‘சிறகன்’ – விமர்சனம்!

‘MAD ஃபிலிம்ஸ்’  நிறுவனம் சார்பில், துர்கா பேட்ரிக் தயாரித்துள்ள படம், சிறகன்’. இதில், கஜராஜ், ஜீவா ரவி, அனந்த் நாக், பௌசி ஹிதாயா, வினோத் GD, ஹர்ஷிதா ராம், பாலாஜி, மாலிக், பூவேந்தன், ரயில் ரவி, சானு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி, எடிட்டிங் செய்து இயக்கியிருக்கிறார், S .வெங்கடேஷ்வராஜ்.  இவர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் MF. Tech – மாஸ்டர் இன் ஃபிலிம் அண்ட் எலக்ட்ரானிக் மீடியாத் துறையில் பட்டம் பெற்றவராம்.

‘சிறகன்’ படத்தின் மூலமாக, கத்துக்கிட்ட மொத்த வித்தையையும், ஒரே படத்தில் கொடுக்க முயற்சித்துள்ளார். அதாவது, பட்டாம்பூச்சி இனம், கயாஸ் தியரி (Chaos theory), ஹைபர் லிங்க் நான் லீனியர், ஒரே இரவில் நடக்கும் க்ரைம் த்ரில்லர், 11 கோணங்களில் திரைக்கதை, அனிமேஷன் என, கதைக்கு தேவைப்படாத விஷயங்களை திணித்து ‘சிறகன்’ திரைக்கதையினை உருவாக்கியிருக்கிறார், இயக்குநர், S .வெங்கடேஷ்வராஜ்.  அது ரசிக்கும்படி இருக்கிறதா? பார்க்கலாம்..

சிறகன் என்பது பட்டாம்பூச்சியினத்தின், ஒரு வகை பெயரினை குறிக்கும். பெரும்பாலும் சிறகன் என மட்டுமே அழைக்கப்படுவதில்லை. உதாரணமாக புதர் சிறகன், பனைச் சிறகன் என அழைக்கப்படும். மேலும், கத்திவால் அழகி, ஐம்பட்டை கத்திவால் அழகி,மரகத அழகி என பல்லாயிரக்கணக்கான பட்டாம்பூச்சியினங்கள் இந்தியாவில் உண்டு. இதில் ‘பனைச் சிறகன்’ பட்டாம்பூச்சியை, அதன் மேல் காணப்படும் நிறங்களைக் கொண்டு, தன்னுடைய கதையுடன் பொருத்தியிருக்கிறார். இதன் மேல் பக்கம் கருப்பு இறக்கையின் ஓரத்தில் வெள்ளைக்கோடுகள் இருக்கும், கீழ்புறத்தில் காக்கி கலரில் இருக்கும். அதாவது, கருப்பு மற்றும் வெள்ளை மனதினை கொண்ட மனிதர்கள். அவர்களுக்குள் நிகழும் சம்பவம், அதைத் தொடர்ந்து நடைபெறும் போலீஸின் புலன் விசாரணை. இதுவே சிறகன்.

அரசியல் பெரும்புள்ளி ஜீவா ரவி, தனது மகனை காணாமல் போலீஸாரிடம், கெடுபிடி செய்து தேடச்சொல்லி நிர்பந்திக்கிறார். அதே இரவு நேரம், தனியாக இருக்கும் ஒரு இளம் பெண் பத்திரிக்கையாளர், கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். அதைத் தொடர்ந்து, அரசு வழக்கறிஞர், கஜராஜை ஒரு கும்பல் கொலை செய்ய துரத்தி வருகிறது. அதே சமயத்தில், அரசியல் பெரும்புள்ளி ஜீவா ரவியை கொலை செய்ய சிலர் முயற்சிக்கின்றனர். இந்த சம்பவங்களைத் தொடர்ந்து போலீஸ் புலன் விசாரணை செய்கிறது. நடந்தது, என்ன? என்பதே, சிறகன் படத்தின் குழப்பமான திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!

நடிப்பினை பொறுத்தவரை, பெண் ஆசிரியர் ஹர்ஷிதா ராமை மிரட்டும், மாணவனாக நடித்திருக்கும் பாலாஜி, கதாபாத்திரத்திற்கு ஏற்ற தோற்றமாக இருக்கிறார். அந்த மாணவனின் கன்னத்தில் பளார்… பளார்.., விடும், பெண் ஆசிரியராக பௌசி ஹிதாயா. இருவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.

மற்றபடி, வழக்கறிஞராக நடித்திருக்கும் கஜராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர்  வினோத் ஜி டி, அரசியல்வாதி ஜீவா ரவி, சஸ்பென்ஸான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆனந்த் நாக், இன்ஸ்பெகடர் மாலிக், சானு, ஹரி சானக்கியா, ஆனந்த் வெங்கட் உள்ளிட்டோரும், க்ளைமாக்ஸில் டிவிஸ்ட்டு கொடுக்கும், நடிகர் பூவேந்தன் ஆகியோரும் குறிப்பிடும்படி நடித்துள்ளனர். இவர்களிடமிருந்து இன்னும் சிறந்த நடிப்பினை வாங்கத் தவறிவிட்டார், இயக்குநர் S .வெங்கடேஷ்வராஜ்.

சேட்டை சிக்கந்தரின் ஒளிப்பதிவும், K. ராம் கணேஷின் இசையும் படத்திற்கு பெரிதும் உதவவில்லை!

கதாபாத்திர வடிவமைப்பில் இருக்கும் நேர்த்தியின்மையும், திரைக்கதையில் ஏற்பட்ட குழப்பத்தினையும் தவிர்த்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். தவற விட்டுள்ளனர்.

சிறகன் – குடம்பி!