‘பயணிகள் கவனிக்கவும்’ – விமர்சனம்.

பயணிகள் கவனிக்கவும்’ ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது.

ஆல் இன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விதார்த், லக்‌ஷ்மி பிரியா, கருணாகரன் ஆகியோர் நடித்திருக்க, எஸ்.பி.சக்திவேல் இயக்கியிருக்கும் படம், ‘பயணிகள் கவனிக்கவும்’. இது மலையாளத்தில் வெற்றி பெற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்த ‘விக்ருதி’ படத்தின், மொழி மாற்றம். நேரடியாக ’ஆஹா’ஒடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. தமிழிலும் கவனத்தை ஈர்க்குமா? பார்க்கலாம்.

பல்வேறு சமூக வலைதளங்களில் பொறுப்பின்றி, உண்மை தன்மை அறியாது பதிவிடப்படும் ஒரு போட்டோ, இரண்டு குடும்பங்களின் நிம்மதியை எப்படி தொலைத்து விடுகிறது, என்பது தான் ‘பயணிகள் கவனிக்கவும்’படத்தின் கதை.

வாய் பேசமுடியாத விதார்த், ஆஸ்பத்திரியில் உடல்நலமில்லாத தனது குழந்தையை தூக்கமின்றி தொடர்ந்து கவனித்து வருகிறார். இதன் காரணமாக அலுவலகத்திற்கு செல்லும் போது தான் பயணிக்கும் மெட்ரோ ரயிலில் தன்னையும் அறியாமல் தூங்கிவிடுகிறார்.

இதை சோஷியல் மீடியா ‘லைக்’ பைத்தியமான கருணாகரன் போட்டோ எடுத்து அப்லோட் செய்கிறார். அதனால், ‘லைக்’ குகளும், ‘குடித்துவிட்டு போதையில் கிடப்பதாக’ உள்ளிட்ட, கமென்ட்ஸ் களும் புயல் வேகத்தில் சமூக வலை தளங்களை ஆக்கிரமிக்கிறது. இதன் காரணமாக நிம்மதியையும், வேலையையும் இழக்கிறார் விதார்த். இது பதிவிட்ட கருணாகரன் வாழ்க்கையும் குடும்பத்தையும் சேர்த்து பாதிக்கிறது.  இந்த இருவருடைய வாழ்க்கையிலும் தொலைந்து போன சந்தோஷமும், நிம்மதியும் கிடைத்ததா.. இல்லையா.. என்பது தான், ‘பயணிகள் கவனிக்கவும்’படத்தின் கதை, நெகிழ்ச்சியான திரைக்கதை மற்றும் அழகான க்ளைமாக்ஸ்!

விதார்த் நடிக்கத் தெரிந்த நடிகர்களில் ஒருவர் என்பதை, தன்னுடைய எல்லாப்படங்களிலும் நிரூபித்து வருகிறார். ‘அன்பறிவு’ படத்தில் வித்தியாசமான வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டிய அவர் இந்தப்படத்தில் வாய்பேச முடியாத கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து இருக்கிறார். அவருடைய ஓவ்வொரு அசைவும் மிக நேர்த்தி. ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்டி நடித்து வரும் விதார்த்துக்கு பாராட்டுக்கள்.

சோஷியல் மீடியா பைத்தியமாக நடித்திருக்கும் கருணாகரன், அந்த வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தி போகிறார். போதிய அறிவின்மையாலும், பொறுப்பின்மையாலும் விளையாட்டுத்தனமாக பதிவிட்டுவிட்டு, பிறகு பாதிப்பை எண்ணி பயப்படும் காட்சிகளில் சிறப்பாகவும், எதார்த்தமாகவும் நடித்துள்ளார்.

இவர்களைப்போலவே விதார்த்தின் மனைவியாக நடித்திருக்கும் லக்‌ஷ்மி பிரியா, விதார்த்தின் மகனாக நடித்திருக்கும் சிறுவன் சரண், மகளாக நடித்திருக்கும் சிறுமி மதி மற்றும் கருணாகரனுக்கு ஜோடியாக நடித்திருக்கும் மசூம் ஷங்கர் என ஒவ்வொருவரும் சிறப்பாகவே நடித்துள்ளனர்.

கதாபாத்திரங்களுக்கேற்ற நடிகர்களை தேர்வு செய்து நடிக்க வைத்திருக்கும் இயக்குனர் எஸ்.பி.சக்திவேல், ‘விக்ருதி’ படத்தில் இருந்து சிற்சில மாற்றங்கள் செய்து சிறப்பாகவே இயக்கி இருக்கிறார். ஒளிப்பதிவு, இசையமைப்பும் சிறப்பாகவே இருக்கிறது.

பயணிகள் கவனிக்கவும்’ ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது.