இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் முதன் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து இயக்கியுள்ள படம் ‘பேட்ட’. இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது. அதை பூர்த்தி செய்திருக்கிறதா?
ரேக்கிங்கில் முதலிடத்தை பிடிக்க முன்னேறி கொண்டிருக்கும் காலேஜ் வார்டனாக நியமிக்கப்படுகிறார் ரஜினிகாந்த். அவர் காலேஜில் நடக்கும் கேன்டீன் ஊழல்களை ஒழித்து, ரேக்கிங்கில் ஈடுபடும் மாணவர்களுக்கு தண்டனையும் கொடுக்கிறார்.
இந்நிலையில் ரஜினிகாந்தையும், ஆஸ்திரேலியாவிலிருந்து வந்து, அதே காலேஜில் படிக்கும் சனந்த் ரெட்டியையும் ஒரு கும்பல் கொலை செய்ய முயற்சிக்கிறது. இவர்களை கொலை செய்ய முயற்சிப்பவர்கள் யார்? ஏன்? என்ற கேள்விகளுக்கு விடையாகிறது ‘பேட்ட’ படத்தின் திரைக்கதை.
ரஜினிகாந்தே மறந்து போயிருந்த அவரோட நடை, நக்கல், ஸ்டைல் எல்லாவற்றையும் பக்கா மாஸாக திரைக்கு கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் கார்த்தி சுப்பராஜ். 90 களில் அதிரவைத்த ரஜினியின் மொத்த மாஸூம் படம் முழுவதும் நிரம்பியிருக்கிறது. ரஜினிகாந்தின் ரசிகர்களுக்காக படைக்கப்பட்ட மிகப்பெரிய ஒரு விருந்து தான் இந்தப்படம். காளி மற்றும் பேட்ட இரண்டு கேரக்டர்களிலுமே எனெர்ஜெடிக் யங் மேனாக வலம் வருகிறார் ரஜினி. அதிலும் சிம்ரனுடன் அடிக்கும் காதல் லூட்டி சூப்பர். அதே பழைய குறும்பு. பாபி சிம்ஹாவின் வீட்டுக்குள் நுழைந்து அவரின் அம்மாவிடம் டீ கேட்டுவிட்டு, ரௌடிகளை அடிப்பது மரண மாஸ்.
தமிழ் பேசும் வட இந்தியராக வெகு பொருத்தமான கேரக்டரில் விஜய் சேதுபதி. துப்பாக்கி பிடித்து சுடுவதிலும், பப்புக்குள் நுழைந்து காதலர்களை அடிக்கும் போதிலும் அவரோட நடிப்பு அப்ளாசுகளை அள்ளுகிறது. அவர் ஒவ்வொரு படத்திலேயும் தன்னுடைய வித்தியாசமான நடிப்பால் தனித்து நிற்கிறார். தமிழ் சினிமாவின் ஒரு அடையாளமாகவே மாறியிருக்கிறார்.
நவாசுதின் சித்திக் வழக்கமான நடிப்பில் மிரட்டுகிறார். சசிகுமார், பாபிசிம்ஹா, நரேன் ஒவ்வொருவரும் சிறப்பு. சிம்ரன் இந்த படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் வலம் வருவார்.
த்ரிஷா, ரஜினிகாந்துடன் ஒன்றிரண்டு காட்சிகளில் மட்டுமே வந்து போகிறார். அதை தவிர அவரைப் பற்றி சொல்ல ஒன்றுமில்லை.
முதல் பாதி முழுக்க ரசிகர்களை உற்சாகமாக வைத்திருக்கும் இயக்குனர் கார்த்தி சுப்பராஜ் இரண்டாம் பாதியில் சற்று ஏமாற வைத்திருக்கிறார். துப்பாக்கி சுடும் காட்சிகள் ரொம்பவே சோர்வடைய செய்கிறது.
திருவின் ஒளிப்பதிவு படத்திற்கான பெரிய பலம்., அனிருத்தின் பின்னணி இசை சில இடங்களில் வசங்களை கேட்கவிடாமல் செய்து விடுகிறது. பாடல்களுக்கு தியேட்டரில் ரகளை..
படத்திற்கு தடையாக இருப்பது துப்பாக்கி சண்டைக் காட்சிகளும், படத்தின் நீளமும்.