சில காட்சிகளை வெட்டியிருக்கலாம்! – ‘கல்கி 2898 AD’ –  விமர்சனம்!

‘டிஸ்னி’, ‘வார்னர் பிரதர்ஸ்’ உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றிய, தென் கொரியாவை சேர்ந்த கிராபிக்ஸ் கலைஞர் ஒருவரின் கிராபிக்ஸ் திருட்டு சர்ச்சைக்கு நடுவே, இந்தியத் திரையுலகினர் மற்றும் ரசிகர்களால், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம், ‘கல்கி 2898 AD’. இதில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், துல்கர் சல்மான், தீபிகா படுகோன், சாஸ்வதா சட்டர்ஜி, திஷா பதானி, ஷோபனா, பசுபதி, அன்னா பென், பிரம்மானந்தம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஐந்து மொழிகளில், உலகம் முழுவதும் சுமார் 8500 தியேட்டர்களில் வெளியாகியுள்ள ‘கல்கி 2898 திரைப்படத்தினை, எழுதி இயக்கியிருக்கிறார், நாக் அஸ்வின்.

இந்திய இதிகாசங்களில், ராமாயணம், மகாபாரதம் இரண்டும் முக்கியமானவை. இதில், மகாபாரதத்தில் கிருஷ்ணர் அஸ்வத்தாமனுக்கு கொடுக்கும் சாபத்திலிருந்து, அதாவது கிமு 3000 ஆண்டுகளிலிருந்து, கலியுகத்தின் தொடக்க காலமான ‘கல்கி 2898’ நடக்கும் சம்பவங்களை கொண்டு, ‘கல்கி 2898’  திரைப்படம் ஒரு அறிவியல் புனைவு கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. எப்படி இருக்கிறது?

இந்து புராணங்களில் கூறப்படும் உலகின், முதலில் தோன்றிய, அழிந்த நகரமான காசியில் வசிக்கிறார் (பிரபாஸ்) பைரவா. இவர் வசிக்கும் காசி,  உலகின் தொடர்ச்சியான அழிவுகளை தொடர்ந்து கடைசி நகராமாக எஞ்சி நிற்கிறது.

சுப்ரீம் யாஸ்கின் (கமல்ஹாசன்) தலைமையில், அவரது கட்டுப்பாட்டின் கீழ் இன்னொரு அதி நவீன உலகமாக ‘காம்ப்ளெக்ஸ்’, செயற்கையோடு இயைந்த, அனைத்து விதமான இயற்கை வளங்களோடு இருக்கிறது. இந்த உலகத்திற்குள் செல்வதற்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள், விதிக்கப்பட்டிருக்கிறது. காசியில் வசிக்கும் மனிதர்கள், காம்ப்ளெக்ஸின் லேப்புக்கு அடிமைகளாக, குறிப்பாக ‘பெண்கள்’ உபோயகப்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்த காம்ப்ளெக்ஸிற்குள் செல்ல விருப்பப்படுகிறார், (பிரபாஸ்) பைரவா.

ஷோபனா தலைமையின் கீழ் ‘ஷம்பாலா’ என்ற ஒரு உலகம் கடவுளின் (கல்கி) வருகைக்காக எதிர்பார்த்து காத்திருக்கிறது.

சுப்ரீம் யாஸ்கின் கட்டுப்பாடில் இருக்கும் காம்ப்ளெக்ஸிலிருந்து, கர்ப்பிணியான (தீபிகா படுகோன்) SUM-80 தப்பிக்கிறார். சுப்ரீம் யாஸ்கினின் ஆட்களும், காம்ப்ளெக்ஸிற்கு அடிமையாக இருக்கும் ஆட்களும் அவரை தேடிபிடிக்க முயற்சிக்கின்றனர்.

எப்படியாவது, காம்ளெக்ஸிற்குள் செல்ல நினைக்கும் (பிரபாஸ்) பைரவாவும் (தீபிகா படுகோன்) SUM-80 யை பிடிக்க முயற்சிக்கிறார்.

இந்த கூட்டத்தினரிடமிருந்து (தீபிகா படுகோன்) SUM-80 யை, (அமிதாப் பச்சன்) அஸ்வத்தாமன் காப்பாற்ற முயற்சிக்கிறார். இதன் பிறகு என்ன நடந்தது? என்பதே, ‘மகாபாரதம்’ இதிகாச பின்னணியில் பிரமிக்க வைக்கும், கிராபிஃக்ஸ் காட்சிகளுடன் கூடிய ‘2K’ கிட்ஸ்களை கவரும் திரைக்கதை, மற்றும் (க்ளைமாக்ஸ்) இடைவேளை! அதாவது, ‘கல்கி 2898 AD’ திரைப்படத்தின் முதல் பகுதி.

படம் ஆரம்பமானவுடன் பிரமிக்க வைக்கும் கிராஃபிக்ஸ் காட்சிகள் வாய்பிளந்து பார்க்க வைக்கிறது. அதன் பிறகு, நாயகன் பிரபாஸின் இன்ட்ரோ காட்சிகளும், தொடர்ந்து வரும் அவருடைய காட்சிகளும் அயற்சியை ஏற்படுத்துகிறது. அருகில் படம் பார்க்கும் சிலர் தூங்கவும் செய்கின்றனர். படத்தின் இந்த தொய்வினை, அஸ்வத்தாமனாக நடித்திருக்கும் அமிப்தாப் பச்சன் சரி செய்கிறார். அதோடு க்ளைமாக்ஸ் வரை, பரபரப்பாக செல்கிறது. ஏனோ!? பிரபாஸ் வரும் காட்சிகள் ஈர்ப்புடன் இல்லை. அவருக்கான காட்சி அமைப்புகள் சிறுவர்களுக்காக மட்டுமே, உருவாக்கப்பட்டிருப்பது போல் தெரிகிறது. இவர் சம்பந்தப்பட்ட 15 நிமிட காட்சிகளை கட் செய்தால், படத்திற்கு எந்த பங்கமும் ஏற்படாது. அந்த அளவிற்கு இவரது காட்சிகள், கதையுடன் ஒன்றாமல் இருக்கிறது.

அஸ்வத்தாமனாக நடித்திருக்கும் அமிதாப் பச்சனின் கம்பீரமான தோற்றம், ரசிகர்களை எளிதில் ஈர்த்துவிடுகிறது. படம் முழுவதும் தனது நடிப்பால் ஆக்கிரமித்து இருக்கிறார்.

சுப்ரீம் யாஸ்கினாக நடித்திருக்கும் கமல் ஹாசனின் தோற்றத்தினை க்ளைமாக்ஸில் பார்க்க பிரமிப்பாக இருக்கிறது. அதற்கு முன்னர், மெல்லிய தேகத்துடன் தோன்றும், அவரது தோற்றத்தினை, குரலை வைத்து மட்டுமே கண்டுபிடிக்க முடிகிறது. சிலருக்கு, அதுவும் கஷ்டமாக இருக்கலாம். இவருடைய ஆட்டம் அடுத்த பகுதியில் தான் ஆரம்பமாகிறது. அது மிகுந்த எதிர்பார்ப்பினையும் உருவாக்கியிருக்கிறது.

துல்கர் சல்மான், சாஸ்வதா சட்டர்ஜி, கர்ப்பிணி பெண்ணாக நடித்திருக்கும் தீபிகா படுகோன், ஷம்பாலா தலைவி ஷோபனா, பசுபதி, திஷா பதானி, அன்னா பென், பிரம்மானந்தம் ஆகியோருடன், சிறப்புத்தோற்றத்தில் இயக்குநர்கள் ராம்கோபால் வர்மா, எஸ்.எஸ்.ராஜமவுலி உள்ளிட்டவர்களில் சிலர் வீணடிக்கப்பட்டுள்ளனர்.

ஒளிப்பதிவு செய்திருக்கிறார், செர்பிய நாட்டின் ஒளிப்பதிவாளர் (Djordje Stojiljkovic) டிஜோர்ட்ஜே ஸ்டோஜில்கோவிச். VFX ல் நிபுணத்துவம் பெற்ற இவரே ஒளிப்பதிவு செய்திருப்பதால், படத்தின் பெரும் பலமாக அமைந்திருக்கிறது இவரது ஒளிப்பதிவு.

இசையமைத்திருக்கிறார், சந்தோஷ் நாராயணன். பிரமாண்ட காட்சிகளுக்கு ஏற்ப, பின்னணி இசையமைத்ததில் சற்று பின்னடைவு தான். இரண்டாம் பாகத்தில் அது இருக்காது என நம்புவோம்.

படத்தொகுப்பினை செய்திருக்கிறார், கோட்டகிரி வெங்கடேஷ்வர ராவ். தயவு தாட்சண்யம் பாராமல் பிரபாஸின் காட்சிகளை வெட்டியிருக்கலாம். இரண்டாம் பாதியில் சுதாரித்துள்ளார்.  காட்சிகளை வேகமாகவும், நேர்த்தியாகவும் தொகுத்து விறுவிறுப்பினை கூட்டியிருக்கிறார்.

‘கல்கி 2898 AD’ படத்தின் மிகுந்த பாராட்டுதல்களுக்குரியது, VFX தான். இதுவரை வெளிவந்த இந்தியப் படங்களிலிருந்து, தனித்து நிற்கிறது ஹாலிவுட் படங்களுக்கு நிகராக. நேர்த்தியான இந்த VFX காட்சிகளுக்காக மறுமுறையும் பார்க்கலாம். உலகத்தரத்தில் ஒரு தெலுங்கு சினிமா. இயக்குநர் நாக் அஸ்வின்,  பாராட்டுக்குரியவர்.

‘கல்கி 2898 கி.பி’ – அசரவைக்கும் அறிவியல் துணையோடு, ஆன்மீகம் பேசியிருக்கிறது.