இந்திய திரையுலகினருக்கான 67 – வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் குடியரசுத் துணை தலைவர் வெங்கய்யா நாயுடு விழாவுக்கு தலைமை தாங்கி, விருது வழங்கினார். அவருடன் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை மந்திரி அனுராக் தாக்கூர், இணை மந்திரி எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சிறந்த நடிகருக்கான தேசிய விருது இந்த ஆண்டு இருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அசுரன் படத்திற்காக தனுஷூக்கும், போன்ஸ்லே படத்திற்காக இந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாய்க்கும் சிறந்த நடிக்கைக்கான விருது நடிகை கங்கனா ரணாவத்துக்கும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இவர்களுடன் இந்தியத் திரையுலகில் சிறப்பாக பணியாற்றிய பலருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
வாழ்நாள் சாதனை புரிந்தற்காக, இந்திய திரைத்துறையின் மிக உயரிய விருதான ‘தாதா சாகேப் பால்கே’ விருது, ரஜினிகாந்திற்கு வழங்கப்பட்டுள்ளது. ‘தாதா சாகேப் பால்கே’ விருது 1969ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டைச் சார்ந்த நடிகர் சிவாஜிகணேசனுக்கு 1996ம் ஆண்டும், இயக்குனர் கே.பாலசந்தருக்கு 2010ம் ஆண்டும், நடிகர் ரஜினிகாந்த்திற்கு 2019ம் ஆண்டுக்கான ‘தாதா சாகேப் பால்கே’ விருது இன்று 25.10.21ம் ஆண்டு வழங்கப்பட்டது.
இந்த விருது வழங்கும் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதா ரஜினிகாந்த், மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ், மருமகன் தனுஷ் மற்றும் பேரக்குழந்தைகளுடன் கலந்து கொண்டார்.