ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் உருவாகும் திரைப்படம், ‘ரெயின்போ’. இதில் ராஷ்மிகா கதாநாயகியாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் தேவ் மோகன் நடிக்கவிருக்கிறார். இன்று நடந்த பூஜையுடன், தயாரிப்பு பணிகள் தொடங்கியது. இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 7 ஆம் தேதி ஆரம்பமாகிறது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில், படத்தை எஸ். ஆர். பிரகாஷ் பாபு, எஸ்.ஆர். பிரபு இணைந்து தயாரிக்கவிருக்கிறார்கள். ‘ரெயின்போ’! திரைப்படத்தை இயக்குவதன் மூலம், சாந்தரூபன் என்பவர் இயக்குநராக அறிமுகமாகிறார்.
ஃபேண்டஸி கலந்த காதல் திரைப்படமாக உருவாகவுள்ள “ரெயின்போ” படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, கே எம் பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்கிறார்.
‘ரெயின்போ’ திரைப்படம் குறித்து நடிகை ரஷ்மிகா பேசுகையில்,
“ஒரு பெண் கதாபாத்திரத்தின் பார்வையில் சொல்லப்படும் கதையில் முதல் முறையாகப் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இந்த கதாபாத்திரத்துக்குத் திரையில் உயிர் கொடுக்க ஆவலாக இருக்கிறேன். உங்களை பொழுதுபோக்கும், ஆச்சரியப்படுத்தும் ஒரு படமாக ரெயின்போ இருக்கும். அந்தப் பெண் கதாபாத்திரத்துடனான ரசிகர்களின் பயணம் உற்சாகமானதாக இருக்கப் போகிறது. அதற்குத் தயாராகுங்கள்” என்று கூறியுள்ளார்.
படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான எஸ். ஆர். பிரபு பேசுகையில்,
“வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் ஒரு படைப்பாக ‘ரெயின்போ’ இருக்கும் என்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி. எங்களின் ஒவ்வொரு திரைப்படத்துக்கும் ஏகோபித்த வரவேற்பையும், வாழ்த்தையும் தந்து வரும் ரசிகர்கள், ‘ரெயின்போ’வையும் அதே அளவு ரசிப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறோம். படத்தின் அற்புதமான நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் இதைச் சாத்தியமாக்குவார்கள்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
படத்தின் அறிமுக இயக்குநர் சாந்தரூபன் பேசுகையில்,
“இதுவரை இந்திய சினிமா பார்த்திராத ஒரு காதல் ஃபேண்டஸி கதையாக ‘ரெயின்போ’ இருக்கும். ராஷ்மிகாவின் வேறொரு பரிமாண நடிப்பை நீங்கள் திரையில் பார்ப்பீர்கள். புதுமையான கதைக்களன் கண்டிப்பாகப் படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் ஆச்சரியப்படுத்தும்” என்று கூறியுள்ளார்