‘நிறங்கள் மூன்று’ – விமர்சனம்!

‘ஐங்கரன் இன்டர்நேஷனல்’ சார்பில், கருணாமூர்த்தி தயாரித்துள்ள படம், ‘நிறங்கள் மூன்று’. எழுதி இயக்கியிருக்கிறார், கார்த்திக் நரேன். இதில், சரத்குமார் , அதர்வா முரளி, ரகுமான், துஷ்யந்த் , அம்மு அபிராமி , சின்னி ஜெயந்த், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டிஜோ டாமி ஒளிப்பதிவு செய்திருக்க, ஜாக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளார்.

நிறங்கள் மூன்று திரைப்படத்தை ஒரு பரப்பான, சஸ்பென்ஸ் த்ரில்லராக கொடுத்திருக்கிறார் படத்தில் இயக்குநர் கார்த்திக் நரேன். அது ரசிகர்களை கவர்ந்திருக்கிறதா? பார்க்கலாம். அதிகாலையில், டியூசனுக்கு சென்ற அம்மு அபிராமியை சிலர் கடத்துகின்றனர். இதை நேரில் பார்த்த அம்மு அபிராமியுடன் படிக்கும் துஷ்யந்த் பார்த்து விடுகிறார். இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லாமல் தனது நண்பர்களுடன் தேடிக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். அவர் கண்டுபிடித்தரா, இல்லையா? என்பதே நிறங்கள் மூன்று படத்தின் கதை.

அதர்வாவின் அப்பாவாகவும், போலீஸ் அதிகாரியாகவும் நடிகர் சரத்குமார், வில்லங்கமான அதிகாரியாக நடித்து பாராட்டினை பெறுகிறார். நடிகர் அதர்வா, ‘கஞ்சாக் குடிக்கி’ கதாபாத்திரத்தில், படம் முழுவதும் போதையிலேயே திரிகிறார். மற்றபடி, அவரைப் பற்றி  குறிப்பிட்டு சொல்ல எதுவுமில்லை!

நடிகர் துஷ்யந்த், பள்ளிப்படிக்கும் மாணவனாகவும், அம்மு அபிராமியை காதலிக்கும் இளைஞனாகவும் நடித்து படத்திற்கு சிறப்பு சேர்க்கிறார். அம்மு அபிராமிக்கு நடிப்பதற்கு ஒரு சில காட்சிகள் கிடைத்தாலும், அந்த காட்சிகளில் சிறப்பாகவே நடித்திருக்கிறார்.

பள்ளி ஆசிரியராகவும்,  அம்மு அபிராமியின் அப்பாவகவும் நடித்திருக்கும் நடிகர் ரகுமான், குறை சொல்ல முடியாத நடிப்பினை கொடுத்திருக்கிறார்.

படம் ஆரம்பம் முதல், இறுதி வரை மர்மமாக செல்கிறது. கதையோட்டத்தினை யூகிக்க முடியவில்லை. அந்தந்த கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களும் கதை நகர்வுக்கு உறுதுணையாக இருக்கின்றனர். நடிகர் அதர்வாவின் கதாபாத்திரத்தினை, அவ்வளவு மோசமான போதை ஆசாமியாக காட்டியிருக்க கதை வலியுறுத்தவில்லை. என்ற போதும் அது வலுக்கட்டாயமாக உருவகபடுத்தியிருப்பது போல் தெரிகிறது. முன்னேற துடிக்கும் இளைஞர்களின் மனச்சோர்வுக்கான வடிகால், போதை மட்டும் தானா!?

போலீஸ் அதிகாரி சரத்குமார், பள்ளி ஆசிரியர் ரகுமான் கதாபாத்திரங்கள் மிரட்டல்!

ஒளிப்பதிவாளர் டிஜோ டாமி, வித்தியாசமான கோணங்களில் கவனம் ஈர்க்கிறார்.

கதை, திரைக்கதைகான கச்சிதமான பின்னணி இசையை வழங்கியிருக்கிறார், இசையமைப்பாளர் ஜாக்ஸ் பிஜோய். பாடல்களில் ‘மேகம் போல் ஆகி’ பாடல் நன்றாக இருக்கிறது.

மொத்தத்தில், ‘நிறங்கள் மூன்று’ திரைப்படம், கிரைம் த்ரில்லர் ரசிகர்களுக்கு பிடிக்கும்!