மெமரீஸ் – விமர்சனம்!

‘மெமரீஸ்’ ல..  கன்டென்ட்டும், இல்லை!  மேக்கிங்கும் இல்லை!

Shiju Thameen’s Film Factory Pvt Ltd சார்பில் ஷிஜு தமீன்ஸ் தயாரித்துள்ள படம், மெமரீஸ். இதில் வெற்றி, பார்வதி அருண், தனன்யா, ஹரீஷ் பெரடி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விபின் கிருஷ்ணா கதை எழுத, வசனம் எழுதியிருக்கிறார், அஜயன் பாலா. பிரவீன் – ஷ்யாம் இணைந்து இயக்கியிருக்கிறார்கள்.

வித்தியாசமான கதைக்களங்களை கொண்ட திரைப்படங்களில் நடித்து ஆச்சர்யப்படுத்துபவர், நடிகர் வெற்றி.   இவரது நடிப்பினில் தற்போது மெமரீஸ் என்ற சைக்கலாஜிக்கல் த்ரில்லர் வெளியாகியிருக்கிறது. வழக்கம்போல் ஆச்சர்யபடுத்துவாரா? பார்க்கலாம்.

முற்றிலும் தன்னுடைய கடந்தகால  நினைவுகளை இழந்த நிலையில் இருக்கும் வெற்றியின் மீது கொலைக்குற்றம் சுமத்தப்படுகிறது. இதனால் போலீஸ் அவரை துரத்தும் அதே சமயத்தில் அவரை கொலை செய்யவும் சிலர் திட்டமிடுகின்றனர். கடும் குழப்பத்தில் இருக்கும் அவர் அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதே மெமரீஸ் திரைப்படத்தின் குழப்பமான திரைக்கதை மற்றும் தெளிவற்ற க்ளைமாக்ஸ்!

வித்தியாசமான கதையை யோசித்த இயக்குனர்கள் குழு அதற்கான திரைக்கதை அமைப்பதில் தவறியிருக்கிறார்கள். ஒரு நல்ல சஸ்பென்ஸான சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படத்திற்குரிய அனைத்து அம்சங்களும் இருந்த போதிலும் காட்சிகளை வடிவமைப்பதிலும், நடிகர்களிடம் நடிப்பினை வரவழைப்பதிலும் தோல்வியடைந்துள்ளனர்.

விறுவிறுப்பாக பறக்க வேண்டிய காட்சிகள் குழப்பமாகவும், மெதுவாகவும் செல்வதால் ரசிப்பதில் தடை ஏற்படுகிறது. ஒழுங்கா சொன்னாலே புரிந்து கொள்ள சிரமம் ஏற்படும் இந்தக் கதைக்கு, நான் லீனியரில் கதை சொல்வது தேவையா!?

வெற்றி உட்பட படத்தில் நடித்த நடிகர், நடிகையரில் யாருடைய நடிப்பும் எடுபடவில்லை! என்பது சோகத்திலும் சோகம். காட்சிகளுக்கேற்ற பாவனைகள் யார் முகத்திலும் இல்லை!

இப்படத்திற்கு இசையமைத்த கவாஸ்கர் அவினாஷின், பின்னணி இசை இரைச்சலாக இருக்கிறது. அர்மோ மற்றும் கிரண் நுபிதால் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.  குறிப்பிட்டு சொல்லும்படி எதுவும் இல்லை!

ஷான் லோகேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார். இன்னும் கூடுதல் கவனமாக இருந்திருக்கலாம்.

வசனகர்த்தா அஜயன் பாலாவின் வசனம் பற்றி குறிப்பிட்டு சொல்ல எதுவும் இல்லை!

மொத்தத்தில, ‘மெமரீஸ்’ ல..  கன்டென்ட்டும், இல்லை!  மேக்கிங்கும் இல்லை!