‘சந்தமாமா’ கதைகளின் மாய உலகம்! 2 பாகங்களாக வரும் சந்தீப் கிஷனின் ‘கரிகாலா’!

‘ஷம்பாலா’ பட இயக்குநர் யுகேந்தர் முனி இயக்கத்தில், சந்தீப் கிஷன் போர்வீரனாக அவதாரம் எடுத்துள்ள ‘கரிகாலா’ திரைப்படத்தின் பிரம்மாண்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இரண்டு பாகங்களின் அதிரடி ரிலீஸ் தேதி எப்போது?

தமிழ் மற்றும் தென்னிந்திய திரையுலகில் அசாத்திய கற்பனை உலகை உருவாக்கி ரசிகர்களை மிரள வைத்த ‘ஷம்பாலா’ பட இயக்குநர் யுகேந்தர் முனி, தனது அடுத்த மாஸ்டர்பீஸ் ஆட்டத்தைத் தொடங்கிவிட்டார். ஷைனிங் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் மகிதர் ரெட்டி மற்றும் ராஜசேகர் அன்னபிமோஜு தயாரிப்பில், ஆக்‌ஷன் ஹீரோ சந்தீப் கிஷன் நடிப்பில் பான்-இந்தியா அளவில் உருவாகும் பிரம்மாண்ட சோஷியோ ஃபேண்டஸி திரைப்படத்திற்கு ‘கரிகாலா’ (Karikala) என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஒட்டுமொத்த இந்தியச் சினிமா ரசிகர்களும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த இப்படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகி இணையதளங்களை அதிரவைத்து வருகிறது.தற்போது வெளியாகியுள்ள இந்த ‘கரிகாலா’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், பார்ப்பவர்களை அச்சு அசலாக ஒரு மாயாஜாலக் கோட்டைக்குள் அழைத்துச் செல்கிறது. அடர்ந்த இருண்ட மர்மக் காட்டுப் பின்னணியில், கையில் ஒரு பிரம்மாண்ட வாளை ஏந்தியபடி, முரட்டுத்தனமான போர்வீரராகக் குதிரை மீது அமர்ந்து சீறிப்பாய்கிறார் சந்தீப் கிஷன். அவருக்கு இணையாக அருகில் பயங்கரமாகக் கர்ஜித்தபடி பாய்ந்து வரும் ஒரு கம்பீரமான சிங்கம் பார்ப்பவர்களை உறைய வைக்கிறது.

சிறுவயதில் நாம் படித்து ரசித்த ‘சந்தமாமா’ கதைகளின் உலகை அடிப்படையாகக் கொண்டு, மந்திர சக்திகள், காலத்தால் மறக்கப்பட்ட ராஜ்ஜியங்கள், சிங்கங்கள் மற்றும் ஓநாய்கள் நிறைந்த ஒரு புதிய பிரம்மாண்ட உலகத்தை, இன்றைய அதிநவீன ஹாலிவுட் தர விஷுவல் எஃபெக்ட்ஸ் (VFX) தொழில்நுட்பத்துடன் இயக்குநர் திரையில் உயிர்ப்பிக்கவுள்ளார்.இப்படத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க கதாபாத்திரத்திற்காக நடிகர் சந்தீப் கிஷன் தனது திரைப்பயணத்திலேயே இதுவரை இல்லாத ஒரு மிகப்பெரிய உடல் மாற்றத்தை மேற்கொண்டுள்ளார். பிரத்யேக ஆடை வடிவமைப்பு மற்றும் அசாத்திய உடல் மொழியுடன் ஒரு பவர்ஃபுல் போர்வீரராக அவர் திரையில் விஸ்வரூபம் எடுக்கிறார்.

இப்படத்திற்குப் பிரவீன் பங்காரி ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரவண் கட்டிகனேனி படத்தொகுப்பு பணிகளைக் கவனிக்கிறார். துள்ளலான இசையால் ரசிகர்களைக் கவரும் ஸ்ரீசரண் பாகலா இந்த ஃபேண்டஸி படத்திற்கு இசையமைக்கிறார். மேலும், திரையரங்குகளை அதிரவைக்கும் சண்டைக் காட்சிகளை ஆக்‌ஷன் மாஸ்டர் ராஜ்குமார் சிந்தலா வடிவமைத்துள்ளார்.அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியாக, ‘கரிகாலா’ திரைப்படம் இரண்டு அத்தியாயங்களாக (Two Chapters) வெளியாகவுள்ளது என்ற மாஸ் செய்தியைப் படக்குழு உடைத்துள்ளது.

அதன்படி, இதன் முதல் பாகம் வரும் 2027-ஆம் ஆண்டு ஜூலை 2-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து, கதையின் இறுதி முடிவைச் சொல்லும் இரண்டாம் பாகம் அதே ஆண்டு 2027 அக்டோபர் 28-ஆம் தேதி திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் தேதிகள் லாக் செய்யப்பட்டுள்ளன. இந்தியச் சினிமாவில் சோஷியோ ஃபேண்டஸி ஜானருக்கு ஒரு புதிய அடையாளத்தை இந்தத் திரைப்படம் உருவாக்கும் எனத் திரையுலகினர் பெரிதும் நம்புகின்றனர்.