நடிகர் சமுத்திரக்கனி முக்கியக் கதாப்பாத்திரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் நடித்திருக்கும் படம் ‘ராமம் ராகவம்’. “ஸ்லேட் பென்சில் ஸ்டோரீஸ்’ பேனர் பிரபாகர் ஆரிபாக வழங்கும், ப்ருத்வி போலவரபு தயாரிப்பில், பிரபல தெலுங்கு நடிகர் தன்ராஜ் கொரனானி, இரு மொழி திரைப்படமாக இதனை இயக்குவதோடு, இந்தப் படத்தில் சமுத்திரக்கனியோடு இணைந்து நடித்திருக்கிறார்.
‘ராமம் ராகவம்’ படத்திம் டீசர் வெளியீட்டு விழா, அன்மையில் நடைபெற்றது.
இந்த விழாவில் தயாரிப்பாளர் பிருத்தவி போலவரபு பேசும்போது,
“சமுத்திரக்கனி அண்ணனின் உதவி இல்லாமல் இந்தப் படத்தை என்னால் தயாரித்து இருக்க முடியாது. இந்தப் படம் உருவாக மிக முக்கியக் காரணமாக இருந்தவர் கனி அண்ணன்தான். தந்தை, மகன் உறவுச் சிக்கல் குறித்து பேசும் இப்படம் சிறப்பாக வந்திருக்கிறது. கட்டாயம் மக்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்..” என்றார்.
நடிகர் சூரி பேசும்போது,
“வெண்ணிலா கபடிக் குழு படத்தில் பரோட்டா காமெடி இங்க ஹிட் ஆனது போல தெலுங்கில் பெரிய ஹிட். அந்த காமெடியை தன்ராஜ்தான் நடித்ததாக சொன்னார். அப்போதிலிருந்து அவர் என்னுடைய நண்பராக ஆகிவிட்டார்.
அப்பா மகன் உறவு தொடர்பான கதையம்சம் கொண்ட படங்கள் தோல்வி அடைந்ததாக சரித்திரம் இல்லை. இந்தப் படமும் கட்டாயம் வெற்றி பெரும். ஒரு படம் எடுப்பதைவிட மக்களிடம் அதைக் கொண்டு போய் சேர்ப்பதுதான் சிரமமாக இருக்கிறது. இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு செல்ல நிறைய சிரமம் எடுத்துள்ளனர். கனி அண்ணன் நெகட்டிவாக பேசி நான் கேட்டதே இல்லை.. உங்கள் உழைப்பு இந்தப் படத்திலும் அதிகம் இருக்கும் என்று நினைக்கிறேன். படம் வெற்றி பெற என் வாழ்த்துகள்…” என்றார்.
இயக்குநர் தன்ராஜ் பேசும்போது,
“இந்த நாளுக்கும் என் அப்பா, அம்மாவுக்கும் நன்றி. எழுத்தாளர் சிவபிரசாத்தின் கதை இது. இந்தக் கதை குறித்து கனி அண்ணனிடம் கூறினேன். கதையை நீயே இயக்க வேண்டும் என்றார். எனக்கு ஒரு தயக்கம் இருந்தது. நான் நடித்த படங்களில் வேலை பார்த்த இயக்குநர்களிடமிருந்து நான் கற்றுக் கொண்டதை வைத்து இந்தப் படத்தை இயக்கி இருக்கிறேன்.
சமுத்திரக்கனி அண்ணன் இல்லையென்றால் இந்த படம் உருவாகி இருக்காது. அண்ணனைப் போல நல்ல கதைகள் ஆதரித்து ஊக்கம் அளித்தால் சினிமாவிற்கு நல்ல திரைப்படங்கள் வரும். ஒவ்வொருவரும் தன் அப்பாவோடு வந்து கட்டாயம் இந்தப் படத்தை பாருங்கள்…” என்றார்.
சமுத்திரக்கனி பேசும்போது,
“இதுவொரு நெகிழ்வான தருணம். ஒவ்வொரு தகப்பனும் ஒரு சகாப்தம். 10 அப்பா படம் பண்ணிட்டேன் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை. இதுவும் அப்படியான வேறொரு கதை.
தன்ராஜிக்கு தகப்பனும் இல்லை. தாயும் இல்லை. தானே உழைத்து இந்த இடத்திற்கு வந்திருக்கிறார். அப்பா என்றாலே ஒரு வேதியல் மாற்றம் நிகழும். அப்பா கதை என்றாலே “வாங்க கேட்போம். பண்ணுவோம்..” என்று சொல்லி விடுவேன். வெறும் நம்பிக்கையை மட்டுமே வைத்திருப்பவர்கள் சிறப்பா படம் பண்ணிருவாங்க. அப்படி தன்ராஜை நம்பித்தான் இந்தப் படத்துக்குள்ள நான் வந்தேன்.
இந்த படத்தை இயக்க தன்ராஜ் வேறொரு இயக்குநரை அழைத்து வந்தார். “இந்தப் படத்தை எடுக்க ஒரு நல்ல இயக்குநரை கொண்டு வா..” என்றேன். இயக்குநர் கிடைப்பதில் சிக்கல் இருப்பதாகச் சொன்னார். “அப்போ நீயே இயக்கிரு” என்று சொன்னேன். அப்படித்தான் தன்ராஜ் இந்தப் படம் மூலமா இயக்குநராக மாறியிருக்கிறார்.
ஒவ்வொரு தகப்பனுக்கும் மகனுக்கும் உள்ள உறவுக்குள் அவ்வளவு சிக்கல்கள் இருக்கு. இன்னும் 10 படம் கூட பண்ணலாம். இதற்கு முன்னாள் இந்தப் படத்தின் தயாரிப்பாளரை நான் பார்த்ததே இல்லை. இதன் படப்பிடிப்பில்தான் முதல்முறையாகப் பார்த்தேன். என்னைப் பார்க்காமலேயே என் மீது நம்பிக்கை வைத்த தம்பி. மாபெரும் உறவோடு வந்து இருக்கிறார். வாழ்த்துகள் தம்பி..” என்றார்.
இயக்குநர் பாலா பேசும்போது,
“சமுத்திரக்கனியின் மாபெரும் ரசிகனாக நான் வந்திருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். நடிகனாக அவர் நிரூபித்துவிட்டார். அவருடைய உழைப்பிற்கும் நான் ரசிகன்தான். கடுமையாக உழைக்கக் கூடியவர். மற்றவர்களுக்கு உதவக் கூடிய அவருடைய தன்மை எனக்கு வியப்பாக இருக்கும். உதவுவதில் அவருக்கு பெரிய மனசு இருக்கு. இந்த படம் வெற்றி பெற என் வாழ்த்துகள்..” என்றார்.