‘பராரி’ – விமர்சனம்!

பராரி திரைப்படத்தினில், ஹரி சங்கர், சங்கீதா கல்யாண் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்க, அவர்களுடன் புகழ் மகேந்திரன், பிரேம் நாத், சாம்ராட் சுரேஷ், குரு ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை, இயக்குநர் ராஜு மோகனின் உதவியாளர் எழில் பெரிய வேடி இயக்கியிருக்கிறார். ஷான் ரோல்டன் இசையமைத்திருக்க, ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில், இருவேறு சாதிப்பிரிவினை சேர்ந்தவர்கள் ஒரே சாமியை வழிபடுகின்றனர். ஒரே சாமியை வழிபட்டாலும், அவர்களுக்குள் பல சாதி மோதல்கள் இருந்து வருகிறது. விவசாயக் கூலி வேலையை நம்பியிருக்கும் இவர்களின் வாழ்வாதாரத்திற்கு, கர்நாடகத்தில் இருக்கும் ஒரு ஜூஸ் ஃபேக்டரியினையே பெரிதும் நம்பியிருக்கின்றனர். இந்த இருவேறு சாதியினரும் கர்நாடகவிற்கு செல்கின்றனர். அப்போது அங்குள்ள ஒரு அரசியல்வாதியின் விபரீத பேச்சு, இனப்பிரச்சனையாக வெடிக்கிறது. ஏற்கனவே சாதியாக பிரிந்திருந்தவர்களுக்கிடையே, அங்கு நிகழும் இனப்பிரச்சனை எந்த விதமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. என்பது தான், பராரி.

முக்கிய கதாபாத்திரங்களாக நடித்த, ஹரி சங்கர், சங்கீதா கல்யாண் இருவரும் கதையினை தாங்கிப் பிடித்திருப்பதோடு, சிறப்பாக நடித்து கதாபாத்திரங்களுக்கு வலு சேர்த்துள்ளனர்.

வில்லனாக நடித்திருக்கும் புகழ் மகேந்திரன், பிரேம்நாத், சாம்ராட் சுரேஷ், குரு ராஜேந்திரன், ராஜு உள்ளிட்ட, படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் அனைவரும் இயல்பாக நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

இரு பிரிவினர்களுக்கு இடையே நடக்கும் மோதல்களை இயல்பாக காட்சிப் படுத்தியிருக்கிறார், இயக்குநர் எழில் பெரிய வேடி. குறிப்பாக வேடியப்பன் சாமியை இரு தரப்பும், அடுத்தடுத்து வழிபாடு செய்யும் காட்சியை சொல்லலாம். அதேபோல் சாதிய மோதல்களுக்குப் பின்னாலும், இன மோதல்களுக்குப் பின்னாலும் நடந்து வரும் அரசியல் பின்னணியை தைரியமாக சொல்லியிருக்கிறார். கர்நாடகாவில் நடக்கும் சம்பவங்கள் யதார்த்தமாக காட்சி படுத்தப்பட்டிருக்கின்றன. வசனங்கள் கவனிக்கும்படி இருக்கிறது.

மக்களுக்கிடையே ஜாதி, மதம், இனம் இவற்றுக்கிடையே பாகுபாடினை ஏற்படுத்தி, மக்களைப் பிரித்து, அரசியல் பெயரால் ரத்தம் குடிக்கும் அரசியல் வாதிகளை பராரி படத்தின் மூலம் காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர், அறியாமையால் இருக்கும் மக்களுக்கு வெளிச்சம் தர முயற்சித்திக்கிறார்.

ஒரு சில குறைகள் இருந்தாலும், ஒரு நல்ல முயற்சிக்கு பாராட்டினை தெரிவிக்கலாம்.

கிளைமாக்ஸ் ஏற்படுத்தும் வலி,  போலி அரசியல் வாதிகளின் மேல் வெறி ஏற்படுத்துகிறது.