அறிமுக இயக்குநர் வினோ இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம், ‘ப்ராஜெக்ட் சி’. இப்படத்தை தயாரித்து, கதாநாயகனாக நடித்திருக்கும் நடிகர் ஶ்ரீ, இப்படத்தின் மூலம் அறிமுக.மாகிறார். இவருடன் நடிகர் சாம்ஸ், ராம்ஜி, நடிகை வசுதா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
சதீஷ் ஆனந்த் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஷிபு சுகுமாரன் இசையமைத்திருக்கிறார்.
வாய் பேசமுடியாத கை, கால்கள் அசைவற்ற நிலையில் இருக்கும் விஞ்ஞானி ஒருவரை பராமரிப்பதற்காக நியமிக்கப்படுகிறார் ஶ்ரீ. அப்போது அந்த விஞ்ஞானி தயாரித்த ஒரு மாத்திரையை லட்சக்கணக்கில் பணம் கொடுத்து வாங்குவதற்கு பலர் போட்டியிடுகின்றனர். இதை தெரிந்து கொண்ட ஶ்ரீ அந்த மாத்திரைகளையும், அதன் ஃபார்முலாவையும் அபகரித்து விடுகிறார். ஶ்ரீ யிடம் பணம் புழங்குவதை நோட்டமிடும் அந்த வீட்டின் வேலைக்காரி, வசுதா கிருஷ்ணமூர்த்தி அதை கொள்ளையடிக்க முடிவு செய்கிறார். அதேபோல் மாத்திரையின் ஃபார்முலாவை அபகரிக்க சாம்ஸ் ஒரு பக்கம் முயற்சி செய்கிறார். இதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை சொல்கிறது, ‘’ப்ராஜெக்ட் சி’ – சாப்டர் 2’ படத்தின் திரைக்கதை.
இப்படத்தில் நடித்த சாம்ஸ், ஸ்ரீ, வசுதா கிருஷ்ணமூர்த்தி , ராம்ஜி உள்ளிட்ட அனைவரும் தங்களது கதாபாத்திரத்தினை உணர்ந்து அதற்குஏற்றபடி நடித்திருக்கிறார்கள். அதிலும் வசுதா கிருஷ்ணமூர்த்தி ஒரு படி மேல். ஸ்ரீயுடன் நெருக்கம் காட்டி நடிக்கும் போதும், சுத்தியலால் கொடூரமாக தாக்கும் போதும் டெரர்!
வெகு சில லொக்கேஷசன்களில் அலுப்பில்லாமல், சின்ன கதையினையும், சில நடிகர்களையும் வைத்துக்கொண்டு பெரிதாக குறை சொல்ல முடியாத அளவில் உருவாக்கியிருக்கிறார், இயக்குனர் வினோ.
சதிஷ் ஆனந்தின் ஒளிப்பதிவும், இசையமைப்பாளர் சிபு சுகுமாரன் இசையும் பரவாயில்லை!
‘ப்ராஜெக்ட் சி’ – சாப்டர் 2’ – பரவாயில்லை!