ஏ கே ஆர் ஃபியூச்சர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ஐயப்பன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம், ஐய்யப்பன்.
தம்பதியான நாயகன் விஜய் பிரசாத், நாயகியான காயத்ரி ரெமாவும் அடர்ந்த காடுகளுக்கு நடுவே உள்ள கிராமத்தில் வசித்து வருபவர்கள். நாயகன் விஜய் பிரசாத்துக்கு, காடு மற்றும் மலை முகடுகளில் கிடைக்கும் தேன் மட்டுமே வாழ்வாதாரம். இவர், காடுகளையும், காட்டு விலங்குகளையும் சக நண்பர்களாக பாவித்து வருகிறார். குழந்தை இல்லாத, இந்த தம்பதியினரை, அந்த கிராமத்து மக்கள் அவமதித்து வருகின்றனர்.
நாயகன் விஜய் பிரசாத், வழக்கம்போல் காட்டுக்கு தேன் எடுக்கச் செல்லும்போது, அழதபடி, ஒரு ஆண் பச்சிளம் குழந்தை, ஆள் அரவமற்ற காட்டுக்குள் கிடக்கிறது. குழந்தையின் பெற்றோரைத் தேடியும் கிடைக்காத நிலையில், அந்தக் குழந்தையை அவர்களே வளர்க்க ஆரம்பித்து விடுகின்றனர்.
காட்டு விலங்குகளை வேட்டையாடி, பணம் சம்பாதிக்கும் வில்லனுக்கு தடையாக குறுக்கே நிற்கிறார், நாயகன் விஜய் பிரசாத். இதனால் வில்லனுக்கும் அவருக்கும் பகை ஏற்படுகிறது. வில்லனின் சூழ்ச்சியால், கிராமத்து மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பும், விஜய் பிரசாத் மேல் விழுகிறது. இந்நிலையில், கிராமத்துக்குள் புலி ஒன்று வந்து விடுகிறது. வனத்துறையினர் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கின்றனர். இதனால், வருடந்தோறும் மாலை அணிந்து ஐய்யப்பன் கோவிலுக்கு செல்பவர்களால் செல்ல முடியாமல் போகிறது. இதற்கு காரணமும் விஜய் பிரசாத் தான், என எண்ணி, அவர் மீது பழி சுமத்துகின்றனர். தான் குற்றமற்றவன் என நிரூபிக்க, ஸ்வாமி ஐய்யப்பனை நோக்கி வேண்டுகிறான். இதன் பிறகு என்ன, நடந்தது? என்பதே, ‘ரூபன்’ படத்தின் கமர்ஷியல் கலந்த ஆன்மீக கதை.
நாயகனாக நடித்திருக்கும் விஜய் பிரசாத், ஆக்ஷன் காட்சிகளில், சிறப்பாக நடித்திருக்கிறார். அவரது தோற்றமும், உடல்வாகும் பெரிதும் உதவியிருக்கிறது. க்ளைமாக்ஸுக்கு முன்னர் வரும் பாடலில், உணர்வு பூர்வமாக நடித்திருக்கிறார். ஆனால், எமோஷனல் காட்சிகளில் பெரிதாக பரிமளிக்கவில்லை. மற்றபடி, குறை சொல்ல முடியாத அளவிற்கு நடித்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் காயத்ரி ரெமா, அவர் நடிப்பதற்கு பெரிதாக காட்சிகள் எதுவும் இல்லை. கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நடித்திருக்கிறார்.
சார்லியின் கதாபாத்திரம், கதைக்கு தேவையில்லாததாக இருந்தாலும், அவருக்கு கொடுக்கப்பட்ட காட்சிகளில், தனது அனுபவமான நடிப்பின் மூலம், ரசிகர்களை கவர்ந்து விடுகிறார்.
படத்தின், மிகப்பெரிய பலமாக இருப்பது ஒளிப்பதிவு தான். ஒளிப்பதிவாளர் ராஜீவ் ராஜேந்திரனின் ஒளிப்பதிவில் காட்சிகள் துல்லியமாகவும், பலவித கோணங்களில், காடுகளின் அழகையும் நேர்த்தியாக காட்சிப் படுத்தியிருக்கிறார்.
அரவிந்த் பாபுவின் இசையில், க்ளைமாக்ஸ் பாடல் புல்லரிக்க வைத்து, பக்தி பரவசத்தை ஏற்படுத்துகிறது. பின்னணி இசை, காட்சிகளின் நகர்வுக்கு உதவி புரிகிறது. கிராபிக்ஸ் காட்சிகளும் அவ்வளவு மோசமில்லை.! என்ற அளவில் இருக்கிறது.
இயக்குநர் ஐயப்பன், கமர்ஷியல் கலந்த ஒரு பக்திப் படத்தினை கொடுத்துள்ளார். வழக்கமான பல காட்சிகளைத் தவிர்த்து, திரைக்கதையில் விறிவிறுப்பினை இன்னும் கூட்டியிருந்தால், சிறப்பாக இருந்திருக்கும்.
‘ரூபன்’ படத்தின் கடைசி 15 நிமிடங்கள், ‘முரட்டு’ ஐயப்ப பக்தர்களுக்கானது. குடும்பத்துடன் பார்க்கலாம்.
‘ரூபன்’ – கார்த்திகையில் வந்திருந்தால், சரண கோஷம் விண்ணைப் பிளந்திருக்கும்!