சிலை கடத்தலில் சுவாரசியம் – ‘பரம்பொருள்’ விமர்சனம்!

சரத்குமார், அமிதாஷ், காஷ்மீரா பர்தேஷி, வினோத், டி.சிவா, பாலாஜி சக்திவேல், ஸ்வாதிகா ஆகியோர் நடித்திருக்கும் படத்தினை எழுதி இயக்கியிருக்கிறார், அரவிந்த் ராஜ்.

சாவின் விழும்பில் இருக்கும் தன் தங்கையை காப்பாற்ற பணம் தேவைப்படுவதால், பூட்டியிருக்கும் வீடுகளில் திருடுகிறார், (அமிதாஷ்) ஆதி. ஒரு நாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் மைத்ரேயன் (சரத்குமார்) வீட்டினுள் திருட முயற்சிக்கும் போது அவரிடம் மாட்டிக்கொள்கிறார். அப்போது சிலை திருடி விற்கும் கும்பலுக்கும் ஆதிக்கும் இருக்கும் தொடர்பினை விசாரணையில் தெரிந்து கொள்கிறார், இன்ஸ்பெக்டர் மைத்ரேயன். இதனால், ஆதியை சிலை கடத்தலில் ஈடுபட நிர்பந்திக்கிறார். ஏன், எதற்கு? என்பதே பரம்பொருள் படத்தின் சுவாரசியமான திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!

எத்தனையோ படங்களில் சிலை கடத்தல் சம்பவங்களை பார்த்திருந்தாலும் பரம்பொருள் அதிலிருந்து வித்தியாசமாக தெரிகிறது. அதிலும், 100, 200 கோடி மதிப்புள்ள சிலைகள் குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் கஜராஜ், சொல்லும் விஷயங்கள் எல்லாமே புதிது.

படம் ஆரம்பித்த சில காட்சிகள் அடுத்து, மெல்ல மெல்ல விறுவிறுப்பு ஏறுகிறது. க்ளைமாக்ஸ் நெருங்கும் வேலையில், இன்னும் சுவாரசியம் கூடுவதுடன் அடடே.. சபாஷ் போட வைக்கிறது.

சமீப காலங்களில் சரத்குமார் நடித்து, வெளியாகும் படங்கள் பேசப்படும் படங்களாக அமைகிறது. அந்த வகையில், போர் தொழில் படத்திற்கு பிறகு மீண்டும் போலீஸ் வேடம் ஏற்றிருக்கிறார், சரத்குமார். ஆனால் வித்தியாசமான கதாபாத்திரம். போலீஸின் சங்கடங்களை வசனங்கள் மூலமாக வெளிப்படுதியிருக்கும் விதம் அருமை. பணத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில், சிறப்பாக நடித்திருக்கிறார்.

சந்தர்ப்ப சூழ்நிலைகளால் சரத்குமாரிடம் மாட்டிக்கொள்ளும் அப்பாவியாக அமிதாஷ், கதாபாத்திரத்தினை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். முழுப்படத்திலும் அப்பாவியாக நடித்துவிட்டு க்ளைமாக்ஸில் அடப்பாவியாக தோன்றும் காட்சிகள் சிறப்பு.

படத்தினை மொத்தமாக புரட்டிப்போடும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார், சிறந்த குணசித்திர நடிகராக வலம் வரும், பாலாஜி சக்திவேல். பண்பட்ட நடிப்பு.

காஷ்மீரா பர்தேஷி, வழக்கமான டெம்ப்ளேட் கதாநாயகியின் கதாபாத்திரம். அவரைப்பற்றி பெரிதாக சொல்ல எதுவும் இல்லை.

சிலை கடத்தலில் சர்வதேஷ அளவில் தொடர்பு வைத்திருக்கும் டெர்ரர் வில்லனாக வின்சென்ட் அசோகன், கோஷ்டியினர் மிரட்டுகின்றனர்.

சரத்குமார், வின்சென்ட் அசோகன் ஆகியோரின் சந்திப்பு, நம்பும் படியாக இல்லை. சிலை கடத்தல் கும்பலுக்குள் அத்தனை எளிதாக யார் வேண்டுமானாலும் நுழைய முடியுமா? போன்ற சில நம்பமுடியாத காட்சிகளை தவிர்த்து விட்டு பார்த்தால், பரம்பொருள் ஓகே தான்.

திரைக்கதைக்கு ஏற்றபடி பின்னணி இசையமத்திருக்கும் யுவன் சங்கர் ராஜாவின் இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

அநேக இரவுக்காட்சிகளை அழகாக படம் பிடித்திருக்கிறார், ஒளிப்பதிவாளர் பாண்டி குமார்.

பரம்பொருள், இது ஒரு பழி வாங்கும் கதையாக இருந்தாலும், சிலை கடத்தல் பின்னணியில் வித்தியாசமான திரைக்கதை அமைத்து, சிறப்பாக கொடுத்திருக்கிறார் இயக்குநர், அரவிந்த் ராஜ்.