விஸ்வாசம் – விமர்சனம்

நான்காவது முறையாக அஜித்குமாரும் சிவாவும் இணைந்துள்ள படம், ‘விஸ்வாசம்’.  இந்தப்படம் ரசிகர்களுடைய பெரிய எதிர்பார்ப்புக்கு நடுவே வெளியாகியுள்ளது. இதற்கு முன் அஜித்தை வைத்து ‘வீரம்’  படத்தில் அண்ணன், தம்பி செண்டிமெண்டையும் ‘வேதாளம்’படத்தில் தங்கச்சி செண்டிமெண்டையும், ‘விவேகம்’படத்தில் கணவன், மனைவி செண்டிமெண்டையும் படமாக்கிய சிவா ‘விஸ்வாசம்’ படத்திலும் தன்னுடைய ட்ரேட் மார்க் அப்பா, மகளுக்கிடையான செண்டிமெண்டை படமாக்கியிருக்கிறார்.

தேனி மாவட்டம், கொடுவிளார் பட்டி கிராமத்தில் சொந்தமாக ரைஸ் மில் நடத்தி வருபவர் தூக்குத்துரை (அஜித்). அடாவடி, அட்ராசிட்டிக்கு பெயர் போன இவர், தன்னுடைய சகாக்களுடன் தினம் ஒரு பஞ்சாயத்து பண்ணிக் கொண்டு சுற்றி வருகிறார்.

இந்நிலையில் டாக்டர். நிரஞ்சனா (நயன் தாரா), கொடுவிளார் பட்டிக்கு மருத்துவ முகாம் நடத்த வருகிறார். அவர் தூக்குத்துரையை சந்திக்கும் முதல் சந்திப்பிலேயே லடாய் ஆகிறது. பிறகு அது காதலாகி இருவரும் கல்யாணம் செய்து கொள்கின்றனர்.

மனைவி, குழந்தை என குடும்பமான பின்னரும் தூக்குத்துரையின் அட்ராசிட்டி குறையவில்லை. அடிதடிக்கு போகும்போது கூட தன்னுடைய மகளை கையில் வைத்துக்கொண்டே சண்டையிடுகிறார்.  இதனால் தூக்குத்துரைக்கும், நிரஞ்சனாவுக்கும் பிரிவு ஏற்பட்டு, தன்னுடைய மகளுடன் மும்பை சென்று தனித்து வாழ்கிறார் நிரஞ்சனா.

கொடுவிளார் பட்டியில் 10 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் திருவிழாவில் நிரஞ்சனா கலந்து கொள்ள வேண்டுமென்று தூக்குத்துரையின் உறவினர்கள் தூக்குத்துரையை வற்புறுத்துகிறார்கள். இதனால் தூக்குத்துரை மும்பை செல்கிறார். அங்கே தூக்குத்துரையின் மகளை ஒரு கும்பல் கொலை செய்ய துரத்துகிறது. இதன் பின்னர் நடக்கும் சம்பவங்களே படத்தின் திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்.

அஜித்தின்  ரசிகர்கள் மற்றும் பெண்கள், குழந்தைகள் ஆகியோரை குறிவைத்து திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குனர்  சிவா. படத்தின் முதல் பகுதியில் காதல், காமெடி, சின்ன அடிதடி என அமைத்து இரண்டாம் பகுதியில் அதிரடி ஆக்‌ஷன், கண்களை கசிய வைக்கும் செண்டிமென்ட் என கொடுத்து அஜித் ரசிகர்களையும், பெண்களையும் திருப்தி படுத்தியிருக்கிறார்.

தம்பி ராமைய்யா, ரோபோ ஷங்கர், யோகி பாபு ஆகியோர்களை வைத்து இன்னும் காமெடியில் கவனம் செலுத்தியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். இரண்டாம் பகுதியில் வரும் விவேக் சம்பந்தப்பட்ட காமெடி காட்சிகள் ஓரளவுக்கு சிரிக்க வைக்கிறது.

பார்த்து பழகிப் போன கதையும், காட்சிகளும் சோர்வடைய செய்கிறது.

நான்காவது முறையாக அஜித்தும், சிவாவும் இணைந்து ஏற்படுத்திய பெரிய எதிர்பார்ப்பு சற்று ஏமாற்றம் தான்.