படைப்பாளன் – விமர்சனம்!

தியான் பிக்சர்ஸ் சார்பில் நட்சத்திரம் செபாஸ்டியான் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் படம் படைப்பாளன். இப்படத்தின் முதன்மை கதாபத்திரத்தில் தியான் பிரபு நடித்திருக்க அவருடன்  அஷ்மிதா, நிலோபர்,  ‘காக்கா முட்டை’ புகழ் ரமேஷ் மற்றும் விக்கி , வேல்முருகன் ஆகியோர்கள் நடித்திருக்கிறார்கள். நடித்ததுடன் தியான் பிரபு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார்.

இந்தப்படத்தை பார்க்கும்போது இயக்குனர் ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்டோர் மீதான கதைத் திருட்டு தொடர்பாக வெளியான பல்வேறு பத்திரிக்கை செய்திகள் ஞாபகத்திற்கு வந்து செல்கிறது. கோலிவுட்டில் கதைத்திருட்டு சமீப காலமாக நடந்து வருவது அனைவரும் அறிந்ததே! இப்படியான ஒரு கதைத்திருட்டை மய்யப்படுத்தி ஹாரர் பாணியில் உருவாக்கப்பட்டுள்ள படமே ‘படைப்பாளன்’.

படம் தொடங்கிய சில விநாடிகளிலேயே திகில் தொற்றிக்கொள்கிறது. அங்கே தொற்றிக்கொள்ளும் மர்மம், பிறகு கொடைக்காணல் காட்டுப்பகுதியில் தொடர்கிறது.

தயாரிப்பாளர் மனோபாலாவிடம் உதவி இயக்குனர் தியான் பிரபு கதை சொல்கிறார். அந்த திகில் கதையில் பல்வேறு திகில் திருப்பங்கள் வந்து செல்கிறது. அது கதை கேட்கும் மனோபாலாவை மட்டுமின்றி நம்மையும் திகிலூட்டுகிறது. அந்தக்கதை க்ளைமாக்ஸை நெருங்கும்போது தான் தெரிகிறது அந்தக்கதை சொல்லுபவரே பேய் என்று.

ஒருவரிடம் கதை சொல்லப் போகிறான் ஓர் இயக்குனன். பயங்கரமான பேய்க்கதை சொல்கிறான் . தயாரிப்பாளர் கதை கேட்டு நடுங்கிக் கொண்டு இருக்கும் வேளையில் அடுத்த அதிர்ச்சியாக கதை சொல்லும் இயக்குனரே ஒரு பேய் என்பது தெரிய வருகிறது .  இன்னொரு காட்சியில் கொடைக்காணல் பங்களாவில் மாட்டிக்கொண்டு திணறுபவர்களைப்போலவே படம் பார்ப்பவர்களும் திணறத்தான் செய்கிறார்கள். ஒரு கதைத்திருட்டு சம்பவத்தினை பேய்க்கதையுடன் சம்பவப்படுத்தி திரைக்கதை படுத்தியிருப்பது சுவாரஸ்யப்படுத்துகிறது.

திகில் காட்சிகளில் ஒளிப்பதிவாளர் வேல்முருகனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். சில இடங்களில் மிரட்டலோ.. மிரட்டல். கிளாமரையும் கிளாமராகவே காட்டியிருக்கிறார். இசையமைப்பு பரவாயில்லை. படத்தில் நடித்திருப்பவர்கள் தங்களது கதாபாத்திரத்திற்கேற்ற நடிப்பினை கொடுத்திருக்கிறார்கள்.

கதைத்திருட்டில் பணமும், பலமும் எப்படி வேலைசெய்கிறது என்பதையும், உதவி இயக்குனர்களின் வலியையும் காட்சிப்படுத்தியிருப்பது சிறப்பு..

படத்தின் இறுதியில் ஸ்க்ரோல் டைட்டிலில் வரும் பாக்யராஜ் பேசும் காட்சி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸை நினைவுபடுத்துகிறது..

படைப்பாளன் உதவி இயக்குனர்களின் பாதுகாவலன்!