அகிலன் – விமர்சனம்!

இந்த வாரம் வெளியான படங்களில், ஜெயம் ரவியின் ‘அகிலன்’ திரைப்படம், ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பினை உருவாக்கியிருந்தது.  இப்படத்தை ஜெயம் ரவியின் ‘பூலோகம்’ படத்தை இயக்கிய, இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கியிருக்கிறார்.

ஜெயம் ரவி, ப்ரியா பவானி ஷங்கர், தன்யா ரவிச்சந்திரன், ஜிராக் ஜானி, ஹரீஷ் பெராடி, ஹரிஷ் உத்தமன், தருண் அரோரா, மதுசூதன் ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அகிலன் எப்படி இருக்கிறது? பார்க்கலாம்.

ஒட்டு மொத்த ஹார்பரையும் தன்னுடைய கண்ணசைவில் வைத்திருப்பவர், ஹரீஷ் பெராடி. இவரது கட்டளைகளுக்கு ஏற்ப, பல சட்டவிரோத செயல்களை செய்து வருகிறார், ஜெயம் ரவி. ஒரு கட்டத்தில் ஜெயம் ரவி ஹரீஷ் பெராடியை எதிர்த்து  ஹார்பரில் தன்னிச்சையாக இயங்குகிறார். இதனால் இருவருக்கும் இடையே பகை மூளுகிறது. இதில் வெற்றி பெற்றது யார்? என்பதை சில டிவிஸ்ட்டுகளோடு, குழப்பமான திரைக்கதையில் சொல்லியிருக்கிறார், இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன்.

படம் ஆரம்பித்த சில காட்சிகளிலேயே, அடுத்து என்ன நடக்கும்!? என்ற ஆர்வத்தை தூண்டுகிறது. ஆனால் போக… போக… ஒரே மாதிரியான காட்சிகள் சலிப்படைய செய்கிறது. ஒரு சில மான்டேஜ்ஜில் சொல்ல வேண்டிய காட்சிகளை இடைவேளை வரை சொல்லி, போரடிக்கிறார்கள். ‘அகிலன்’ வலுவானவன், திறமையானவன். என்பதை சில காட்சிகளில் சொல்லிவிட்டு அடுத்த காட்சிகளுக்கு செல்லாமல், பில்டப் காட்சிகளிலேயே கதை நகராமல் சுற்றி கொண்டிருக்கிறது. அகிலனை எதிர்க்க ஆள் இல்லாமல் இருப்பது படத்தின் பலவீனம்! பல தடைகளை எளிதாக கடக்கும் அகிலனை ரசிக்க முடியவில்லை!

இடைவேளைக்கு பிறகு நடக்கும் சில டிவிஸ்டுகளால், படம் பார்ப்பவர்களுக்கு பெரிய ஆச்சர்யத்தையோ, படபடப்பையோ ஏற்படுத்தவில்லை! அதேபோல் கதையிலும் பெரிய வித்தியாசம் இல்லை! கதை எதை நோக்கி போகிறது? என்பதை புரிந்து கொள்ள முடியாமல், ரசிகர்கள் மண்டையை சொறியும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

தீப்பெட்டியை அடுக்கி, கலைத்து விளையாடுவது போல், அவ்வபோது கன்டெய்னர்களை மாற்றி, மாற்றி விளையாடுகிறார்கள். சினிமாவுக்கு லாஜிக் தேவையில்லை என்றாலும், ஒரு நியாயம் வேண்டாமா? டைரக்டர், கல்யாண் கிருஷ்ணன்!?

எந்த கதாபாத்திரத்திலும் நடிக்கக்கூடிய திறன்மிக்க நடிகர்களில், ஜெயம் ரவியும் ஒருவர். அவருடைய நடிப்பினை பொறுத்தவரை குறை சொல்ல முடியவில்லை. சிறப்பாகவே நடித்திருக்கிறார். இன்ஸ்பெக்டராக ப்ரியா பவானி ஷங்கர், கதாபாத்திரத்திற்கு அந்நியப்பட்டு நிற்கிறார்.

மற்றபடி தன்யா ரவிச்சந்திரன், ஜிராக் ஜானி, ஹரீஷ் பெராடி, ஹரிஷ் உத்தமன், தருண் அரோரா, மதுசூதன் ராவ் உள்ளிட்டவர்கள் சிறப்பான நடிப்பினை கொடுத்திருக்கிறார்கள்.

படத்தின் மிகப்பெரிய பலமே லொக்கேஷன் தான். இதுவரை யாரும் ஹார்பரை சினிமாவில் இத்தனை அழகாக காட்டியது இல்லை. என்றே சொல்லலாம். விவேக் ஆனந்த்தின் ஒளிப்பதிவில், படம் முழுவதும் சிறப்பாக படமாக்கப்பட்டிருக்கிறது.

சாம் சிஎஸ் இசையால், காதுகள் கதறுகிறது!

குழப்பமான திரைக்கதை, அதீத, லாஜிக் மீறல்களால் அகிலனை ரசிக்கமுடியவில்லை!

மொத்தத்தில் இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன், ‘அகிலன்’ கதை சொன்ன விதம், ‘கண்ணுக்குள்ளே’ படத்தினில் சிங்கமுத்து, முத்துகாளையிடம் சொல்லும் ‘திமிங்கலம்’ கதை போல இருக்கிறது!