ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் – விமர்சனம்

மயில்சாமியின் மகன் அறிமுகமான ‘கனவுக் கொட்டகை’ படத்தினை இயக்கியிருந்த அரிசில் மூர்த்தியின் அடுத்த படமே, ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’. ‘2D ENTERTAINMENT’ நிறுவனம் சார்பில் சூர்யா – ஜோதிகா தயாரித்துள்ளனர்.

மிதுன் மாணிக்கம் ,வடிவேல் முருகன், ரம்யா பாண்டியன் ,வாணி போஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.

‘2D ENTERTAINMENT’ நிறுவனம் தயாரிப்பில் வெளியாகும் படங்கள்  அனைத்தும் ரசிகர்களிடையே தனிக்கவனத்தை பெறும். அப்படி இந்த , ‘ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’ படம் தனிக்கவனத்தை பெற்றுள்ளதா.. பார்ப்போம்.

ராமே ஆண்டாலும்  சரி, ராவணே ஆண்டாலும் சரி அடித்தட்டு மக்களுக்கு கிடைக்கவேண்டிய அடிப்படை வசதிகள், உரிமைகள் எதுவும் எளிதில் கிடைப்பதில்லை என்ற விதத்தில் திரைக்கதை அமைத்துள்ளார், இயக்குனர் அரிசில் மூர்த்தி.

மிதுன் மாணிக்கம், ரம்யாபாண்டியனை கரம்பிடிக்கும்போது அவருடன் இரண்டு அழகிய காளை கன்னுக்குட்டிகளும் சீதனமாக கிடைக்கிறது. இருவரும் அதை தன்னுடைய பிள்ளைகளைப் போலவே வளர்த்து வருகின்றனர். வளர்ந்தவிட்ட நிலையில் இரண்டு காளைகளும் காணாமல் போகிறது. அதை தேடி அலையும் அவர்களுக்கு அவைகள் கிடைத்ததா.. இல்லையா? என்பது தான் கதை.

மக்களுக்கான எல்லாத் திட்டங்களும் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தாமல் நடந்த அட்டூழியங்களை காட்சிபடுத்தியிருப்பது சிறப்பு. இன்றைய நகைக்கடன் திட்ட ஊழல் பல்லிளிப்பது போல்! பலே.. சூப்பர்.

எத்தனை அரசுகள் வந்தாலும், மாறினாலும் மக்களுக்கு எந்த நன்மையும் போராடாமல் கிடைக்காது என்பதை அழுத்தமாக சொல்லியதற்காகவும் பாராட்டலாம்.

நல்ல திரைக்கதையின் மூலம் ஆண்ட, ஆளும் அரசுகளை நடுநடுங்கச்செய்திருக்கலாம். ஆனால், கதைக்கேற்ற திரைக்கதை அமைக்க அரிசில் மூர்த்தி திணறியிருக்கிறார். அதீத மிகைபடுத்தப்பட்ட காட்சிகள். கூடவே சிறுபிள்ளைத்தனமான காட்சியமைப்பு, முரண்பாடான காட்சியமைப்புகள், பொருத்தமற்ற உரையாடல் என படம் முழுவதும் விரவிக்கிடக்கிறது.

மிதுன்மாணிக்கத்தின் கதாபாத்திரச் சித்திரிப்பு குழப்பமாக இருக்கிறது. காளைகள் காணாமல் போன நிலையில் ‘போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட்’ கொடுக்கும் முதல் காட்சியிலிருந்து படம் முடியும்வரை அப்பட்டமான மிகைகள்!

‘காளைகளின் காலில் லாடம் அடிக்க விடாமலும், காதில் அடையாள முத்திரை பதிக்கும்போதும் அழுதுபிரளும் ஹீரோ மிதுன்மாணிக்கத்திற்கு இவைகளெல்லாம், கிராமத்தில் ஒரு வெகு சாதரண நடைமுறை அத்தியாவசியம் என்பது தெரியாமல் போனது ஏனோ?

சீமானை கிண்டல் செய்யும் காட்சி, விவாசய சங்கத்தினை இழிவுபடுத்தும் காட்சி, வட இந்திய கடைக்காரரை மிரட்டி செல்லாத 1000 ரூபாயை செல்ல வைக்கும் காட்சி போன்ற பல காட்சிகளால் கதைக்கும், திரைக்கதைக்கும் என்ன பலன்? தெரியவில்லை!

இதற்கு பதிலாக காளைகளுக்கும் அவர்களுக்கும் உள்ள பாசம் பற்றி சொல்லியிருக்கலாம். அதை பற்றிய காட்சிகள் இல்லாததால், காளைகள் தொலைந்த போதும் வருத்தம் ஏற்படவில்லை. கிடைத்த போதும் மகிழ்ச்சி ஏற்படவில்லை.