‘நேர்கொண்ட பார்வை’ சட்ட விரோத ரிலிஸூக்கு தடை வாங்கிய போனிகபூர்

டிஜிட்டல் தொழிநுட்பம் அசூரத்தனமாக வளர்ந்து நிற்கும் இந்தக் காலக்கட்டத்தில் திரையுலகிற்கு பெரும் சவாலாக இருந்து வருவது பைரஸி எனும் அரக்கன் தான். இந்திய மொழிப்படங்களில் அதிகம் பாதிக்கப்படுவது ஹிந்தி மற்றும் தமிழ் மொழிப்படங்களே.

தமிழ் மொழிப்படங்களில் விஜய், அஜித் படங்கள் என்றால் ரிலீஸான அன்றே வெளியிடும் அவலம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இந்த விஷயத்தில் ‘தமிழ்ராக்கர்ஸ்’ உள்ளிட்ட பல இணைய தளங்கள் தொடர்ந்து சட்ட விரோதமாகவே நடந்து வருகின்றன.

நடிகர் விஷால் ‘தமிழ்ராக்கர்ஸை ஒழிப்பேன் அதுவே என் முதல் வேலை’. என சவால் விட்டு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவிக்கு வந்து பல கோடிகளை காவு கொடுத்தது தான் மிச்சம். விஷாலால் இந்த விஷயத்தில் ஒன்றுமே செய்ய முடியவில்லை.

பெரிய முதலீட்டில் படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் அவ்வப்போது நீதிமன்றத்தின் மூலம் பைரஸியை ஓரளவு கட்டுப்படுத்தி வருகின்றனர். அஜித் நடித்துள்ள ‘நேர்கொண்ட பார்வை’  படம் வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனால் இப்படத்தின் தயாரிப்பாளர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

‘போனிகபூரின் ‘பே வியூ புராஜெக்ட்ஸ்’  நிறுவனம் தொடர்ந்த வழக்கு  இன்று சென்னை உயர் நீதி மன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்னிலையில் வந்தது  அப்போது அவர் ‘நேர்கொண்ட பார்வை’  படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு  தடை உத்தரவை பிறப்பித்தார். இதனால் தயாரிப்பு தரப்பினர் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.