இராமநாதபுர மாவட்டம், ஏனாதி கிராமத்தில் வசித்து வரும் பிரபுவும், இளவரசுவும் இணை பிரியா நண்பர்கள். சாதிய வேறுபாடில்லாமல் இருந்து வருகின்றனர். தங்களது சமூகத்திற்கான தலைவர்களாகவும் இருக்கின்றனர். பிரபுவின் கட்டுப்பாட்டில் மொத்த ஊரும் இருந்து வருகிறது.
இவர்களைப்போலவே இரு வேறு சாதிப்பிரிவினர்களான ஷாந்தனுவும், சஞ்சய் சரவணனும் நெருக்கமான நண்பர்களாக பழகி வருகின்றனர்.
சாதிய பாகுபாடின்றி மொத்த ஊரும் இருப்பதால் ஆளும்கட்சியை சேர்ந்த மந்திரி பி.எல்.தேனப்பன், எம் எல் ஏ அருள்தாஸின் உதவியோடு இருவேறு சாதி பிரிவினர்களுக்கிடையே சாதிய மோதலை உருவாக்குகின்றார். இதன் மூலம் கொலைகள் நடக்கிறது. நண்பர்களான ஷாந்தனுவும், சஞ்சய் சரவணனும் நேருக்கு நேர் மோதிக்கொள்கின்றனர். ஏன்? எதற்கு? என்பதே ராவண கோட்டம் படத்தின் கதை.
இதுவரை சாக்லேட் பாயாக நடித்து வந்த ஷாந்தனு கரடு, முரடான கிராமத்து இளைஞனாக நடித்திருக்கிறார். தோற்றத்திலும் நடிப்பிலும் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். இவருக்கும் ‘கயல்’ ஆனந்திக்குமான காதல் காட்சிகளில் இளமை. அடிதடியிலும், லவ் பண்ணுவதிலும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
‘கயல்’ ஆனந்தி, அவரது வழக்கமான நடிப்பிலும் ,வசீகர சிரிப்பிலும் ரசிகர்களை கவருகிறார்.
ஷாந்தனுவிற்கு நண்பனாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் சஞ்சய் சரவணன், முடிந்த அளவிற்கு நடித்திருக்கிறார். அறிமுக நடிகர் என்பது அவரது நடிப்பில் தெரிகிறது.
பிரபு, இளவரசு இருவரும் தங்களது அனுபவப்பூர்வ நடிப்பின் மூலம் பரிணமிக்கிறார்கள்.
அமைச்சராக நடித்திருக்கும் பி.எல்.தேனப்பன், இவருடைய அல்லக்கை எம்.எல்.ஏ-வாக நடித்திருக்கும் அருள்தாஸ் இருவரும் கதாபாத்திரத்திற்கு சரியான தேர்வு.
ஒளிப்பதிவாளர் வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவு ஓகே.
ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் பாடல்கள் ஓகே.
கண்மாய் தண்ணீர் தொடர்பான பஞ்சாயத்து காட்சியில் வசனங்கள் இருவருக்கும் நியாயமாக எழுதப்பட்டிருக்கிறது.
சீமைக் கருவேல மரங்களின் பின்னணியில் இருக்கும் கார்ப்பரேட் வியாபாரம் பகீர் கிளப்புகிறது.
சாதிகலவரத்தாலும், அதனை தொடர்ந்து நடக்கும் கொலைகளாலும் தழைத்தோங்கி வளரும் அரசியல் வாதிகளையும், கார்ப்பரேட் கும்பலையும் அம்பலபடுத்தியிருக்கிறார், இயக்குநர் விக்ரமன் சுகுமாறன்.
மொத்தத்தில், ராவண கோட்டம் – அரசியல்வாதிகளின் சாதிவெறியாட்டம்.