரத்தில் 18 மதுச்சாவுகள் முடிந்திருக்கும். இந்த நிகழ்சி நடந்து முடியும் 2 மணி நேரத்தில் 32 மதுச்சாவுகள் நடந்து முடிந்திருக்கும். நான் 10 வயதில் இருந்து மதுவுக்கும் போதைக்கும் எதிரானவன். மதுவால் போதையால் எங்கள் ஊர், உறவுகள் எவ்வளவு பாதிப்புக்குள்ளானது என்பதை நான் அறிவேன். இது வரை ஒரு சொட்டு மது கூட நான் குடலில் இறக்கியதில்லை. மதுவை விட மோசமானது புகை. ஆகையால் இந்தப் பாடலை வைத்ததற்காகத் தமிழ்ச் சமூகம், இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றி செலுத்த கடமைப்பட்டிருக்கிறது.’என்றார்.