‘ரூம் பாய்’ – விமர்சனம்!

‘ஏசிஎம் சினிமா’ சார்பில், சூரியகலா சந்திரமூர்த்தி தயாரித்துள்ள ‘ரூம் பாய்’ திரைப்படத்தை, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் ஜெகன் ராயன். இதில் நிகில், ஹர்ஷா, இமான் அண்ணாச்சி ,பிர்லா போஸ், காத்து கருப்பு கலை, கற்பகம், கவிதா விஜயன், சமீர் ,அருண் ராஜா, பிரபாகர், கேரளா பெஹமின், நிதிமரோலி மற்றும் பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு : சி பாரதி ராஜன், இசை: வேலன் சகாதேவன்.

சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து வெளியே வரும் நாயகன் C.நிகில், ஏலகிரியில் உள்ள ஒரு ஓட்டலில் ரூம் பாயாக வேலைக்குச் சேருகிறார். வேலையாட்களிடம் கடுமையாக நடந்து கொள்ளும் மேனேஜர், அந்த ஓட்டலில் சில சட்டவிரோதமான செயல்களை செய்து வருகிறார். ஒரு நாள் சிறுவர் கூர் நோக்கு இல்லத்தின் வார்டன் மாயமாகிறார். போலீசார் நிகில் மீது சந்தேகப்படுகின்றனர். இதற்கிடையே ஓட்டலின் மேனேஜர் கொடூரமாக கொலை செய்யப்படுவதோடு, அந்த ஓட்டலின் கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்குகளும் காணாமல் போகிறது. இந்தக் கொலையை நிகில் செய்ததாக போலீசாரும், மேனேஜரின் ஆட்களும் அவரைத் தேடுகின்றனர். அதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான், ரூம் பாய்.

அறிமுக நாயகனாக ‘சஞ்சய்’ கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார், சி.நிகில்.  காதல், அடிதடி சென்டிமென்ட் என அனைத்திலும் ஆர்வம் காட்டி நடித்திருக்கிறார். போதிய பயிற்சி இருந்தால் சிறப்பாக வருவார். சில இடங்களில் நடிக்கத் திணறியிருக்கிறார். நாயகியாக ஹர்ஷா நடித்திருக்கிறார். திரைக்கதையில் எந்த பங்களிப்பும் இல்லாமல் வந்து போகிறார். நிகிலோடு இடம்பெறும் டூயட் பாடலில் ரசிக்கும்படி நடித்திருக்கிறார்.

இமான் அண்ணாச்சியின் காமெடி பெரிதாக ஈர்க்கவில்லை. நாயகனின் நண்பனாக காத்து கருப்பு கலை, கவனிக்கும்படி நடித்திருக்கிறார். இன்ஸ்டா புகழ் கற்பகம், கவிதா விஜயன், சமீர், சிட்டி ராஜா, அருண்ராஜா, பிரபாகர், கேரளா பெஹமின் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். மும்பை மாடல் அழகி நிதி மரோலி ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டு ரசிகர்களை மகிழ்விக்கிறார்.

ஏலகிரியின் சுற்றுப்புறங்களை ரசிக்கும்படி ஒளிப்பதிவு செய்திருக்கிறார், ஒளிப்பதிவாளர் சி.பாரதி ராஜன். வேலன் சகாதேவனின் இசையில், பாடல்கள் கேட்கும்படி இருக்கிறது.

காதல், குடும்ப சென்டிமென்ட், பிளாக் மெயில், கள்ளக்காதல் என அனைத்தையும் ஒருங்கிணைத்து சின்ன பட்ஜெட்டில் ஒரு கமர்ஷியல் படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார், இயக்குநர் ஜெகன் ராயன். ஆனால், அது ஒர்க்கவுட் ஆகவில்லை.

மொத்தத்தில், ‘ரூம் பாய்’ சுமாரான படம்!