நாடு – விமர்சனம்!

ஸ்ரீ ஆர்க் மீடியா சார்பில், சக்ரா மற்றும் ராஜ் தயாரித்து, எம். சரவணன் இயக்கியிருக்கும் படம், நாடு. இதில் தர்ஷன், மஹிமா நம்பியார், ஆர் எஸ் சிவாஜி, சிங்கம் புலி, அருள் தாஸ், இன்பா ரவிக்குமார், வசந்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சத்யா இசையமைத்திருக்க, சக்திவேல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

நாமக்கல் மலைப் பகுதியைச் சேர்ந்த ஒரு சிறிய மலைக்கிராமம். இங்கு மக்கள் அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் வாழ்ந்து வருகிறார்கள். போக்குவரத்து வசதிகள் அறவே அற்ற நிலையில் இருப்பதால், இங்கு வாழும் மக்களுக்கு அவசரகால முதல் உதவி சிகிச்சைக்கூட கிடைப்பதில்லை! பெயரளவில் ஆரம்ப சுகாதார நிலையம் இருக்கிறது. இந்த கிராமத்தில் இருக்கும் வசதிகளை கருத்தில் கொண்ட மருத்துவர்கள், இங்கு பணிபுரிவதை விரும்புவதில்லை. இப்படியான சூழலில் இங்கு வசித்து வரும், தர்ஷனின் தங்கை உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காத காரணத்தினால் இறக்க நேரிடுகிறது. இப்படி அடிக்கடி நிகழும் மரணங்களால் கொதிப்படையும் மக்கள் போரட்டத்தில் ஈடுபட, கலெக்டர் அருள்தாஸ் ஒரு பெண் மருத்துவர் மஹிமா நம்பியாரை நியமிக்கிறார். அவர் மக்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கிறாரா? மற்ற மருத்துவர்களை போல அவரும் சென்றுவிடுகிறாரா? என்பது தான் நாடு படத்தின் கதை.

இந்தியா, மருத்துவத்துறையில் பல சாதனைகள் நிகழ்த்தி, உலக அளவில் கவனத்தை ஈர்த்து வரும் அதே வேளையில், அடிப்படை மருத்துவ வசதிகளின்றி பல உயிர்கள் பறிபோகும் உண்மை சம்பவங்களை பத்திரிக்கை வாயிலாக படித்திருப்போம். அந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்த நாடு உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

கதையின் நாயகனாக, மலைவாழ் மக்களில் ஒருவராக நடித்திருக்கும் தர்ஷன், தனது இயல்பான நடிப்பின் மூலம், ரசிகர்கள் மனம் கவர்ந்து விடும் அவர், மிகச்சரியாக தன்னை கதாபாத்திரத்திற்குள் பொருத்திக்கொள்கிறார்.  தர்ஷனின் அப்பாவான ஆர்.எஸ்.சிவாஜி சாகும் தருவாயில், அவரை பார்த்து விட்டு கண்கலங்கிய படியே, லேசான கால் நடக்குத்துடன் வீட்டின் வாசலில் நடந்து வந்து உட்காரும் காட்சியில் தர்ஷனின் நடிப்பு, வெகு சிறப்பு! பாராட்டுக்களை அள்ளுகிறது.

மருத்துவராக நடித்திருக்கும் மஹிமா நம்பியாரும் தனது அளவான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனம் நிறைகிறார்.

தர்ஷனின் தந்தையாக நடித்திருக்கும் ஆர்.எஸ்.சிவாஜி, சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார்.

மலைக்கிராமத்தின் தலைவராக நடித்திருக்கும் சிங்கம் புலி, ‘காஃபி டே’ சென்னைவாசியாக நடித்திருக்கும் இன்ப ரவிகுமார் ஆகியோர் சில இடங்களில் சிரிக்க வைக்கின்றனர். கலெக்டராக நடித்திருக்கும் அருள்தாஸ், அவரது மனைவியாக நடித்திருப்பவர் உட்பட அனைவரும் குறை சொல்ல முடியாதபடி நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் கே.ஏ.சக்திவேலின் நேர்த்தியான ஒளிப்பதிவும், சத்யாவின் காட்சிகளுக்கேற்ற இசையும் படத்தின் பலமாக இருக்கிறது.

அடிப்படை வசதிகளற்ற கிராமங்களில், மருத்துவர்கள் மட்டுமே பணிபுரிய மறுப்பதாக காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் எம்.சரவணன், இப்படியான கிராமங்களில் அரசின் பங்கு என்ன? என்பதை சுட்டிக்காட்டத் தவறியிருக்கிறார். அதோடு ‘நீட்’ தேர்வினால் பாதிக்கப்படும் எதிர்கால மருத்துவர்களையும், அவர்களது கனவுகளுக்கான தீர்வினையும், அழுத்தமாக சொல்லாமல் போகிற போக்கில் சொல்லியிருப்பது ஏமாற்றம் தருகிறது.

‘நாடு’ இந்திய மருத்துவதுறையின் மறுபக்கம்! பயிற்சி மருத்துவர்கள் முதல், மருத்துவக் கல்வி இயக்குனர்கள் வரை அனைவரும் பார்க்க வேண்டிய படம்!