‘ஒ மை டாக்’ – விமர்சனம்!

பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் பேரனும், நடிகர் அருண் விஜய்யின் மகனுமான சிறுவன், அர்னவ் விஜய் நடிகராக அறிமுகம் ஆகியிருக்கும் படம், ‘ஓ மை டாக்’. இந்த படத்தை ‘2டி என்டர்டெயின்மென்ட்’ சார்பில் ஜோதிகா- சூர்யா தயாரிக்க, இவர்களுடன்  RB டாக்கீஸின் சார்பில், எஸ் ஆர். ரமேஷ் பாபு, இணைந்து தயாரித்துள்ளார்.

நிவாஸ் பிரசன்னா இசையமைப்பில், ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கோபிநாத். சரோவ் சண்முகம் இயக்கி இருக்கும் ‘ஓ மை டாக்’ அமேசான் ‘பிரைம் வீடியோ’ வெளியாகி இருக்கிறது. சிறுவர்களுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள இப்படம் எப்படி இருக்கிறது. பார்க்கலாம்.

அர்னவ் விஜய், வயதுக்கேற்ற குறும்புடன் வலம் வந்து கொண்டிருக்கும் சிறுவன். தனது தந்தை அருண் விஜய், தாயார் மஹிமா நம்பியார் மற்றும் தாத்தா விஜய்குமார் ஆகியோருடன் ஊட்டியில் வசித்து வருகிறான். இவனுக்கு ஆதரவற்ற நிலையில் விடப்பட்ட ‘சைபீரியன் ஹஸ்கி’ வகையினை சேர்ந்த ஒரு குட்டி நாய் கிடைக்கிறது. அதனை ‘சிம்பா’ என பெயரிட்டு வளர்த்து வருகிறான்.

வளர்ந்துவிட்ட சிம்பாவை இந்திய அளவில் நடக்கும் நாய்கள் கண்காட்சி போட்டியில் கலந்து கொள்ளவைத்து வெற்றியும் பெறச் செய்து விடுகிறான் அர்னவ் விஜய். இதனால் பலமுறை சாம்பியன் பட்டத்தை வென்ற வினய் ராய் கோபம் கொள்கிறார். அடுத்த கட்டமாக நடக்கும் உலக அளவிளான போட்டியில் சிம்பாவை கலந்து கொள்ளாமல் இருப்பதற்கு பல தடைகளை ஏற்படுத்துகிறார். சிம்பா போட்டியில் கலந்து கொண்டதா? என்ன நடந்தது. என்பது தான் மீதிக்கதை.

பொதுவா விலங்குகள் மேல் பாசம், நட்பு பாராட்டுபவர்களாக இருந்தால், நீங்கள் குடும்பத்துடன் தாராளமாக ‘ஓ மை டாக்’ படத்தினை காணலாம். இது சிறுவர்களுக்கான ஒரு பொழுதுபோக்கு படம்.

கதையின் நாயகனாக வரும் அர்னவ் விஜய், குறை சொல்ல முடியாத அளவு நடித்துள்ளார். சிம்பாவை கடத்தும் காட்சியில் எதிரிகளுடன் சண்டையிடும் தனது அப்பா அருண் விஜய்யை ‘வோல்வரின்’ படத்தின் நாயகன் ஹ்யூ ஜாக்மேன் போல் அர்னவ் விஜய் கற்பனை செய்து பார்க்கும் காட்சி சிறுவர்களை நிச்சயம் கவரும். மேலும் அழுது கொண்டே நடித்திருக்கும் காட்சியில் பரிதாபட வைக்கிறார். உடன் நடித்த மற்ற சிறுவர், சிறுமிகளும் பாராட்டும்படியாக நடித்துள்ளனர்.

விஜய்குமார், அருண்விஜய், வினய்ராய், மஹிமா நம்பியார் ஆகியோர் எந்த அளவு நடிக்க வேண்டுமோ அந்த அளவில் நடித்துள்ளனர். அர்னவ் விஜய் – வினய் ராய் இடையே நடக்கும் க்ளைமாக்ஸ் காட்சி சூப்பர் டச்.. சிறுவர், சிறுமிகளுக்கான பாஸிடிவ் அப்ரோச்.

நிவாஸ். கே. பிரசன்னாவின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையும், கோபிநாத்தின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

எந்தக் கலப்படமும் சிறுவர், சிறுமிகளுக்கான பிரத்யேக படமாக இயக்கி இருக்கும் இயக்குநர் சரோவ் சண்முகம் மற்றும் படத்தினை தயாரித்த ஜோதிகா, சூரியாவை பாராட்டலாம்.

சிறுவர், சிறுமிகளால் திரும்பத் திரும்ப பார்க்கும் படமாக ‘ஓ மை டாக்’ இருக்கும்..