ஒரே விதமான, காலங்காலமாக லவ்வை ப்ரபோஸ் செய்யும் முறையிலிருந்து மாறுபட்ட விதமாக லவ்வை ப்ரபோஸ் செய்யும், ஜாலியான திரைக்கதையில் அமைக்கப்பட்டிருக்கும் படமே பிரேமலு.
நாயகன் நஸ்லென், கல்லூரியில் படிக்கும்போது காதல் தோல்வி. இதன் காரணமாக லண்டன் செல்ல முயற்சிக்கிறார், அதுவும் தோல்வி. இதனால், தனது நண்பருடன் ஹைதராபாத்துக்கு செல்கிறார். அங்கே நாயகி மமீதா பைஜுவை சந்தித்த பொழுதே அவர் மீது காதல் ஏற்படுகிறது. இதனால், தனது காதலை மமீதா பைஜுவின் தோழியின் மூலம் காதலை தெரிவிக்கிறார். மமீதா பைஜூ ஏற்கனவே அலுவலகத்தில் ஒருவருடன் காதலில் இருப்பதா அவர் தெரிவிக்கிறார். அதற்கு பிறகும் நஸ்லென், மமீதா பைஜு மீது காதல் கொண்டு அவர் பின் செல்கிறார். இதற்கு பிறகு, என்ன நடந்தது? என்பதை ஜாலியாக சொல்வது தான், ‘பிரேமலு’.
வழக்கமான காதல் கதைகளிலிருந்து சற்றே மாறுபட்ட, ஜாலியான திரைக்கதையின் மூலம் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்கள்.
நாயகன் நஸ்லென், கதாபாத்திரத்திற்கேற்ற தேர்வு. கண்டவுடன் காதல் கொள்வது, காதல் தோல்வியில் வாடுவது, நண்பர்களுடன் புலம்புவது, ஜாலியாக சுற்றுவது என, அந்த வாலிப வயதுக்கேற்ற துடுக்குடனும், தோற்றத்துடனும் படம் முழுவதும் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துக்கொள்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் மமீதா பைஜு, இவரும் கதாபாத்திரத்திற்க்கான சரியான தேர்வு. ஒவ்வொரு காட்சியிலுமே சிறப்பாக நடித்திருக்கிறார். விரைவில் தென்னிந்திய சினிமாவில் அனைவரும் பாராட்டும்படியாக வலம் வருவார். நஸ்லென், மமீதா பைஜு இருவருக்குமான கெமிஸ்ட்ரி சூப்பர்!
நஸ்லென், மமீதா பைஜு இருவருடனும் பயனிக்கும், நாயகனின் நண்பனாக நடித்திருக்கும் சங்கீத் பிரதாப், தன்னுடைய காமெடிகளுடன் ரசிகர்களை சிரிக்க வைக்கிறார். அதேபோல், ஷ்யாம் மோகனின் வில்லத்தனமும் சிரிக்க வைக்கிறது.
இவர்களோடு நடித்திருக்கும் அகிலா பார்கவன், மீனாட்சி ரவீந்திரன், சமீர் கான், அல்தாப் சலீம் ஆகியோரும் திரைக்கதைக்கு பெரிதும் உதவியிருப்பதோடு சிறப்பாகவும் நடித்திருக்கிறார்கள்.
திரைக்கதை பயணிக்கும் சென்னை, ஐதராபாத், கேரளப் பகுதிகளை ஒளிப்பதிவாளர் அஜ்மல் சாபு, அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
விஷ்னு விஜயின் இசையும் படத்திற்கு சிறப்பு சேர்க்கிறது.
கிரண் ஜோஷியுடன் இணைந்து, கதை, திரைக்கதை எழுதியிருக்கும் இயக்குநர் கிரிஷ் ஏ.டி, பிரேமலு படத்தினை, இளைஞர்கள் கொண்டாடும் ஜாலியான காதல் படமாக கொடுத்திருக்கிறார்.
‘பிரேமலு’, ஜாலியான காதல் படம்.