சைத்தான், டேவிட், வாஷிர், ஷோலோ ஆகிய படங்களை இயக்கிய, பிஜோய் நம்பியார் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம், போர். இதில் அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் டி.ஜே.பானு, சஞ்சனா நடராஜன், மெர்வின் ரொஸாரியோ மற்றும் பலர் நடித்துள்ளனர்.
போர், தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகியிருக்கிறது. இத்திரைப்படத்தை T Series மற்றும் Roox Media இணைந்து தயாரித்திருக்கின்றனர்.
சீனியர் மாணவர் அர்ஜூன் தாஸ், ஜூனியர் மாணவர் காளிதாஸ் ஜெயராம், இருவரும் ஒரு போர்டிங் ஸ்கூலில் படித்துவந்த போது, காளிதாஸ் ஜெயராம், சீனியர் மாணவர்களால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகிறார். இதற்கு அர்ஜூன் தாஸ் தான் காரணம் என, காளிதாஸ் ஜெயராம் நினைக்கிறார். அதோடு ஸ்கூலை விட்டும் செல்கிறார். சில வருடங்களுக்கு பிறகு, அர்ஜூன் தாஸ் படித்து கொண்டிருக்கும், ஒரு இன்டக்ரேட்டட் காலேஜ் கேம்பசில் சேர்கிறார், காளிதாஸ் ஜெயராம். போர்டிங் ஸ்கூலில் தனக்கு நடந்த சம்பவத்திற்கு, பழி தீர்க்க நினைத்து அர்ஜூன் தாஸிடம் மோதுகிறார். இதுவே போர் படத்தின் கதை. இதில் வழக்கமான கல்லூரி தேர்தல், அரசியல் ஊடுருவல், காதல், மோதல், கலாட்டா இவைகளை சினிமா ஃபார்முலாவிற்கு அப்பாற்பட்டு, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார், இயக்குநர் பிஜோய் நம்பியார்.
அர்ஜூன் தாஸ், வழக்கத்தை விட நடிப்பில் மிரட்டியிருக்கிறார். கோபக்கார இளைஞராக அவர் திரையில் தோன்றும் போதெல்லாம், திரையில் தீப்பிடிப்பதை போன்ற உணர்வினை ஏற்படுத்துகிறார். ஒவ்வொரு காட்சியிலும் அனல் பறக்கிறது.
இதுவரை சாஃப்ட்டான கேரக்டர்களில் நடித்து வந்த காளிதாஸ் ஜெயராம், ரக்கடான கேரக்டரில் நடித்து, ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார். அவருடைய நடிப்பில் நிறைய வித்தியாசம். இந்தப்படம் அவருக்கு முக்கியமான படமாக இருக்கும்.
மற்றபடி, டி.ஜெ.பானு, சஞ்சனா நடராஜன்,அம்ருதா ஸ்ரீனிவாசன், மெர்வின் ரோசரியோ, ஜான் விஜய் உள்ளிட்டவர்களும் தேவைக்கேற்ப நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர்கள் ஜிஷ்மி காளித் மற்றும் பிரஸ்லி ஆஸ்கார் டிசோசா ஆகியோரது ஒளிப்பதிவு படத்தின் பலமாக இருக்கிறது. குறிப்பாக சண்டைக்காட்சிகளைச் சொல்லலாம்.
இசையமைப்பாளர்கள் சஞ்சித் ஹெக்டே, துருவ் விஸ்வநாத், கவுரவ் காட்கிண்டி ஆகியோரின் இசையில் பாடல்கள் பரவாயில்லை.
மாடர்ன் டேப் ஸ்கோர்ஸ்-ன் (ஹரிஷ் வெங்கட் & சச்சிதானந்த் சங்கரநாராயணன்) பின்னணி இசை ஒரு சில இடங்களில் காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளது.
படத்தொகுப்பாளர் பிரியங் பிரேம் குமாருக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள்.
இயக்குநர் பிஜாய் நம்பியார் கதாபாத்திரங்களையும், திரைக்கதையையும் வடிவமைப்பதில் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார். முக்க்கியமான கதாபாத்திரங்களுக்கு இடையே நடக்கும் பழி வாங்கும் மோதல், ரேக்கிங், சாதிய பாகுபாடு, கல்லூரி தேர்தல், காதல் என எல்லாவற்றையும் திரைக்கதைக்குள் திணித்தது, படத்தின் பலவீனம். பிரமாண்டத்தினை காட்சிப் படுத்தியவர், திரைக் கதையையும் தெளிவாக காட்சிப் படுத்தியிருக்கலாம்.
மொத்தத்தில், ‘போர்’ எப்படியிருக்குன்னா.., ”கையில லக்கேஜோட, கிளாம்பாக்கத்தில் பஸ்ஸைத் தேடி அலைஞ்ச மாதிரியிருக்கு!”