தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளுக்குள் நடந்த பல்வேறு பிரச்சனைகள் காரணமாக, ஓய்வு பெற்ற நீதியரசர் சேகர் தலைமையில் தமிழக அரசால், நிர்வாக கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது. அந்த கமிட்டியின் ஆலோசகர்களாக பாரதிராஜா, டி.சிவா, எஸ்.வி.சேகர், சத்யஜோதி.தியாகராஜன், கே.ராஜன், துரைராஜ், சிவசக்தி பாண்டியன், ராதாகிருஷ்ணன் மற்றும் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் ஆகியோர்களின் ஆலோசனைகள் மூலம் செயல்பட்டு வருகிறது.
இந்த கமிட்டி இயங்கும் விதத்தால் தமிழ் திரையுலகில் பலராலும் உன்னிப்பாக கவனிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பல நல்ல முடிவுகளையும் எடுத்து வருகிறது. சேலம் ஏரியாவில் திரைப்பட விநியோக முறையில் இருந்து வந்த சின்டிகேட் முறையை கலைத்தும் பல சின்னப்படங்களை விநியோகிக்க ஏதுவாக விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்கினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக உறவை தொடங்கியிருக்கிறது.
மேலும் எஃப்.எம் ரேடியோக்களில் பாடல்களை ஒளிபரப்பும் முன்னர் படத்தின் பெயருடன் தயாரிப்பாளரின் பெயரையும் கூற எஃப்.எம் ரேடியோக்களின் நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி அது நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது.
அதேபோல் விருது விழாக்களில் பயன்படுத்தப்படும் திரைப்படம் சார்ந்த காட்சிகளுக்கு தயாரிப்பாளரின் அனுமதியுடன்; அவர்களையும் அழைத்து கௌரவப்படுத்த வேண்டும் என்ற தயாரிப்பாளர்கள் சங்க ஆலோசனை குழுவினரின் கோரிக்கைக்கு சில நாட்களுக்கு முன்னர் ப்ரவோக் பத்திரிகை நடத்திய விருது வழங்கும் விழாவில் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. குறிப்பிடதக்கது.
அதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் 10ம் தேதி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பங்கேற்கும் இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெற உள்ளது. இந்த இசை நிகழ்ச்சியில் பாடப்படும் பாடல்களின் படத்தயாரிப்பாளருடைய பெயர் ,நிறுவனத்தின் பெயரை சொல்லிவிட்டு பாடல்கள் பாடப்பட வேண்டும் என தயாரிப்பாளர் சங்க ஆலோசனை கமிட்டி உறுப்பினர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் ஏ.ஆர்.ரகுமானிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
விழா நடக்கும் நெருக்கத்தில் விடுக்கப்பட்டுள்ள தயாரிப்பாளர் சங்க கமிட்டியின் இந்த கோரிக்கையை ஏ.ஆர்.ரகுமான் நிறைவேற்ற வாய்ப்பிருப்பதாக தெரிய வருகிறது.
கத்தாரில் நடக்கும் ‘Sima’ விருது வழங்கும் நிகழ்ச்சியில் தயாரிப்பாளர்களின் கோரிக்கையை அவ்விழாக்குழுவினர் ஏற்றுள்ளது குறிப்பிடதக்கது.