ரசவாதி, ‘பவுலோ கோய்லோ’ எழுதிய ‘அல்கெமிஸ்ட்’ நாவலா? –  இயக்குநர் சாந்தகுமார் விளக்கம்!

‘மௌனகுரு’, ‘மகாகமுனி’ படங்களின் மூலம் திரையுலகில் பிரபலமானவராக அறியப்பட்டவர், இயக்குநர் சாந்தகுமார். இந்த படைப்புகளின் மூலம் தமிழ் ரசிகர்களை மட்டுமின்றி பிற மொழி ரசிகர்களையும் கவர்ந்தவர் இவர். தற்போது, இவரது இயக்கத்தில் , அர்ஜூன் தாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் லவ் ஆக்‌ஷன்- க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ’ரசவாதி- தி  அல்கெமிஸ்ட்’ மே 10 அன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது!

’ரசவாதி- தி  அல்கெமிஸ்ட்’ படம் குறித்து இயக்குநர் சாந்தகுமார் கூறியதாவது..

‘’ ‘ரசவாதி’ படத்தில் ஆக்‌ஷன், த்ரில்லர், ரொமென்ஸ் என அனைத்தும் இருக்கிறது. ‘மௌனகுரு’, ‘மகாகமுனி’ படங்களில் ரொமான்ஸ் காட்சிகள் அதிகம் இருக்காது, ஏனென்றால் என் கதைக்கு இதுவரை தேவைப்பட்டதில்லை.  ஆனால், இந்த கதையில் அதிகமான ரொமான்ஸ் காட்சிகள் இருக்கிறது. கதைக்கு அது தேவைப்படுகிறது.

இந்தக்கதைக்கு, அர்ஜுன் தாஸ் சரியாக இருப்பார். என்று, தோன்றியதால் தான் அவரை நாயகனாக தேர்ந்தெடுத்தேன். அர்ஜுன் தாஸ் சித்த மருத்துவராக நடித்திருக்கிறார். அவருக்கு அழுத்தமான கதாபாத்திரம். ஏற்கனவே அவர் இதுபோன்ற கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், இது வேறுமாதிரியாக இருக்கும். அர்ஜுன் தாஸ் ‘சித்த மருத்துவர்’ என்பதால், இது சித்த மருத்துவம் தொடர்பான படம் அல்ல, இது ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் காதல் கதை தான்.

இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில், மலையாள நடிகர் சுஜித் சங்கர் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். அவர், இதுவரை இந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடித்ததில்லை. அவருடைய நடிப்பு எல்லோராலும் கவனிக்கும்படி இருக்கும்.

‘மகாமுனி’ படத்திற்கான திரைக்கதை எழுதுவதற்காக, கொடைக்கானலில் தங்கியிருந்தேன். அங்கு கிடைத்த அனுபவத்தின் மூலமாக உருவானது தான், ரசவாதி படத்தின் கதை. இந்தப்படத்தில், ஐந்து முக்கியமான கதாபாத்திரங்கள் இருக்கிறது. அந்த கதாபாத்திரங்களின் பயணத்தை சொல்வது தான் கதை.

‘பவுலோ கோய்லோ’ எழுதிய ‘அல்கெமிஸ்ட்’ என்ற பெயரில் நாவல் இருக்கிறது. அதன் மொழிப்பெயர்ப்பும் தமிழில் இருக்கிறது. ஆனால், இந்த படத்தின் கதைக்கும் அந்த நாவலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. சினிமாவில் இதுவரை அல்கெமிஸ்ட் என்ற தலைப்பு பயன்படுத்ததால், நான் அதை பயன்படுத்தியிருக்கிறேன். சித்தர்கள், மகான்கள் சொன்ன விஷயத்தை தாண்டிய ஒரு பார்வைதான் என்னுடைய ‘ரசவாதி.’ என்றார்.

வரும் மே 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ‘சக்தி ஃபிலிம் ஃபேக்டரி’ சார்பில், பி.சக்திவேலன் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.