கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர், புனித் ராஜ்குமார். இவர் மறைந்த பழம்பெரும் நடிகர் ராஜ்குமாரின் இளைய மகன். தினந்தோறும் உடற்பயிற்சி செய்யும் பழக்கமுடையவர். இன்று காலை வழக்கம் போல் உடற் பயிற்சி செய்து கொண்டிருந்தார்.
இன்று காலை 11 மணியளவில் உடற் பயிற்சி செய்து கொண்டிருக்கும்போது மயங்கி விழுந்த நிலையில், பெங்களூரூவில் உள்ள ‘விக்ரம்’ தனியார் மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், புனித் ராஜ்குமாருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டிருந்த நிலையில், புனித் ராஜ்குமார் சிகிச்சை பலனின்றி காலமானார்.
முன்னதாக கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, மருத்துவமனைக்கு நேரில் சென்று புனித் ராஜ்குமாரின் உடல்நிலை குறித்து விசாரித்தது குறிப்பிடத்தக்கது.
மறைந்த புனித் ராஜ்குமாருக்கு வயது 46. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி,பின்னர் கதாநாயகனாக உயர்ந்து பல வெற்றிப்படங்களைக் கொடுத்தவர்.
புனித் ராஜ்குமாரின் மறைவிற்கு பல தரப்புகளிலிருந்து இரங்கல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.